• Latest News

  Mar 30, 2021

  மாறவேண்டிய கொள்கை


   எம்.எஸ்.தீன் -
  'ஐ.நா மனித உரிமைகள்; பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் கொண்டு வரப்பட்டபோது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் முக்கிஸ்தர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்து ஆதரவைப் பெற்றுக் கொடுத்தார்கள். அத்தகைய முயற்சிகளை தற்போது ஆட்சியிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளால் முன்னெடுக்க முடியவில்லை'

  இலங்கைக்கு எதிராக ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியாவின் தலைமையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

  இப்பிரேரணையை எப்படியும் தோற்கடிப்போம், இலங்கைக்கு பல நாடுகளின் ஆதரவுள்ளதென்று அரசாங்கத்தினர் தெரிவித்துக் கொண்டாலும், அரசாங்கத்தின் இராஜதந்திரங்கள் தோல்வியடைந்துள்ளன. 

  இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பு இலங்கையின் மீது ஆழமாக இருக்கப் போகின்றது.

  இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் சட்ட ஆலோசகர்கள், புலனாய்வாளர்கள் உட்பட 12 பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

  தோல்விக்கு காரணம்

  இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் பிரேரணை முன் வைக்கப்படவுள்ள வேளையில், அதனை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதில் ஒரு தொய்வு நிலை காணப்பட்டது. இதற்கு சர்வதேச தொடர்புகளுடன் அனுபவத்தில் குறைந்தவர்களே இராஜதந்திரத்தை மேற்கொண்டதே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றன.

  அதே வேளை, சர்வதேச நாடுகளின் ஆதரைவப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளில் தடைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளும், கருத்துக்களும் ஆளுந் தரப்பினரால் நாளாந்தம் முன் வைக்கப்பட்டன.

  ஆட்சியாளர்கள் உள்நாட்டில் பௌத்த சிங்கள மக்களை சந்தோசப்படுத்தும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த முறை கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இறுதி யுத்தம் தொடர்பானவற்றை விடவும், இந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ மயமாக்கல் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்தன்மையின் பலவீனம் உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலேயே அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

  ஆதலால், அரசாங்கத்தின் அமைச்சர்கள் இதனைப் புரிந்து கொள்ளாது, உள்நாட்டில் பெரும்பான்மையின மக்களை சூடாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்காக சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சர்வதேச நாடுகளுக்கு சவால்விடுக்கும் வகையிலேயேயும் கருத்துக்கள் அமைந்திருந்தன.

  கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் மரணித்த முஸ்லிம்களை கட்டாய தகனம் செய்தமையும், அதற்காக முன் வைக்கப்பட்ட அதாவது நிலக்கீழ் நீரின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுமென்று இலங்கையினால் தெரிவிக்கப்பட்டமை உலக நாடுகளின் பலத்த விமர்சனத்திற்குள்ளானது. இலங்கையின் இக்கருத்து விஞ்ஞானத்திற்கு மாற்றமானதாககும். புகழ்பெற்ற வைத்தியர்கள் அடக்கம் செய்ய முடியுமென்று விஞ்ஞான விளக்கங்களை வழங்கிய போதிலும், அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் இந்த முடிவு முஸ்லிம் நாடுகளையும், கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளையும் இலங்கையின் மீது அதிருப்தி கொள்ளச் செய்தது. முஸ்லிம்களின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இனவாத ஒடுக்குதல் என்றே சர்வதேசம் கருதியது.

  மேலும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் விருசேகiவின் கருத்துக்கள் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதாகவே அமைந்தது. அவர் புர்கா, நிஹாப் ஆகியவற்றிக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென்றும் தெரிவித்தார். மேலும், இஸ்லாமிய புத்தகங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்றும், ஆயிரம் மத்ரஸாக்களை தடை செய்ய வேண்டுமென்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமன்றி முஸ்லிம்களின் தனியார் சட்டத்திலும் கைவைக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கைகள் முஸ்லிம்களின் சகவாழ்வுக்கு இடையூராகவே அமைந்தது. அரசாங்கத்தினரின் இத்தகைய அறிவிப்புக்கள் முஸ்லிம் விரோத போக்குடைய இனவாதிகளை மகிழ்ச்சிப்படுத்திய போதிலும், சர்வதேச நாடுகளை கோபமடையச் செய்ததென்றே சொல்லுதல் வேண்டும்.

