• Latest News

  Jun 5, 2021

  ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள்

   

  தூதுவிடும் தலைவர்!

  தனித்துவக் கட்சியின் தலைவர் தமது ஏஜன்ட் ஒருவர் ஊடாக தனித்துவக் கட்சியின் அடி வேர்களில் ஒன்று எனக் கருதப்படும், அக்கட்சியின் முன்னாள் செயல் ஆளுநருக்கு தூது விடுத்துள்ளதாக கசியும் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் செயல் ஆளுநர் இன்னுமொரு கட்சியின் செயல் ஆளுநராகவுள்ளார். அக்கட்சியையும், தனித்துவக் கட்சியையும் இணைத்து கூட்டு அரசியல் செய்வதற்காகவே இந்த தூது விடுக்கப்பட்டுள்ளதாகவும் கசியும் தகவல்கள் கூறுகின்றன.

  கட்சிக்குள் தனக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதையும், தனது கட்டுப்பாட்டை அவர்கள் மீறிச் செயற்படுவதனையும் கவனத்திற் கொண்டு, தனது அருகில் இருந்து தனது தலைவர் எனும் பதவிக்கு சக்தியூட்டும் ஆலோசனைகளை வழங்கியவர்களை கட்சியின் அதிகமான உயர்பீட உறுப்பினர்களின் சொற்களை கேட்டு மடத்தனமாக அவர்களை கட்சியை விட்டு துரத்தியது ஆபத்தாகி விட்டதென்று தனித்துவக் கட்சியின் தலைவர் எண்ணுவதாகவே கருத வேண்டியுள்ளது.

  தனித்துவக் கட்சியின் அட்டன் பாலசிங்கம் என்று கருதப்பட்ட ஏறாவூர்க் காரரை தூரமாக்கியதன் பின்னர் கிழக்கு மாகாணத்திற்கு முதல் மகனாக இருந்த மற்ற ஏறாவூர்க்காரர் பெரும் தலையிடியாக இருந்து வருவது தனித்துவத் தலைவருக்கு பொறுக்க முடியாதுள்ளது.

  அதனால், தனது பழைய அரசியல் சகபாடிகளுடன் இறங்கிச் சென்று கட்சிக்குள் மீண்டும் இணைத்துக் கொள்வதாது, விழுந்தாலும் மீசையில் மண் விழவில்லை என்று பாசாங்கு காட்டுவதற்காக மரத்தில் வண்ணாத்திப் பூச்சியை அமரவைத்து மரமும், வண்ணாத்திப் பூச்சியும் என்று படம்காட்டுவதற்கும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சவாலை முறியடிக்கவும் தனித்துவக் கட்சியின் தலைவர் எண்ணுகின்றார்.

  இந்த வேலையை நினைப்பது போல் முடித்துக் கொண்டால், தனித்துவக் கட்சியின் முன்னாள் முக்கிய உறுப்பினரான ஏறாவூர்க்காரரை பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம். சவால்களை வெல்லலாம் என்று தனித்துவக் கட்சியின் தலைவர் நினைக்கின்றார்.

  இரு கட்சிகளும் இணையும் போது கூட்டுத் தலைமைத்துவத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

  தனித்துவக் கட்சித் தலைவரின் இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால் முன்னாள் செயல் ஆளுநரின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றக் கூடிய துணிச்சல் தனித்துவக் கட்சியின் தலைவருக்கு வருமா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. முன்னாள் செயல் ஆளுநர் முன் வைத்த நிபந்தனைகள் இன்னும் கசியவில்லை. இரகசியமாகவே இருக்கின்றது.

  பக்குவம் வேண்டும்

  அரசியல் என்பது கண்டுகொள்ள முடியாத ஆழத்தைக் கொண்டது. எந்த வேளையில் யாருடைய தலையில் பாரம் இறங்கும், யாருடைய செல்வாக்கு சரியுமென்று சொல்ல முடியாது. அரசியலில் சிலருக்கு எடுத்ததெடுப்பில் வெற்றியும், புகழும் கிடைத்தால் தன்னிலை மறந்துவிடுவர். ஊடகத்துறையில் பத்திரிகை வாசித்து விமர்சனம் செய்தவர் புதிதாக அரசியல் பிரவேசம் செய்தார். ஊடகப்புகழும், அவர் பிறந்த ஊரின் அவலமும், அரசியலுக்காக மேற்கொண்ட பிரதேசவாதமும், பிரதேசவாத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட 'பன்றிக்காவல் அணி'யும் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது.

  மற்றவர்களைப் போல் 50 வருடங்கள் ஊடகத்துறையில் இருந்தேன் என்று பேசுவதில் எந்த பிரயோசனமுமில்லை என்று நானாகவே முடிவு செய்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட வயதிலும், அரசியலிலும் குறைந்த தம்பியாகவுள்ள வன்னிமகனின் கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினரால் அரசியலின் நெழிவுசுழிவுகளை புரிந்து கொள்ள முடியவில்லை.

  தனக்கு போட்டியானவர்களை புறக்கணித்துச் செயற்படுவதை விடவும், அவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் பக்குவம் கொண்டவரே அரசியலில் நிலைக்க முடியும்.

  மாட்டிக் கொண்டார் தம்பி

  தேர்தல் வெற்றியை தனது சொந்த வெற்றி என்று தம்பட்டம் அடித்தவர் இன்று மாட்டிக் கொண்டு விழிக்கும் நிலைக்குள்ளாகி உள்ளார். அரசனுமில்லை. புருஷனுமில்லை என்ற நிலையை அடைவதற்கு இன்னும் சில காததூரம் செல்ல வேண்டியுள்ளது. அதற்குள் அவர் செய்ய வேண்டியது நிறையவுள்ளது.

