• Latest News

    Jun 13, 2021

    ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள்

    ஆதரவாளர்கள் கவனம்!

    அரசியலில் நிரந்தர பகைவர் என்று யாருமில்லை. இன்று சண்டையிட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள் நாளை ஒரு பிங்கானில் சாப்பிடுவார்கள். அரசியல் அவர்களின் தொழில். அதில் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக தெரிந்த எல்லா வித்தைகளையும் சொல்லுவார்கள். அரசியலில் கீறியும் பாம்புமாக இருந்தவர்கள் இன்று நண்பர்களாக இருக்கின்றார்கள். இன்றைய நண்பர்கள் நாளை பகைவராகக் கூட மாறுவார்கள். கட்சி மாறுவார்கள். பின்னர் அதே கட்சியில் இணைந்து கொள்வார்கள். தேர்தல் காலத்தில் சொல்லுவதற்கும் தேர்தல் முடிந்ததன் பின்னர் அரசியல்வாதிகளின் நடத்தைகளுக்கும் தொடர்புகள் இருக்காது.

    இத்தகைய பனமுகத்தைக் கொண்ட அரசியலில் கட்சிகளின் ஆதரவாளர்கள், அரசியல்வாதிகளின் அபிமானிகள் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு கல் எறிவதும், சண்டையிட்டுக் கொள்வதும், பின்னர் நிரந்தர பகைவர் போன்று முகங்களை பார்க்காது செயற்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், எந்த அரசியல்வாதிகளுக்காக சண்டையிட்டுக் கொண்டார்களோ அவர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவார்கள். ஆதரவாளர்களும், அபிமானிகளும் ஒற்றுமைப்படுவதில்லை.

    அரசியல்வாதிகளின் அரசியல் முகத்தை புரிந்து கொண்டால் எந்தவொரு வாக்காளனும் தேவையற்ற சண்டையிட்டு உறவை முறித்துக் கொள்ளமாட்டான். 

    நிந்தவூர் அரசியலில் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். இப்றாகிம், முஸ்தபா, ஹஸன்அலி ஆகியோர்கள் இந்த மண்ணில் பிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். தற்போது பாராளுமன்ற உறுப்பினராக பைசால் காசிம் இருக்கின்றார். 

    நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக எம்.ஏ.எம்.தாஹிர் உள்ளார். இவரை நிந்தவூர் மக்கள் அஸ்ரப் சேர்மன் என்றுதான் அழைப்பார்கள். பைசால் காசிம் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். அஸ்ரப் மூன்றாவது தடவையாக தொடர்ச்சியாக சேர்மனாக இருக்கின்றார். 

    இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்கள். இவர்களை பிரிக்க முடியாதென்ற அளவுக்கு உறவைக் கொண்டிருந்தார்கள். ஆயினும், அஸ்ரப்பின் வளர்ச்சியும், பைசாலுக்கும் அஸ்ரப்புக்கும் இருக்கின்ற உறவின் மீது பொறாமை கொண்டவர்களும் இவர்களை பிரிப்பதில் வெற்றி கண்டார்கள்.

    ஆயினும் நிந்தவூர் மக்களின் ஆதரவு இந்த இருவருக்கும் சமமான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

    அஸ்ரப்பின் பிரிவு பைசாலுக்கு இழப்பாகவே இருந்தது. ஆனால் பைசாலின் பிரிவு அஸ்ரப்புக்கும் இழப்புத்தான். ஆனால், இவர்களை பிரிப்பதில் குறியாக இருந்தவர்கள் தங்களின் நோக்கங்களை அடைந்து கொண்டார்கள். 

    அரசியலில் ஒன்றாக செயற்பட்டவர்கள் இரு துருவமாக மாறினார்கள். மேடைகளில் ஆளுக்கு ஆள் வசை பாடினார்கள். இவர்கள் இனி இணையவே மாட்டார்கள் என்றும் நம்பினார்கள். 

