• Latest News

  Nov 21, 2021

  திருடன் - போலீஸ்’: அரசாங்கத்தின் சுவாரசியமான இரட்டை வேடம்!

  Mansoor Mohamed -

   
  பொதுவாக நல்ல காரியங்களை பகிரங்கமாகவும், கெட்ட காரியங்களை இரகசியமாகவும் செய்வது மனித இயல்பு. ஆனால், சுனில் பெரேரா என்ற ஒப்பற்ற கலைஞன் தனது பிரபல்யமான பாடலில் சொன்னது போல ‘ஸ்ரீலங்காவில் எல்லாமே தலைகீழ்.’ அதிலும் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சொல்லவே வேண்டாம்.
  இனங்களுக்கிடையிலான நல்லுறவு, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகளை ஜனாதிபதி தொடக்கம் SLPP இன் கீழ் மட்டத் தலைவர்கள் வரையில் அனைவரும் மிகக் கவனமாக தவிர்த்து வருகிறார்கள். 
   
  நாடு பெரும் இக்கட்டு நிலை ஒன்றுக்குள் தள்ளப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டிய தேவை குறித்து அரசாங்கத் தரப்பில் யாரும் வாய் தவறியும் கூட பேசுவதாக தெரியவில்லை.
  ‘இந்த அரசாங்கம் சிங்கள பௌத்தர்களின் நலன்களை மட்டுமே உச்ச மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லும்’ என்ற விதத்திலான ஓர் எண்ணத்தை தமது முதன்மை வாக்கு வங்கியான சாதாரண சிங்கள மக்களுக்கு மத்தியில் அவர்கள் வேரூன்றச் செய்திருக்கிறார்கள். அரசாங்க ஊடகங்களினதும், ஒரு சில தனியார் ஊடகங்களினதும் புண்ணியத்தால் அந்தப் பெருமித உணர்வு கட்டமைப்பட்பட்டிருக்கின்றது.
  இதனைப் பிரதிபலித்துக் காட்டும் விதத்தில் முக்கிய தேசிய நிகழ்வுகளை (புராதன சிங்கள நாகரிகத்தின் மையமான) அநுராதபுரத்தில் நடத்துதல், அரச தலைவர்கள் அடிக்கடி பிக்குகளுடன் நடத்தும் சந்திப்புக்கள், பௌத்த மக்களின் ஒரு தரப்பினரால் தமது ‘நம்பிக்கை நட்சத்திரமாக’ கொண்டாடப்பட்டு வரும் கலகொடஅத்தே ஞானசார தேரர் போன்றவர்களுக்கு (சிறுபான்மை சமூகங்களை மிரட்டி, பழிவாங்குவதற்கு வாய்ப்பளிக்கக் கூடிய பணிப்பாணையுடன்) உயர் பதவிகளை வழங்குதல் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு ஊடாக அத்தகையவர்களை சிங்களத் தேசத்தின் பெரும் ஆளுமைகளாக முன்னிலைப்படுத்துதல் போன்ற குறியீட்டுச் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
  ஒரு விதத்தில் அவற்றை தவிர்க்க முடியாது. ஏனென்றால், அவர்கள் ஆட்சிக்கு வந்த வழி அப்படி. அவ்விதம் தம்மை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களை சந்தோசப்படுத்துவது அவர்களுடைய கடமை.
  நல்லாட்சி அரசாங்கத்தின் போது (2015 - 2019) தேசிய NGO கள் மற்றும் சர்வதேச NGO கள் என்பவற்றின் கை ஓங்கியிருந்ததுடன், குறிப்பாக அவற்றின் செல்வாக்கு காரணமாக காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம் (ONUR) போன்ற முக்கியமான அமைப்புக்கள் பாராளுமன்றச் சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டிருந்தன. ராஜபக்ச அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பொழுது அரசாங்கத்தின் அங்கங்களாக இருந்து வந்த அந்த மூன்று நிறுவனங்களையும் கடுமையாக உதாசீனம் செய்ததுடன், அவை வெறுமனே தேசத் துரோக NGO களின் அஜண்டாக்கள் எனக் கருதி, அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருந்தது.
  ஆனால், அண்மைக் காலத்தில் அந்த மூன்று நிறுவனங்களின் செயற்பாடுகளும் மீண்டும் ஒரு முறை வேகமடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. எனினும், அது குறித்து அரசாங்கம் அதிகளவுக்கு பிரச்சாரங்களை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. அதற்கான ஓர் உதாரணம் கிளிநொச்சியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட OMP அலுவலகத்தின் கிளை. அந்தப் பிரதேசத்தில் காணாமற் போன ஆட்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்து, பரப்புரைகளை முன்னெடுத்து வரும் அமைப்புக்களுக்கும் கூட அந்த விடயம் பின்னரேயே தெரிய வந்தது. அதே போல, இழப்பீடுகளுக்கான அலுவலகம் கடந்த சில மாதங்களின் போது முனைப்பாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்திருப்பதுடன், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களினால் இழப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கும் தொடர்ச்சியாக இழப்பீடுகளை வழங்கி வந்துள்ளது.
  அதிகமும் பிரச்சாரம் இல்லாமல் மற்றொரு சுவாரசியமும் அரங்கேறியிருக்கிறது. அரசின் ஓர் அங்கமான ‘ONUR’ (தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம்) கடந்த மாதம் 30, 31 ஆகிய திகதிகளில் (இணையவழி ஊடாக) நடத்திய அதன் முதலாவது வருடாந்த மாநாடு, ராஜபக்ச அரசாங்கம் பொது வெளியில் பேசத் தயங்கும் பல முக்கியமான தலைப்புக்களை கவனத்தில் எடுத்திருந்தது.
