ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் 2019 நவம்பர் ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணியாக இருந்தது. ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக செயற்படுத்த வேண்டும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

தும்முல்லவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்கவில்லை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதம் முடக்கப்பட்டுள்ளதா அல்லது எழுச்சி பெற்றுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் 2019 நவம்பர் ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணியாக இருந்தது. குண்டுத் தாக்குதல் நாட்டில் அதுவரை காலமும் புரையோடி போயிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பகிரஙகப்படுத்தியது.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மகாசங்கத்தினர் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்குகிறார்கள். எமக்கு எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் அவசியமில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம், மத்ரஸா கற்கை முறைமை ஆகியவை குறித்து அரசாங்கம் இதுவரையில் உரியநடவடிக்கைகளை எடுக்கவில்லை.

அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கும் கல்வி முறைமைகள் குறித்து ஏன் இதுவரையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அரச தலைவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளோம்.

பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு மொழி தேர்ச்சி புலமையை கொண்டு நியமனங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை அடிப்படைவாதத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக செயற்படுத்த வேண்டும் இல்லாவிடின் மக்கள் மீண்டும் ஜனநாயக ரீதியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்.