• Latest News

    Nov 23, 2021

    மாற்றியமைக்கப்பட வேண்டிய ரிஷாத்தின் அரசியல் பாதை

     எம்.எஸ்.தீன் -
    அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் சுமார் 06 மாதங்கள் சிறையில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணங்களிலும் தமது கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றார். ஆதரவாளர்களுக்கும் தமது விடுதலைக்காக பிராத்தனை செய்தவர்களுக்கும் நன்றி கூறுவதற்காகவே விஜயம் செய்வதாக தெரிவிக்கப்பட்டாலும் ரிஷாத் பதியூதீனின் மக்கள் சந்திப்பானது அரசியல் நோக்கத்தை கொண்டது என்பது சிந்தனைக்குரியதாகும்.
    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தோல்வி அடைந்தது. அத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் றிசாட் பதியூதீன் உட்பட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. ஆயினும்  அக்கட்சியின் 03 பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் றிசாட் பதியூதீனின் தீர்மானங்களுக்கும், கட்சியின் முடிவுக்கு மாற்றமாகவுமே தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


    அவர்கள் அரசாங்கத்திற்கு முழு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இதனால் றிசாட் பதியூதீன் தனித்த நின்று தமது கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்த வரை அதனை பிரமுகர்களின் கட்சி என்றதொரு கணிப்பு அரசியல் ஆய்வாளர்கள் பலரிடம் காணப்படுகின்றது.

    மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மிகப் பெரிய பலம் ரிஷாத்; பதியூதீன் மாத்திரமேயாகும். அக்கட்சிக்கு பிரதேச ரீதியாக இறுக்கமான கட்டமைப்பு இருப்பதாக தெரியவில்லை. இதனால்தான் றிசாட் பதியூதீன் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் கட்சியின் செயற்பாடுகள் பூச்சிய நிலையில் இருந்தது என்பது வெளிப்படையானது.

     அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை வளர்ப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் அரசாங்கத்தை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற வேண்டும். தஙடகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று செயற்பட்டார்கள். தற்போதும் அவ்வாறே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

    தமது கட்சித் தலைவரின் விடுதலைக்காக எவ்வித முயற்சிகளையும் எடுக்காத அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  றிசாட் பதியூதீன் பிணையில் விடுதலை செய்யப்படமாட்டார் என்றே கருதினர். இதனால் கட்சியின் தலைவராக தாம் வரவேண்டும் என்ற கனவுகளையும் வளர்த்துக் கொண்டனர். அக்கனவை நனவாக்குவதற்கு ஆளுந் தரப்பினரின் உதவிகளும், ஒத்தாசைகளும் தாராளமாகக் கிடைக்கும் என்றும் நினைத்திருந்தார்கள்.

    இதே வேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமைக்கு ஆதரவாக  இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏனைய முக்கியஸ்தர்கள் ரிஷாத் பதியூதீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவுடன் சோர்வடைந்து செயலிழந்து இருந்தார்கள். அவர்களிடத்தில் அச்சம் மேலெழுந்து காணப்பட்டது. அத்தகைய நிலைக்கு கட்சிக்கு செயற்பாட்டு ரீதியான கட்டமைப்பு இருக்காமையும், ரிஷாத் பதியூதீன் என்ற தனி நபரை மையப்படுத்திய வகையிலேயே கட்சியின் செல்வாக்கு பெரும்பாலும் அமைந்திருந்தமையும் ஒரு காரணமாகும். 

    அதிகமாக ஆளுந்தரப்பாக இருந்து கட்சியை முன்னெடுத்துச் சென்ற ரிஷாத் பதியூதீனுக்கு நீண்ட காலத்திற்கு எதிர்க்கட்சியில் இருந்து தமது கட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    தமது செல்வாக்கையும், பிற உதவிகளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதன் பின்னர் தம்மை அரசியல் ரீதியாக தனிப்படுத்தியுள்ளமை தொடர்பில் ரிஷாத்  பதியூதீனுக்கு மிகப் பெரிய ஆத்திரமும், கவலையும் இருக்கின்றது. 

    சிறைவாசம் ரிஷாத்  பதியூதீனுக்கு பல படிப்பினைகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தம்மைச் சூழ இருந்தவர்களின் உண்மையான முகத்தை புரிந்து கொள்வதற்கு அது உதவியுள்ளது. 