  அயல்நாடாகிய இந்தியாவுடன் நல்ல உறவை பேணிக் கொள்ளவில்லை. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிமாகவுள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் சீனா சார்பு கொள்கையையே பின்பற்றிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படுவதற்குரிய உத்தரவாதம் வழங்கப்ப்பட்டன. பௌத்த இனவாதிகளினதும், தொழிற்சங்க போராட்டங்களினாலும் இந்தியாவுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்கவில்லை. அரசாங்கம் பௌத்த இனவாதிகளுக்கும், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் அடிபணிந்தது. ஆனால், இதன் பின்னணியில் சீனா இருப்பதாகவே இந்தியா தெரிவிக்கின்றது. சீனாவும், இந்தியாவும் போட்டி நாடுகள். இந்நிலையில் இலங்கை சீனாவுக்கு மிகக் கூடிய முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதனை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், இலங்கையை எச்சரிக்கும் வகையில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

  ஆகவே, இலங்கை அரசாங்கம் கண்முன்னே உள்ள ஆபத்தை சமாளிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக பௌத்த இனவாதிகளை திருப்திபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை மிகப் பெரிய இராஜதந்திர பின்னடைவாகும்.

  ஆதரவளித்த நாடுகள்

  இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும், 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

  முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை சீனாவின் வேண்டுகோளுக்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்ட போதிலும், இலங்கைக்கு அனுகூலத்தை உருவாக்கவில்லை. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் விவகாரத்துடன் தொடர்புடைய எதிர்ப்பு நடவடிக்கைகள் முஸ்லிம் நாடுகளின் அதிருப்தியை மேலோங்கச் செய்தது எனலாம். முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பாகிய ஓ.ஐ.சியின் செயலாளர் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றும் போது முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை உட்பட் 04 நாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

  இதனால், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை கடந்த முறைகளைப் போன்று பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள 47 நாடுகளில் 15 நாடுகள் முஸ்லிம் நாடுகள் என்று தெரிவிக்கப்படுகின்றன. இந்நாடுகளில் பாகிஸ்தான், வங்காளதேசம், சோமாலியா, உஸ்பெக்கிஸ்தான் ஆகிய 04 முஸ்லிம் நாடுகளே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

  ஒரு அரசாங்கத்தின் வெற்றிக்கு உள்நாட்டு கொள்கையும், வெளிநாட்டுக் கொள்கையும் மிகச் சரியாக அமைந்திருத்தல் வேண்டும். உள்நாட்டுக் கொள்கையானது நாட்டில் வாழும் எல்லா மக்களையும் நீதியின் வழியிலேயே நடத்தும் வகையில் இருக்க வேண்டும். இலங்கையின் உள்நாட்டுக் கொள்கை பௌத்தர்களை மாத்திரம் அடியொட்டியதாகவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. ஏனைய இனத்தினர் நீதி, சுதந்திரம் என்ற அடிப்படையில் பாதிப்புக்களை சந்தித்துள்ளார்கள். இலங்கை ஏனைய நாடுகளின் உதவியின்றி இயங்க முடியாத அளவுக்கு எல்லாதுறையிலும் பின்னடைவைக் கொண்டதாகும். அதனால், எந்தவொரு ஆதிக்க நாடுகளையும் பகைத்துக் கொள்ளாது, ஒரு நடுநிலைப் போக்கை அதாவது அணிசேராக் கொள்கையை கடைப்பிடிப்பது அவசியமாகும். ஆனால், அரசாங்கம் சீனா சார்பு போக்கைக் கொண்டிருப்பதனை அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சீனா உலகில் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளையும், ஏனைய வல்லரசு நாடுகளை ஓரங்கட்டும் கொள்கை திட்டத்தையும் வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நலன்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதனை தடுப்பதற்காகவே இலங்கையின் மீது அழுத்தங்களை மேற்கொள்கின்றனர். இலங்கையை பணிய வைக்க வேண்டுமென்பதற்காகவே சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் மையப்படுத்தி பிரித்தானியா தலைமையிலான நாடுகள் குற்றப்பிரேரணையை முன் வைத்தன. இக்குற்றப்பிரேரணைக்கு ஏனைய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கையின் உள்நாட்டு கொள்கை சாதகமாக அமைந்துவிட்டதெனலாம்.

  ஆகவே, இலங்கை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தும் நிலையிலிருந்து விடுபட்டு, நாட்டு மக்களை திருப்திபடுத்தவும், சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ளல் வேண்டும்.