  “நவீன சமுதாயத்தில் நிலையான சமாதானம், பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்புவதன் மூலம் புரிந்துணர்வுக்கு ஊடாக பிணக்குகளை தீர்த்து வைத்தல்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த இரண்டு நாள் மாநாட்டில் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பரந்த தரப்பினர் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இதில் அடக்கம். இலங்கையின் முன்னணி NGO செயற்பாட்டாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்று (இதுவரையில் அரசாங்கம் கடும் ஒவ்வாமையைக் கொண்டிருந்த) பல தலைப்புக்களின் கீழ் தமது அவதானிப்புக்களை முன்வைத்திருந்தார்கள்.
  ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் ஆசிச் செய்திகளுடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இந்த மாநாட்டில் தேசிய சமாதானப் பேரவையையும் உள்ளடக்கிய விதத்தில் பல முன்னணி தேசிய NGO கள் அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்தன.
  சமாதானத்தைக் கட்டியெழுப்புவதிலும், பல்வேறு இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் போசித்து வளர்ப்பதிலும் NGO கள் ஏற்கனவே மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வர வேண்டுமென இம் மாநாட்டின் போது அரசாங்கத்தின் சார்பில் அவற்றிடம் வலுவான ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
  இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கிட்டத்தட்ட 60 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பெரும்பாலானவை (இலங்கை போன்ற பல்லின, பல் சமய, பல் கலாசார நாடுகளில்) இன ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்ற தலைப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தியிருந்தன. கட்டுரைகள் முன்வைக்கப்பட்டிருந்த ஒரு சில தலைப்புக்கள் வருமாறு:
  - சமய பன்மைத்துவம் மற்றும் சமாதான சகவாழ்வு: திருக்குர்ஆனின் கண்ணோட்டம் (இனாஸ் இல்யாஸ்)
  - இஸ்லாமோபோபியாவை ஒழிப்பதற்கென ஊடகங்களுக்கும், இஸ்லாமிய சித்தாந்தத்திற்கும் இடையில் ஒரு நல்லிணக்கத்தை எடுத்து வருதல் (நஸ்மி ஜெஹான் மற்றும் நுஸ்ரத் நிசாத்)
  - சமூகங்களுக்கிடையில் சமாதானத்தை மேம்படுத்துவதில் சமயக் கல்வி நிறுவனங்களின் வகிபாகம்: இலங்கை நளீமியா இஸ்லாமிய கற்கை நிலையத்தை முன்வைத்து (எம் பௌஸ், எம் ஸக்கி, என் எம் ரிசாட், எஸ் எல் எம் ஹசன்)
  - சமூகங்களுக்கு இடையில் பிணைப்புக்களை உருவாக்குவதன் மூலம் இஸ்லாமோபோபியாவை தகர்த்தெறிதல் (C L C M பட்டபெந்திகே)
  “NGO கள் தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்டு வரும் ஒரு முக்கியமான மாற்றத்தை இது குறிக்கின்றது” என்கிறார் தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றப் பணிப்பாளரும், நாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா. குறிப்பிடத்தக்க மற்றொரு நகர்வு இதுவரை காலமும் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த தேசிய NGO செயலகம் இப்பொழுது வெளி விவகார அமைச்சின் கீழ் எடுத்து வரப்பட்டிருப்பதாகும்.
  (ஒரு சில சிங்கள ஊடகங்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மாறான விதத்தில்) அமைச்சர் அலி சப்ரியின் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்தமை, ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் அதிகாரங்களைப் பறித்து, அதனை வெறுமனே ஒரு டம்மி அமைப்பாக ஆக்கியமை, இங்கையின் NGO துறையின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவரை வட மாகாண ஆளுநராக நியமனம் செய்தமை போன்ற ஜனாதிபதியின் ஒரு சில அண்மைக் கால முடிவுகள் (பலரின் கவனத்தை ஈர்க்கத் தவறியிருந்த போதிலும்) அரசாங்கத்தின் செல்நெறியில் படிப்படியாக ஒரு நகர்வு ஏற்பட்டு வருவதனையே காட்டுகின்றன.
  அநேகமாக, 2022 ஆம் ஆண்டின் போது அரசாங்கம் மேலும் பல சாதகமான நகர்வுகளை முன்னெடுக்க முடியும் என்றே தோன்றுகிறது. அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் தீவிர இனவாதிகளின், மதவாதிகளின் செல்வாக்கு சரிந்து வரும் ஒரு சூழ்நிலையில் - தீவிர இனவாதிகள் இனிமேலும் இலங்கையின் மைய நீரோட்ட அரசியலில் ஒரு நிர்ணயகரமான சக்தியாக இருந்து வர முடியாது என பரவலாக நம்பப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையில் - இந்த மாற்றங்கள இடம்பெற்று வருகின்றன என்பதனையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: திருடன் - போலீஸ்’: அரசாங்கத்தின் சுவாரசியமான இரட்டை வேடம்! Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top