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பைசால் காசிம் ஐக்கிய மக்கள் சக்தியில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும், அஸ்ரப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பிலும் போட்டியிட்;டார்கள். அஸ்ரப் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டமை பைசாலுக்கு சவாலாகவே இருந்தது. ஆயினும், வெளியூர் மக்களின் செல்வாக்கால் பைசால் வெற்றி பெற்றார்.

    இவர்கள் இரு வேறு கட்சிகளிலும், மாறுபட்ட வகையிலும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை ஊரின் மீது அக்கறை கொண்டவர்கள் விரும்பவில்லை. ஒற்றுமைப்படுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்தார்கள். அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

    அரசியலில் நிரந்தர பகை என்று எதுவும் இல்லை. அடித்துக் கொண்டவர்களும், ஏசிக் கொண்டவர்கள் ஒற்றுமைப்படுவார்கள் என்பதற்கு அமைய அண்மையில் நிந்தவூரில் கொந்தராத்திற்கு பேர்போன ஒருவரின் இடத்திலே பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அஸ்ரப்பும் மூன்று மணித்தியாலங்கள் பல விடயங்களைப் பற்றி பேசியுள்ளதாக தெரியவருகின்றன. 

    ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஆராய்ந்துள்ளனர். நிந்தவூரின் அபிவிருத்தி, எதிர்கால அரசியல் போன்றவற்றையும் இருவரும் கலந்துரையாடியதாகவும் தெரியவருகின்றன.
    இவர்கள் இருவரும் சந்தித்து பேசியமை சிலருக்கு மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது. சண்டையிட்டுக் கொண்ட ஆதரவாளர்களுக்கு கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், பைசாலும், அஸ்ரப்பும் ஒற்றுமைப்பட வேண்டுமென்பதே நிந்தவூர் மக்களின் விருப்பமாகும். இவர்களின் ஒற்றுமையை விரும்பாதவர்களின் முகங்கள் இருளடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    மொட்டில் சங்கமம்

    மைல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மைல் எனது நோக்கத்தை அடைந்து கொள்வதற்குரிய படகேயாகும். ஆனால், அந்த படகை என்னால் பாதுகாக்க முடியாது. எனது ஊர் மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்துள்ளார். 

    இவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு வெளியூர் மக்கள் சுமார் 35 ஆயிரம் வாக்குகளை அளித்தமையை மறந்து கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
    பாராளுமன்ற உறுப்பினரின் இந்த நிலைப்பாட்டால் மைல் கட்சியின் தலைவர் பெரும் கவலையில் உள்ளார். 

    மைல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கட்சி தம்மை வெளியில் போட வேண்டுமென்று நினைக்கிறார். ஆதனை கட்சி செய்தால் மொட்டில் முழுமையாக சங்கமம் ஆகிக் கொள்ள நினைக்கிறார். இவரின் திட்டத்தை மைல் கட்சியின் புரிந்து வைத்துள்ளனர். 

    ஆனாலும், மைல் கட்சியின் எம்.பி எந்த நேரத்திலும் மொட்டில் இணைந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    அடங்கினார் தலைவர்

    பொது மக்களின் முன் தோன்றி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து 20உடன் பாராளுமன்ற உறுப்பினர்களை புதைப்பதற்கு ஓடித் திரிந்த மரக் கட்சியின் தலைவர் தலைநகர் போர்ட் சிற்றி சட்ட மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிக்க எண்ணிய போதிலும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனது சிறகுகளுக்குள் கட்டுப்பட்டுள்ளார் என்று காட்டுவதற்காக தலைநகர் போர்ட் சிற்றி சட்ட மசோதாவின் வாக்களிப்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

    கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்று அம்பாரையை கலக்கிய மரக் கட்சியின் தலைவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார். இப்பொதெல்லாம் ஊடகங்களில் கூட தலைவரை காணக் கிடைப்பதில்லை. 

