• Latest News

    Oct 17, 2021

    சவால்களை எதிர்கொள்ள ரிஷாத் பதியுதீன் தயாரா?

    (17.10.2021) வீரகேசரி கட்டுரை
    ----------------------------------------
    சவால்களை எதிர்கொள்ள ரிஷாத் பதியுதீன் தயாரா?
    எம்.எஸ்.தீன் -

    பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 06 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் வியாழக்கிழமை (14.10.2021) பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டிருந்தார்.


    இதேவேளை,  அவரது வீட்டில் பணியாற்றிவந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது அவ்வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    ரிஷாத் பதியுதீன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அவற்றில் அவரை அரசியல் ரீதியாக பலிவாங்குவதற்காகவே கைது செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களே மேலோங்கி உள்ளன. இதே வேளை, அவரது கைது நடவடிக்கைகளின் பின்னால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

    எவ்வாறு இருப்பினும், ரிஷாத் பதியுதீன் கடந்த 06 மாத காலப்பகுதியில் பல்வேறு படிப்பினைகளைப் பெற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. தமது கட்சிக்கும், தனக்கும் உண்மையாக இருப்பவர்கள் யாரென்பதனை தெளிவாக உணர்ந்திருப்பார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிகளின் பின்னால் ரிஷாத் பதியுதீன் இருந்துள்ளார் என்பது தெளிவானதாகும். ஆனால், ரிஷாத் பதியுதீன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற மகிழ்ச்சியை பெற்றுக் கொண்டவர்கள், ரிஷாத் பதியுதீனின் துன்பத்தில் பங்கு கொள்ளவில்லை. அவரது விடுதலைக்காக உண்மையாக செயற்படவில்லை என்பது தெளிவானாகும். ரிஷாத் பதியுதீன் விடுதலை செய்யப்படாவிட்hலும் பருவாயில்லை, அவருக்காக குரல் கொடுத்து ஆட்சியாளர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ளக் கூடாதென்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக இருந்தார்கள். பாராளுமன்றத்தில் தமது கட்சியின் தலைவருக்காக குரல் கொடுக்க முடியாதவர்களாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.

    இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எவ்வாறு ரிஷாத் பதியுதீன் தமது கட்சியினதும், தனதும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றார் என்பது மிகப் பெரிய கேள்வியாகும். தாம் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவது என்பது தலைவரின் சம்மதத்தின் பேரிலேயே என்று கட்சியின் ஆதரவாளர்களிடையே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

    இதே வேளை, கட்சித் தலைவரின் விடுதலைக்காக உழைக்காதவர்கள் என்ற கோபமும், ஆதங்கமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விசுவாசிகள் மத்தியில் அதிகமாகவே இருக்கின்றன. ஆதலால், இனிவரும் நாட்களில் கட்சியின் ஆதரவாளர்களுக்கு மத்தியில் தோன்றவுள்ள ரிஷாத் பதியுதீன் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்தும், அவர்கள் தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்களிடையே உள்ள கருத்தியல் குறித்தும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அக்கருத்துக்கள் கட்சியின் எதிர்காலத்தை மாத்திரமின்றி, அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதாகவே பெரும்பாலும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏனெனில், ரிஷாத் பதியுதீனை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பலிவாங்குவதற்காகவே கைது செய்தார்கள். அவர் சமூகத்திற்காக குரல் கொடுத்ததை ஆட்சியாளர்களும், பௌத்த இனவாதிகளும் விரும்பவில்லை என்பது போன்ற சந்தேகங்கள்; கடந்த 06 மாத காலங்களில் மக்களின் மனங்களில் கேள்வியாக வேரூன்றியுள்ளன. இந்த சந்தேகங்கள் ரிஷாத் பதியுதீன் மீது அனுதாபங்களை ஒரு புறமும், நம்பிக்கையை மறுபுறமும் கட்டியெழுப்பியுள்ளன. அதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு முஸ்லிம்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளன என்பது மாற்றுக் கட்சிகளுக்கு கசப்பாக இருந்தாலும் அதுவே உண்மையாகும். தமது கைது மூலமாக ஏற்பட்டுள்ள இந்த சாதகநிலையை அவர் எவ்வாறு கையாளப் போகின்றார் என்பது ரிஷாத் பதியுதீன் முன்னுள்ள சவால்களில் முக்கியமானதாகும்.

    அதுமட்டுமன்றி அரசியல் முடிவுகளை எடுக்கின்ற போதும், கருத்துக்களை முன் வைக்கும் போது மிகுந்த அவதானமும், பக்குவமும் அவசியமென்பதையும் ரிஷாத் பதியுதீன் உணர்ந்திருப்பார். இதற்கு முதல் ரிஷாத் பதியுதீன் எந்தவொரு அரசியல் நெருக்கடியையும் பெரியதாக எதிர்கொள்ளவில்லை. அவரது அரசியல் ஆளுந் தரப்பினரின் முழுமையான ஆதரவுடனே சென்று கொண்டிருந்தன. ஆனால், எதிர்க்கட்சி அரசியலை அவர் முதல் தடவையாக தெரிவு செய்தவுடனேயே பல நெருக்கடிகளுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளாகிக் கொண்டார். நல்லாட்சி ஆட்சியிலும் அவரின் மீது பல குற்றச்சாட்டுக்களை பௌத்த இனவாதிகள் அரசியல் தேவைக்காக முன் வைத்தார்கள். ஆயினும், அவர் ஆட்சியில் பங்காளியாக இருந்தமையால் அக்குற்றச்சாட்டுக்களை அவரால் எதிர்கொள்ளக் கூடியதாக இருந்தது.

