• Latest News

  Aug 5, 2021

  ஹிஷாலியின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட ரிஷாட் பேசுகையில்.....

   என்னுடைய வீட்டிலே பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த தங்கை ஹிசாலினியின் மரணம் எனக்கும் எனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் மிகுந்த மனவேதனையை அளித்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரவித்துள்ளார்.

  நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

  என்னுடைய சகோதரி 34 வயதில் புற்றுநோயால் இறந்த போது எவ்வாறான துன்பத்தையும் வேதனையையும் தந்ததோ அதே போன்றதொரு வேதனையைத்தான் ஹிசாலினியின் மரணமும் எனது குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

  16 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் ஹிசாலினி எங்களுடைய வீட்டிற்கு வேலைக்காக தரகர் ஒருவரின் மூலம் வந்தார்.

  அவர் பணிக்கு வரும்போது சிறுமியின் தாயாரோ குடும்பத்தாரோ வந்து சிறுமி யாரின் வீட்டில் பணி புரிய போகின்றார் அவரின் தங்குமிடம் எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்துச் செல்லவில்லை.

  எவ்வாறெனினும் ஒரு தனிநபர் வாழ்வதற்கான அறை, அதற்கு அருகில் குளியலறையோடு ஒழுங்கான கட்டமைப்போடு அவருக்கு வீட்டு ஏற்பாட்டை நாங்கள் செய்து கொடுத்திருக்கின்றோம்.

  கடந்த பத்து வருட காலமாக அங்கு பணியாற்றுபவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். குறித்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி 6.45 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

  எனது மாமனாரும் அவரின் மனைவியும் உறங்கச் சென்ற வேளை இந்த சிறுமியின் கதறல் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது சிறுமி தீப்பற்றிய நிலையில் இருந்துள்ளார். எனது மாமனாரும் மாமியாரும் தீயை அணைப்பதற்கான முழு முயற்சியை செய்திருக்கின்றார்கள்.

  அதன்பின்னர் அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு காலை 07.03 மணியளவில் அழைப்பை எடுத்து கூறிய பிறகு சரியாக 07.33க்கு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  எனினும் பொலிஸார் 8.35க்குத் தான் சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்தோம் என்று ஒரு தகவலை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர் என நான் அறிகின்றேன்.

  அது மாத்திரம் அல்லாமல் சிலர் தங்களின் விருப்பத்திற்கு 11 மணி 12 மணி என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். எனது குடும்பத்தில் இரத்த உறவு உள்ள ஒருவருக்கு இப்படி துன்பம் நேர்ந்திருந்தால் எவ்வாறு செயற்பட்டிருப்போமோ அதில் இருந்து ஒரு துளியும் பிசகாது வயதான எனது மாமனாரும் மாமியாரும் செயற்பட்டு பிள்ளையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

  அதன் பிறகு எனது மனைவிக்கு அறிவித்தவுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு ஓடிச் சென்றிருக்கின்றார்.

  அங்கு வைத்தியர்கள் சிறுமியை காப்பாற்ற முழு முயற்சி எடுத்திருக்கின்றார்கள். எனது மனைவி எனது பிள்ளைகள் என அனைவரும் தொடர்ச்சியாக நோன்பு நோற்று இந்த சிறுமி நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள்.

  அதுமட்டுமல்லாது சம்பவம் நடைபெற்ற உடன் தரகருக்கு அழைப்பேற்படுத்தி சிறுமியின் தாயாரை வாகனம் ஒன்றை எடுத்துக் கொண்டு வரச்சொல்லுங்கள் அதற்கான செலவை நாங்கள் தருகின்றோம் எனக் கூறி அவரை உடனே வரவழைத்துள்ளார்கள்.

  அதன் பின்னர் ஒரு கட்டத்தில் வைத்தியர்கள் பிளாஸ்ரிக் சர்ஜரி செய்ய வேண்டும் அதற்கு ஏழு அல்லது எட்டு இலட்சம் செலவாகும். சிங்கப்பூரில் இருந்து தோல் இறக்குமதி செய்ய வேண்டும் எனக் கூறிய போது எனது மனைவி உடனடியாக அதற்கான பணத்தை நான் ஏற்பாடு செய்கின்றேன். சிகிச்கைக்கான ஏற்பாட்டை செய்யுங்கள் என சொல்லியிருக்கின்றார்.

  இந்த வேதனையான சம்பவங்கள் நடைபெற்றபோது நான் வீட்டில் இருக்கவில்லை. இந்த சகோதரி தரகர் ஊடாக வீட்டிற்கு வேலைக்கு வந்தபோதும் நான் வீட்டில் இருக்கவில்லை.

  அப்போது சிறுமியின் வயதைக் கேட்டபோது 17 வயதாகிறது என்ற தரகர் கூறினார். அதன் பின்னர் சில சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் தான் நாங்கள் அறிந்து கொண்டோம்.

  சிறுமிக்கு 16 வயதென்று. அவரின் தோற்றம் 17 அல்லது 18 வயதைப் போன்றிருக்கும். நல்ல பண்பான பிள்ளை. நாங்கள் உண்ணுகின்ற உணவைத்தான் அந்த பிள்ளைக்கு கொடுத்தோம்.

  என்னுடை பிள்ளையைப் போலத்தான் எனது மாமியாரும் எனது மனைவியும் சிறுமியை பராமரித்தார்கள்.

  சிறுமியின் தாயார் வைத்தியசாலையில் வந்து பார்த்தபோது நன்றாகத்தான் இருந்தார். சிறுமியின் மரணத்தின் பின்னர்தான் அவரை சிலர் குழப்பி இவ்வாறான அறிக்கைகளை விட வைத்திருக்கின்றனர்.

  எனது மனைவி மிகவும் பண்பானவர். நான் செய்தவற்றை சொல்லிக்காட்ட விரும்பவில்லை. சிறுமி எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்து இரண்டாவது நாளே சிறுமியின் தாயார் நாற்பதாயிரம் ரூபா பணம் கேட்டார். உடனே எனது மனைவி தரகரின் ஊடாக குறித்த பணத்தை அனுப்பி வைத்தார்.

  ஏழரை மாதங்களுக்குள்ளாகவே இரண்டு இலட்சம் ரூபா பணம் அனுப்பியிருக்கின்றார். இந்த பதினைந்து நாட்களுக்குள்ளே ஒன்றரை இலட்சம் ரூபா பணம் அனுப்பியிருந்தார்.

  இவ்வாறான நிலையில் சாப்பாடுகூட தரவில்லை என கூறுமளவிற்கு கீழ்த்தரமான, சிறுபிள்ளைத்தனமாக கருத்துக்களை கூறுவது மன வேதனையைத் தருகின்றது.

  அந்த தாயாருக்கும் வேதனை இருக்கும். அவர்களின் வேதனையில் நாங்களும் பங்கு கொள்கின்றோம். ஆனால் அவரை சிலர் தவறாக வழிநடத்துகின்றார்கள்.

  இவ்வாறான நிலையில் என் வீட்டிலே எந்தவொரு அசிங்கமான வேலையும் நடைபெறவில்லை என்பதனை பொறுப்புணர்வோடு நான் இந்த சபையில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

  அந்த சகோதரி நல்லவர், அவரின் குடும்பமும் நல்ல குடும்பமே ஆனால் ஒரு சில ஊடக வியாபாரிகள் அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

  Thanks : tamilwin.com

   


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: ஹிஷாலியின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட ரிஷாட் பேசுகையில்..... Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top