    வால்பிடிக்கும் ஊடகவியலாளர்கள்

    ஊடகத்துறையின் தர்மத்தை புரிந்து கொள்ளாத பலர் தங்களை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளுடன் ஊடகவியலாளர்களுக்கு தொடர்புகள் இருப்பது அவசியமாகும். ஆனால், அரசியல்வாதிகளுக்கு வால்பிடிக்கக் கூடாது. அவர்களின் பணத்திற்கு பொய்களை எழுதக் கூடாது. அவர்களுக்காக முகநூல்களில் ஊடகத்தர்மத்தை மீறி வாதிடக் கூடாது. 

    சில ஊடகவியலாளர்கள் கொள்கையில்லாது காலத்திற்கு காலம் ஒரு அரசியல்வாதியிடம் கை நீட்டிக் கொண்டு வருகிறார்கள். செந்சோற்றுக் கடன் தீர்க்க நினைத்தமாதிரி எல்லாம் எழுதுகிறார்கள். அண்மையில் முகநூலில் சோற்றுப் பார்சல் ஒன்றுக்காக எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று ஊடகவியலாளர்களை கேவலமாக கிண்டல் செய்தமையை பார்த்த போது, வால்பிடிக்கும் ஊடகவியலாளர்களே நினைவுக்கு வந்தார்கள்.

    கொரோனாவும் அரசியல்வாதிகளும்
    கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்திலும் கொரோனா தொற்று இருந்தது. அப்போது அரசியல்வாதிகள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களின் காலடிக்கு சென்று அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும், செலவுக்கு பணம் கொடுத்தார்கள்.

    இப்போது மக்கள் தொழிலில்லாது கஸ்டப்படுகின்றார்கள். ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாது தவிக்கிறார்கள். எந்தவொரு அரசியல்வாதியும் மக்களின் காலடிக்கு சென்று பசி போக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    இன்றைய மூன்றாவது அலை தேர்தல் காலமாக இருந்திருந்தால் மக்களுக்கு பொருட்களும், பணமும் தேவையை விட அதிகமாகவே கிடைத்திருக்கும்.
    கொரோனா பல முகமூடிகளை கிழித்துக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் முகமூடிகளையும் கிழித்துள்ளது. அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் அள்ளிக் கொடுப்பார்கள். தேர்தல் முடிந்ததும் மக்களிடம் இருந்து அள்ளி எடுப்பார்கள். 

    நடிகையால் சர்ச்சையில் சிக்கிய அரசியல்வாதி

    கடந்த வாரம் நடிகை ஒருவர் தமது பிறந்த நாளை நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார். துனிமைப்படுத்தல் விதியை மீறிச் செயற்பட்டார் என்று இவருக்கும், இவரோடு இருந்தவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நடிகைக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு அரசியல்வாதி தலையீடு செய்துள்ளார். நடிகையின் மீதான தனிமைப்படுத்தல் உத்தரவில் அரசியல்வாதி தலையிட்டதாகக் கூறப்படுவதால் அவர்; தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்சிக்குள் உள்ள பல எம்.பி.க்கள் கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இது தொடர்பில் தெரியவருவதாவது,
    தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
    இதில் பங்கேற்ற நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 15 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


    இதன்போது மாற்று ஆடையில்லை என பியூமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்திருந்தார்.
    பியுமி ஹன்சமாலியின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது கவலையை கேட்டறிந்து, பஸ்ஸிற்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிகாரிக்கு கூறி கொஸ்வத்த பிரதேசத்தில் பஸ்ஸினை நிறுத்தும் படியும் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.

    அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது உறவினர்களிடம் கூறி தனிமைப்படுத்தலில் ஈடுபடும் காலத்தில் பயன்படுத்த ஆடைகளை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு புறப்படுவதற்கு முன்னர் நடிகை தனது வீட்டிலிருந்து சில துணிகளைப் பெற உதவுவதில் மட்டுமே தலையிட்டதாக அமைச்சர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

    இதையடுத்தே அமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள் உள்ள பல எம்.பி.க்கள் கருதுகின்றனர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top