    இதே வேளை, ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டது முதல் அவரது கட்சியாகிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது என்றே கூறலாம். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை ஆளுங் கட்சியினராக உருவகித்துக் கொண்டு செயற்பட்டார்களே அல்லாமல் கட்சியின் உள்ளுர் முக்கிஸ்தர்கள், கட்;சியின் மத்திய குழுக்கள் போன்றவற்றுடன் பெரிதும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்களுக்கு பிரத்தியோகமாக முகவர்களை நியமித்துச் செயற்பட்டார்கள். இதனால், கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. மேலும், ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டமையாலும், பாராளுமன்ற உறுப்பினர்களினாலும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களினாலும் கட்சியின் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டமையாலும் உள்ளுர் பிரமுகர்கள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். சிலர் மாற்றுக் கட்சிகளில் இணைந்து கொண்டார்கள்.

    ஆதலால், ரிஷாத் பதியுதீன் தமது கட்சியின் ஆதரவை மீண்டும் தனியாளாக நின்று கட்டியெழுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கட்சியின் செல்வாக்கை மேலும் அதிகரித்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் அவரோடு இணைந்து செயற்படப் போவதில்லை என்பது தெளிவானதாகும்.

    கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் இருந்த 06 மாத காலப்பகுதியில் கட்சியின் நிலையையும், கட்சிக்கும், தனக்கும் விசுவாசமாக இருக்கின்றவர்களையும், கடந்த காலங்களில் பதவிகளுக்காக ஒட்டிக் கொண்டிருந்தவர்களையும் ரிஷாத் பதியுதீன் தெளிவாக அடையாளங் கண்டுள்ளார். அதனால், போலிகளை தூரமாக்கி வைக்கவும், விசுவாசிகளை அருகில் வைத்துக் கொள்வதற்குமுரிய நடவடிக்கைகளையும் ரிஷாத் பதியுதீன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது தமது கட்சியை சுத்தம் செய்ய வேண்டியும், தம்மை சூழ உண்மையான விசுவாசிகளை வைத்துக் கொள்வதற்குமுரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த களைபிடுங்கும் நடவடிக்கை இலகுவாக இருக்கப்போவதில்லை. கடினமானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதே வேளை, களைபிடுங்காது கட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் முடியாது. அதுமட்டுமன்றி கட்சியின் செல்வாக்கு தனிமனிதனில் தங்கிருக்கவும் முடியாது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு சுமார் 90 வீதம் ரிஷாத் பதியுதீனின் தனிப்பட்ட செல்வாக்கிலேயே இருக்கின்றது. இந்த நிலைமையை ரிஷாத் பதியுதீன் தெளிவாக உணர்ந்துள்ளமையால் கட்சியை சரியான கட்டுக்கோப்புடன் முன்னெடுக்க வேண்டியதொரு கட்டாயமும் அவருக்கு இருக்கின்றது.

    தற்போது ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அவரையே பேசுபொருளாக்கியே இன்றைய ஆட்சியில் உள்ள பங்காளிக் கட்சிகளும், பௌத்த இனவாதிகளும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள். தமது அரசியலுக்கும், பௌத்த இனவாத மேலாதிக்கத்திற்கும் ரிஷாத் பதியுதீனை பலியாக்கினார்கள் என்று கூடச் சொல்லலாம். அதனால், மீண்டும் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைக்கமாட்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை. ரிஷாத் பதியுதீனுடன் தொடர்புடைய குற்றச்ச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் இருந்து கொண்டிருந்தாலும் பௌத்த இனவாதிகளும், அவர்களை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கும் இனவாத பேரினவாதிகளும் ரிஷாத் பதியுதீன் மீது மீண்டும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இதன்போது எவ்வாறு தமது நடவடிக்கைகளையும், கருத்துக்களையும் முன்னெடுப்பது என்பதும் கூட ரிஷாத் பதியுதீனுக்கு முன்னுள்ள மற்றுமொரு சவாலாகும்.

    ஆகவே, ரிஷாத் பதியுதீன் மிகவும் பக்குவதாகவும், விமர்சனங்கள் எல்லாவற்றிக்கும் விடையளித்துக் கொள்;ளாமலும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். கட்சியை வளர்ப்பதிலும், தமது அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துவதுடன், காலுக்குள் சுற்றியுள்ள பாம்புகளுடன் எச்சரிக்கையாகவும் செயற்படுதல் அவசியமாகும். அரசியல் என்பது சவால்கள் நிறைந்தவை. அவற்றை சாதுரியமாக எதிர்கொள்வதே அரசியல் கலையாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சவால்களை எதிர்கொள்ள ரிஷாத் பதியுதீன் தயாரா? Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top