எம்.எஸ்.தீன் -
அரசியல் கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும் பொறுப்பற்ற குறுகிய சிந்தனைகளினாலும், மோசடிகளினாலும், வீண்விரயங்களினாலுமே நாடு இன்றைய வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. ஆயினும், அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்களை சுயமதிப்பீடு செய்து திருந்திக் கொள்வதற்கும், அடுத்த தலைமுறையை வாழவைப்பதற்கு இடங்கொடுக்காதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சுமார் 75 வருடங்களாக மக்களை ஏமாற்றிய அவலத்தையே தற்போதும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் தேர்தல் காலங்களில் மிக மோசமாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும், தேர்தலின் பின்னர் அவர்கள் நண்பர்களாகவே இருக்கின்றார்கள். ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த ஊழல், மோசடிகளுக்கு முஸ்லிம் கட்சிகளும்;, அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர். சட்ட மூலங்களுக்கு கையுயர்த்தி பெரும் செல்வங்களை சேர்த்துள்ளனர். ஊரின் அபிவிருத்திதான் முக்கியமென்று புதிதாக பாராளுமன்றம் சென்றவர் கூட ஊரை மறந்துள்ளார். தன்கடனையும் மறந்துள்ளார்.
உண்டியல் வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி மக்கள் ஆதரவினால் பல கோடிஸ்வரர்களை உற்பத்தி செய்துள்ளது. அதே வேளை. கட்சியின் வளர்ச்சிக்கு உண்டியல் தூக்கியவர்களும், நிதி உதவி செய்தவர்களும் புறக்கணிப்பட்டுள்ளார்கள். கொள்கையில்லாதவர்களிடம் முஸ்லிம்களின் அரசியல் மாட்டியுள்ளது. அதனால்தான், பல கட்சிகளும், தலைவர்களும் உருவாகியுள்ளார்கள். நேர்மையாக செயற்படுகின்ற செயற்பாட்டாளர்களை முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை பிடிப்பதில்லை.
அதனால், முஸ்லிம் கட்சிகள் எதிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலும் பொய்யர்களும், ஏமாற்றுக்காரர்களுமே முக்கிய பதவிகளில் உள்ளார்கள். சமூகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பல உடைவுகளைக் கண்டுள்ளது. அவற்றின் பின்னால் நேர்மைகளைக் காண முடியவில்லை. தலைமைத்துவத்திற்காகவும், அமைச்சர் பதவிக்காகவும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காகவும், வேறு சுயலாபங்களுக்காகவுமே பல கட்சிகள் முஸ்லிம்களிடையே தோன்றியுள்ளன.
தற்போது முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களே தலைவர்களுக்கு பெரும்தலையிடியாக மாறியுள்ளார்கள். தலைவர்கள் கடந்த காலங்களில் தங்களின் சுயநலத்திற்காக நேர்மையீனமாக நடந்து பல கதைகள் உள்ளன. அவற்றின் எதிர்வினையையே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸை மேலும் பிளவுபடுத்தவும், அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிளவுபடுத்தவும் அக்;கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரினவாதிகளின் திட்டங்களுக்கு ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆடுவதற்கு விலை போவதில் முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையில் சாதனை படைத்துள்ளார்கள்.
இத்தகைய சாதனையாளர்கள் தமது பிரதேசத்திற்கு முன்புபோல் வருவதில்லை. கொழும்பிலேயே தங்கியுள்ளார்கள். அவர்கள் ஊருக்கு வருவதும் போவதும் மக்களுக்கு பெரிதும் தெரிவதில்லை. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையானது இரகசியமாகவே இருக்கின்றன. கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊருக்கு வருகின்ற போதெல்லாம் பல விழாக்கள் நடைபெறும். தற்போது விழாக்களுக்கு அழைத்தாலும் மறுக்கும் மனநிலையிலேயே முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.
முஸ்லிம் கட்சிளின் 07 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சியாளர்களுடன் நெருக்கத்தை பேணிகாலம் முதல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வரை ஆட்;சியாளர்களை புகழ்ந்து கொண்டிருந்தாhகள். தங்களின் தப்புத்தாளங்களை மறைப்பதற்கு சமூகத்திற்காகவே ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டோம் என்று தமது பழைய பல்லவியையே தொடங்கினார்கள்.
முஸ்லிம்களும் அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரை தமது மக்கள் பிரதிநிதிகளின் தப்புத்தாளங்களையும், வழிதவறிய பாதைகளையும் விரைவாக மறந்து போகும் ஒரு வித நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். சமூகம் தேய்வடைந்து செல்லுகின்றது.
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களில் நசீர் அஹமட் சுற்றாடல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் சிலர் அமைச்சர் கனவில் உள்ளனர். அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்காக 19வது திருத்தச் சட்டத்தில் உள்ளவற்றை 21வது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாகக் கொண்டுவருவற்குரிய ஆவணங்கள் தயார்நிலையில் உள்ளன. ஆயினும், 19வது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள பல நல்லவிடயங்கள் 21வது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்படவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் 21வது திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்படும் போது முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்ற வினா உள்ளது. ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுக்கு தாம் வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் அவர்கள் இன்றுவரை ஆட்சியாளர்களுடன் உள்ளார்கள். அதனால் 21வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்காளிக்காது போனாலும், ஆதரவாகவும் வாக்களிக்காது, அன்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ளாததொரு நிலைப்பாட்டையே மேற்கொள்வர்.
மேலும், சீனாவுக்கான இலங்கை தூதுவர் 26ஆம் திகதி கல்முனைக்கு விஜயம் செய்திருந்தார். அவர் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உலர் உணவும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார். சீனத்தூதுவர் கல்முனைக்கு விஜயம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை திரைமறைவில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டதாகவும் இன்றைய நிகழ்வில் உரையாற்றியவர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் சீனத்தூதுவரை வரவேற்பதற்கு ஹரீஸ் சமூகமளிக்கவில்லை. கல்முனை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப்தான் சீனத்தூதுவரை வரவேற்றார்.
இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் தப்புத்தாளங்கள், அவர்களின் வழிதவறிய பாதைகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆட்சியாளர்கள் தங்களின் தப்புக்களினால் நாட்டை சீரழித்தது போன்று முஸ்லிம் கட்சிகளும், மக்கள் பிரதிகளும் தப்புக்கு மேல் தப்புக்களைச் செய்து முஸ்லிம்களின் அரசியல் பலத்தை சிதைத்துள்ளார்கள்.
இதனை முஸ்லிம்கள் உணராத வரை கடந்த காலங்களில் தப்புக்களை செய்தவர்களே தலைவாகளாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அது முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கே சாபக்கேடாக அமைப்போகின்றன.
தற்போதைய படிப்பினைகளை முஸ்லிம்கள் தேர்தல் காலங்களில் மறந்து போகாது தமது ஆணைகளை முறையாக வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அது காலத்தின் கட்டாயமும் கூட.
வீரகேசரிக் கட்டுரை (29.05.2022)
0 comments:
Post a Comment