  அரசாங்கத்தின் 20இன் 17ஆவது பிரிவுக்கு ஆதரவு வழங்கிய வன்னி மகனின் கட்சி உறுப்பினர், மாவட்டத்தில் உள்ள கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலரை புறக்கணித்துக் கொண்டதோடு, செயற்குழுவில் தனக்கு பணிந்து நடக்கும் சிலரை அரவணைத்துக் கொண்டார். பதவிகளும், அரசியல் பிரதிநிதித்துவமும் பெற்றுத் தரப்படும் என்று அவர்களுக்கு வாக்குக் கொடுத்தார். தம்பி இவர்களுடன் சேர்ந்து கட்சியில் செல்வாக்குப் பெற்றுள்ள மாவட்டத்தின் முக்கியதஸ்தர்களை கவனத்திற் கொள்ளாது செயற்பட்டார்.

  தம்பி நினைத்தது நடக்கவில்லை. 17 இன் மூலமாக அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக சுற்றியவருக்கு, கட்சியின் ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்களினால் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முகங் கொடுக்க முடியவில்லை.

  கட்சித் தலைவர் சிக்கலில் மாட்டியபோது அதற்கு எதிராக காத்திரமான அறிக்கைவிடவில்லை. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தலைவரை விடுவிக்க நடவடிக்கைகளில் குதிக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன.

  மருதமுனையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்டத்தில் பல இடங்களில் தம்பியின் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேறுவதற்கு முதல் தம்பியின் அனைத்தும் வெண்மை என்று கதை சொல்லும் சிட்டுக் குருவிகள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் வேண்டாம். தம்பி உயர்மட்டத்துடன் கதைத்துள்ளார் என்று வாதாட்டம் போட்ட போதிலும், மாவட்ட செயற்குழுவினரில் அதிகம் பேர் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

  தம்பிக்கு தூக்கம்

  தம்பிக்கு என்ன செய்வதென்ற சங்கடம். ஆயினும், மறுநாள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதில் தம்பி கலந்து கொள்ளவில்லை. தம்பிக்கு தூக்கம் அதிகமானதால், எழும்ப முடியவில்லை என்று ஹிஸ்புவின் வயிற்று வலிக் கதை ஒன்றைக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடம் தம்பி கூறியுள்ளார்.

  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாததால் தம்பிக்கு எதிராக பலத்த விமர்சனக் கதைகள் சொல்லப்பட்டன. இதன் பின்னர் கல்முனையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திலும் இவர் கலந்து கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று மாவட்டக் செயற்குழு உறுப்பினர்களும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் பேசிக் கொண்டார்கள்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாது போனால் மோசமான நிலை ஏற்படும். விமர்சனங்களை தவிர்க்க வேண்டுமாயின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோம், அரசாங்கத்தின் உயர்மட்டத்தவர்களிடம் தனது நிலையை சொல்லி சமாளிப்போம் என்று நினைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் தம்பி. ஆர்ப்பாட்டம் கல்முனையில் நடைபெறவில்லை. வேறு இடத்தில் நடைபெற்றது.

  இதன் மூலம் தம்பி தமக்கு எதிரான விமர்சனத்தை திசைமாற்றி தனக்கு சாதகமானதொரு அரசியல் களத்தை மெதுவாக உருவாக்கிக் கொண்டார்.

  கறுப்புக் கொடி ஏற்றுங்கள்

  என்ற போதிலும், தம்பியின் பின்னால் உள்ள அறிவுபூர்வமாக சிந்திக்கக் கூடியவர்கள் சம்மாந்துறையில் ஒன்று கூடினர். நோன்புப் பெருநாள் தினத்தில் கறுப்புக் கொடி வீடுகளில் ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் எடுத்தார்கள். அதனை தமது ஊரில் வைத்து தம்பி அறிவிக்க வேண்டுமென்றும் அறிவுரை கூறினர். தம்பியும் தனக்கு எதிரான விமர்சனத்தை பூச்சியமாக்கலாம். எதிராக செயற்படுகின்றவர்களை செல்லாக்காசாக்கலாம் என்று நினைத்து கறுப்பு கொடி கட்டுமாறு மக்களுக்கு அறிவித்தார்.

  வெடித்தது எதிர்ப்பு. 

  அல்லாஹ் தீர்மானம் செய்த நாளில் கறுப்புக் கொடி ஏற்ற முடியாது. நோன்பாளிகள் சந்தோசம் கொண்டாடும் நாள் என்று உலமாக்களும், கற்றவர்களும் போர்க்கொடி ஏற்றினார்கள். வன்னி மகனின் கட்சியையும் ஏசினார்கள். கறுப்பு கொடிக்கு ஆதரவும் இருந்தது. அது போதுமானதாக இருக்கவில்லை.

  கறுப்பு கொடி அறிவிப்பு கட்சியின் முடிவல்ல என்று  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  மூன்று பேர்; அறிவித்தனர். கறுப்புக் கொடி ஏற்றல் தோல்வியில் முடிந்தது.

  கொழும்புத்துறை முகநகர் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் எண்ணமே தம்பியிடம் இருந்தது. வன்னி மகன் சற்று அழுத்தம் கொடுத்ததால் எதிராக தம்பி வாக்களித்தார்.

  இப்போது தம்பியோடு கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் பலரில்லை. அதிகார உயர்பீடங்களும் கோபம் கொண்டுள்ளன. நாடாளுமன்றத்தில் நுளைந்தவுடன் பேச்சு வன்மையால் பலiரையும் கவர்ந்தார். காலம் செல்லச் செல்லச் செல்ல கூடுவாரோடு கூடி நாவிழந்துள்ளார் என்று அவருக்காக பொருள் செலவு செய்தவர்கள் மனந்நொந்துள்ளார்.


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள் Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top