• Latest News

    Nov 22, 2021

    வரவு செலவு திட்டமும் கல்முனையும்

    எம்.எஸ்.சஹாப்தீன் -

    அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று அம்பாரை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் வைத்தியர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் ஊடகவியாளர்கள் மாநாடொன்றை நடத்தி தெரிவித்துள்ளார்.

    இதன் போது இன்னும் சில அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டையும், அதில் கலந்து கொண்டவர்களையும், அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் ஆராயும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் அரசியல் தேவைக்காகவும், முடிவுக்காகவும் நடத்தப்பட்ட ஒரு ஊடக சந்திப்பாகவே உள்ளது.

    முஸ்லிம்களின் 20 நாள் சிசு உட்பட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கொவிட்டை காரணம் காட்டி எரித்த போது வாய்திறக்காதவர்கள், அதற்காக ஊடக சந்திப்புக்களை செய்யாதவர்கள், முஸ்லிம் காணிகள் பறிப்பட்ட போது மௌனமாக இருந்தவர்கள், அளுத்கம முதல் அம்பாரை வரை முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது வாய்பொத்தி மௌனித்துக் கொண்டவர்கள், அம்பாரையில் முஸ்லிம்களின் காணிகளை அடாத்தாக பறித்த போது எதனையும் கூறுவதற்கு வக்கற்று இருந்தவர்கள், பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களையும், குர்ஆனையும், அல்லாஹ்வையும் வஞ்சித்து பேசிய போது சமூகப்பற்றை வெளிப்படுத்தாதவர்கள் இன்று வரவு செலவு திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைப்பதில் காணப்படும் சமூகப்பற்று என்னவென்று ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்களை முன் வைத்த வைத்தியரையும், கலந்து கொண்டு தலையை குனிந்து கொண்டு இருந்தவர்களையும் கேட்கின்றோம்.

    கல்முனையை பாதுகாக்க வேண்டுமென்று ஹரீஸ் உட்பட இன்னும் சிலரும் ஒவ்வொரு தேர்தல் கால கட்டத்திலும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அதற்கு தீர்வு இன்னுமில்லை. பிச்சைக்காரன் புண்னைப் போலவே இருக்கின்றது.

    கல்முனை தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவினை தரம் உயர்த்த வேண்டுமென்று தமிழர்கள் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும் தொடர்ச்சியாக ஆளுங் கட்சியில் உள்ள போதிலும் அதற்கு தீர்வுகளை காணவில்லை. தமிழர்களின் கோரிக்கைகளை தொடர்ச்சியாக நிராகரித்துக் கொண்டிருப்பது தீர்வல்ல.

    தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது ஒரு தீர்வு. அடுத்தது அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்து, கல்முனை உப பிரதேச செயலகத்தை முற்றாக இல்லாமல் செய்வது அடுத்த தீர்வு.  இந்த இரண்டையும் செய்யாது. பிச்சைக்காரன் புண் போல அப்படியே பிரச்சினையை வைத்துக் கொண்டு காலத்திற்கு காலம் வரும் தேர்தல்களில் பேசு பொருளாக்கிக் கொண்டு வெற்றி பெற்றுக் கொண்டிருப்பது மிகவும் கேவலமான அரசியலாகும்.
    கல்முனை தொகுதியில் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினர் இருந்துள்ளார். எல்லாக் காலங்களிலும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாகவே இருந்து வந்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ். அவர் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராகவும் இருந்தார். ஆனால், எந்தவொரு மைதானத்தைக் கூட அபிவிருத்தி செய்யவில்லை. கல்முனையில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்கப்படும் என்றும் சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. மாறாக கல்முனையில் இருந்த தலைமைக்காரியாலயங்கள் அம்பாரைக்கும், அக்கரைப்பற்றுக்கும் மாற்றப்பட்டன. இவ்வாறு தூக்கத்திலும், நொறுக்குத் தீனிலும் காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கல்முனையின் பிரச்சினையை தீர்க்கமாட்டார்.

    மேலும், பள்ளிவாசல்களின் சம்மேளனத் தலைவர் அஸீஸ் அம்பாரையில் முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைக் குறிப்பிடாது தனியே கல்முனையை மாத்திரம் பாதுகாக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்பது அவரது பொறுப்பு வாய்ந்த பதவிக்கு அழகல்ல. மேலும், வரவு செலவு திட்டத்தில் உள்ள சமூக நலத் திட்டங்கள் பற்றியும், முஸ்லிம்கள் அடையும் நன்மைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும். அதனைச் செய்யாது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் தேவைக்காக ஊடகவியலாளர்களை கூட்டி கதை சொல்லியுள்ளார். இந்தக் கதை ஹரீஸிற்கு தேவையானதாகும்.

    கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுத்தாலும், கல்முனை தொகுதியில் உள்ள முக்கிய அமைப்புக்களும், அம்பாரை மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனத் தலைவரும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அதனால்தான் நான் ஆதரவாக வாக்களித்தேன் என்று சொல்லுவதற்காக ஆடும் தந்திரமே அஸிஸின் தலைமையில் நடந்த ஊடக சந்திப்பாகும்.

    மேலும், இந்த வரவு செலவு திட்டத்திற்கு மு.கா ஆதரவு வழங்கினால் கல்முனை முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா என்று கேட்கின்றோம். அதற்குரிய உத்தரவாத்தை ஹரீPனால் வழங்க முடியுமா? 

    20வது திருத்தச் சட்டத்தை முஸ்லிம் சமூகத்திற்காகவே ஆதரித்தோம் என்று சொன்னார்கள். அதற்கு ஆதரவு வழங்கியதன் பின்னரே முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. முஸ்லிம்களின் தனியார் சட்டம் தேவையற்றது என்றும், அதனை மாற்றியமைப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம்களின் மனங்களை பல தடவைகள் நோகடித்த ஞானசார தேரர் தலைமையில் செயலணியும் உள்ளது.

    இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மதவிழும்பியங்கள், கலாசாரம், தனியார் சட்டம், காணிகளைப் பற்றி எதுவும் சொல்லாது தனியே கல்முனையை மாத்திரம் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்வது ஒரு தனி நபரின் அரசியல் இருப்புக்காகவன்றி வேறு எதுவுமில்லை.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வரவு செலவு திட்டமும் கல்முனையும் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top