    அது மட்டுமன்றி ரிஷாத்  பதியூதீன் குறித்து பெரும்பான்மை இனத்தவர்களிடம் தோற்றிவிக்கப்பட்ட விம்பத்தை புரிந்து கொள்வதற்கும், அவர்களின் மனங்களில் காணப்பட்ட குற்றச்சாட்டுக்களின் கனதியும் குறைவடைவதற்கும் வழிவகுத்துள்ளது. ஆயினும், சிறைவாசம் ரிஷாத்  பதியூதீனுக்கு மனதளவில் அழியாத காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

    குறிப்பாக அவர் சிறையில் இருந்த போது குடும்பத்தினர் எதிர்கொண்ட நெருக்கடிகள் மிக மோசமான நிலைமையை ஏற்படுத்தி இருந்தது. 

    இத்தகைய பின்னணியில் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிற ரிஷாத் பதியூதீன், தமது கட்சியை இறுக்கமான கட்டமைப்பு கொண்டதாக மாற்றியமைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். அதனை உடனடியாக செய்யாது தன்னை மையப்படுத்திவாறே கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வாராயின் எதிர்காலத்தில் மிக பாரதூரமான சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவதற்கே சந்தர்ப்பங்கள் அதிகமுள்ளன. அது மட்டுமன்றி தமது கட்சியை தற்போது ஆளுந் தரப்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளையும் முதலில் ரிஷாத் பதியூதீன் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    அத்தோடு போட்டிக் கட்சிகளிடம் இருந்தும் தமது கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்கும் உழைக்க வேண்டியுள்ளது. ஆதலால், கட்சியின் வளர்ச்சிக்கும்;, தமது செல்வாக்கையும் உயர்த்திக் கொள்வதற்கும் இன்றைய அரசியல் சூழலையும், சிறைவாசத்தினால் ஏற்பட்டுள்ள சாதக நிலையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு கட்சியை முதலில் கட்டமைப்பு உள்ளதாக அவர் மாற்றியமைக்க வேண்டும். 

    இதேவேளை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து தலைவருக்கும், உயர்பீட உறுப்பினர்களுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இடம் வழங்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகும். இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் சரியாக விளங்கிக் கொண்டு தங்களைச் சுற்றி வளையம் அமைத்து தமக்கான ஆதரவாளர்களை திரட்டும் வேலையை இப்போதே மேற்கொண்டு வருகின்றனர். தேவைப்பட்டால் தமது பிரதேசத்தை மையப்படுத்தி தனிக் கட்சியை ஆரம்பிப்பதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு தம்மையும், கட்சியையும் சூழ்ந்துள்ள முள் வேலிகளை தாண்டி முன்னேறிச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை மிகச் சரியாக கணித்து காய்நகர்த்தாது விட்டால் ரிஷாத் பதியூதின் என்பவரின் அரசியல் வாழ்வும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்காலம் சூனியமாகவே அமையும்.
    அNது நேரம் கட்சியின் கட்டமைப்பில் சமூகப்பற்றுக்கும், கட்சிப்பற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டதன் பின்னரே தலைமைத்துவப் பற்றுக்கு இடமளிக்க வேண்டும். இதற்கு உயர்ந்த படிப்பு அவசியமில்லை. உயர்வான நம்பிக்கையே முக்கியமாகும். இந்தப் புரிதல் ரிஷாத் பதியூனுக்கு அவசியமாகின்றது.

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சமூகத்தில் செல்வாக்கு மிக்கதாக மாற்ற வேண்டுமாயின், அதற்கு உயர் படிப்புக்களைக் கொண்டவர்களும், பிரபல்யமானவர்களும் அவசியம் என்றதொரு எடுகோள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையிடம் இருக்கின்றது. இந்த எடுகோளின் அடிப்படையில் இக்கட்சியுடன் இணைத்துக் கொண்டவர்கள், றிசாட் பதியூதீன் அமைச்சராக இருந்த போது உயர் பதவிகளை வகித்து உயர் சம்பளங்களை பெற்றுக் கொண்டு இருந்தார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அவர்களினால் சமூகத்திற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. இந்த படிப்பினையை ரிஷாத் பதியூதீன் கொண்டிருக்கின்ற நிலையில் அவர் தன்னையும், தனது அரசியல் நிலைப்பாடுகளையும் சுயபரிசிலனைக்கு உட்படுத்த வேண்டும்.

    படித்தவர்களிடம் சமூகப்பற்று இருக்குமாயின், அத்தகையவர்கள் அரசியலுக்கு வருவார்களாயின் அன்றுதான் முஸ்லிம் சமூகம் சுயமரியாதையுடன் பயணிக்கக் கூடிய கொள்கையை வகுக்கவும், பாதையை அமைத்துக் கொள்ளவும் முடியும் என்பதனை கோட்பாடாக் கொண்டாலே அடுத்து வரும் காலம் அவருக்கும், கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்குமே விடிவு காலம்தான்.

    Virakesari 21.11.2021


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாற்றியமைக்கப்பட வேண்டிய ரிஷாத்தின் அரசியல் பாதை Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top