  பொருளாதாரத் தடை

  இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதனால் இலங்கையின் மீது பொருளாதார தடை வரலாமென்று தெரிவிக்கப்படுகின்றன. அத்தகையதொரு நிலை ஏற்படுமென்று இப்போதைக்கு சொல்ல முடியாது. இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகள்தான் அதனை தீர்மானிக்கும். மேலும், பொருளாதார தடை விதிக்க வேண்டுமாக இருந்தால் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுதல் வேண்டுமென்று தெரிவிக்கப்படுகின்றன. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ள நாடுகள் உள்ளன. அதனால், சீனா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை பாதுகாத்துக் கொள்ளும்.

  இதே வேளை, ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை பற்றிய தீர்மானத்தின் மூலமாக உடனடியாக பல மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லுவதற்கில்லை. காலங்கள் எடுக்கும். ஆனால், இலங்கையின் மீது அழுத்தங்கள் ஏற்படும்.

  கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் முக்கிஸ்தர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்து ஆதரவைப் பெற்றுக் கொடுத்தார்கள். அத்தகைய முயற்சிகளை இன்றைய ஆட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களினால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதற்குரிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

  பாகிஸ்தானுக்கு நன்றி

  இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் வாக்களித்த 11 நாடுகளில் 04 நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும். அந்த வகையில் இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளது.

  பாகிஸ்தானின் 81வது சுதந்திர தின வைபவத்தில் (23.03.2021) பெருமளவான அமைச்சர்கள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றன. பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே வழக்கத்திற்கு மாறாக அதிக அமைச்சர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர்  மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக்குக்கு தெரிவித்துள்ளார்கள்.

  இலங்கைக்கு எதிரான பிரேரணையை தோற்கடிப்பதற்கு பாகிஸ்தான் அதிக பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.  

  ஆர்வம் காட்டும் அரசாங்கம்

  இதே வேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் உள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றன. அத்தகைய கருத்துக்களை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் அதிக ஆர்வத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றது. அவற்றின் மூலம் கடும்போக்குவாத தேரர்களையும், பௌத்த இனவாத அமைப்புக்களையும் திருப்திபடுத்துவதற்கு அரசாங்கம் முனைந்து கொண்டிருக்கின்றது.

  தமிழ், முஸ்லிம்களின் மனத்தாங்கல்களை புரிந்து கொண்டு, அவர்களின் நல்லெண்ணங்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாது முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் காணிகளை பறிக்கும் நடவடிக்கைகளும், இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை காண்பதற்குரிய நடவடிக்கைகளை மறுதலித்துக் கொண்டிருப்பது கூட இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணமென்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

  இதனிடையே அமைச்சர் சரத்வீரசேகரின் சில கருத்துக்களும் இலங்கையின் நிலைக்கு காரணமென்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை ஆளுந் தரப்பினரில் சிலர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

  மாற்றம் வேண்டும்

  அரசியல் தேவைக்காகவும், பௌத்த இனவாத கடும்போக்காளர்களின் கொள்கைக்காகவும் முஸ்லிம்களுக்கு எதிரானதொரு நிலைப்பாட்டை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  2009ஆம் ஆண்டு இறுதியுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இத்தகையதொரு நிலையை தோற்றுவித்துள்ளார்கள். முஸ்லிம்களின் மத விவகாரங்களை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருப்பதுடன் அவற்றில் பலவற்றை தடை செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் பலவற்றிக்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாதென்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

  ஆதலால், முஸ்லிம்களின் மீதான ஒருதலைப்பட்சமான நிலைப்பாடுதான் இலங்கையில் பின்னடைவுக்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்றன. ஆகவே, ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்று முன் வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதனை செய்யாதிருந்தமை சர்வதேச நாடுகளிடையே பலத்த சந்தேங்களை இலங்கை தொடர்பில் ஏற்படுத்தியுள்ளது.

  இதே வேளை, பிரேரணை நிறைவேறியுள்ளது என்பதற்காக வாழாதிருக்க முடியாது. சிறுபான்மையினரின் மனக் குறைகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளையும், இனவாத செயற்பாடுகளையும் தடுப்பதோடு, இனப் பிரச்சினைக்குரிய தீர்வுகளையும் காண வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள்தான் இலங்கையின் எதிர்காலத்திற்கு தேவையானதாகும். இதற்கு மாற்றமாக இனவாத செயற்பாடுகள் தொடருமாயின் இலங்கை மிகவும் மோசமான பின்னடைவுகளை அடைந்து கொள்வதனை தவிர்க்க முடியாது.

  Thanks : Virakesari 28.03.2021


  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: மாறவேண்டிய கொள்கை Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top