• Latest News

  Jul 22, 2020

  ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் : புலஸ்தினியை பாதுகாப்பாக இந்தியாவுக்குஇ அனுப்பி வைத்தது யார்..? மேலதிகத் தகவல் வெளியானது

  கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய ஹஸ்துன் எனப்படும் பயங்கரவாதியின் மனைவி புலஸ்தினி என அழைக்கப்படும் சாரா சாய்ந்தமருது வெடிச் சம்பவத்தில் உயிரிழந்ததாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
  அத்துடன் அவரை இந்தியாவுக்கு அனுப்பியவர்கள் யார் என்ற தகவலும் கிடைத்திருப்பதாகவும் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  சாய்ந்தமருது சம்பவம் இடம்பெற்றபோது அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றிய சாமந்த விஜயசேகர ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார். சாய்ந்தமருது வெடிச்சம்பவ வீட்டுக்கு முன்னாலிருந்த வீதியிலிருந்து 5 ஆயிரம் நோட்டுக்களை கொண்ட 9 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டபோது இருளில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படும் ரவைகளை கொண்டு ஆகாயத்தை நோக்கி சுடப்பட்டதாகவும் அத்தோடு வெடிச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
  பின்னர் வீட்டை சோதனையிட்டபோது பயங்கரவாதிகள் உட்பட அவரது குடும்பத்தினர் என 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அங்கிருந்த சடலங்களின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தான் உள்ளிட்டோர் வீட்டினுள் நுழைந்து சற்று நேரத்தில் வீட்டின் பின்புற அறையொன்றில் குழந்தையொன்று அலறும் சத்தம் கேட்டதாகவும் அவ்வறையில் காயமடைந்த பெண்ணொருவரும் குழந்தையொன்றும் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
  அவர்கள் சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் மகள் என உறுதிப்படுத்தப்பட்டதாக சாட்சி தெரிவித்தார். சாய்ந்தமருது சம்பவம் தொடர்பாக ஆரம்பம் முதல் விசாரணைகளை நடத்திய தன்னை 2019 ஜுலை 24ம் திகதி திடீரென இடமாற்றம் செய்தமையினால் விசாரணைகளுக்கு தடை ஏற்பட்டதாகவும் சாட்சி தெரிவித்தார். பயங்கரவாதிகள் கிரியுல்ல பகுதியில் வெள்ளை துணி கொள்வனவு செய்யப்பட்டதை தொடர்ந்து சமய வைபவம் ஒன்றை இலக்காக கொண்டு இரண்டாவது தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்திருக்கலாமென்ற சந்தேகம் எழுந்ததாகவும் சாட்சி தெரிவித்தார்.
  2 வது தாக்குதலில் சமய விவகாரங்களை கண்டறிய சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் செய்னி நியமிக்கப்பட்டிருந்தார் அவரது மற்றைய சகோதரருக்கு ஏனைய பகுதிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தாகவும் சாட்சி தெரிவித்தார். இதனடிப்படையில் பயங்கரவாதிகள் மற்றும் அவரது தொடர்பில் உள்ளவர்களை கைதுசெய்வதற்கு இருந்த சந்தர்ப்பம் தனது இடமாற்றத்தின் மூலம் தவிர்க்கப்பட்டதாகவும் சாட்சி தெரிவித்தார்.
  கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் மனைவி புலஸ்த்தினி மஹேந்திரன் அல்லது சாரா தொடர்பாக அண்மையில் அம்பலமான விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அதிகாரியான தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன மாஹில் கந்த சாட்சியமளித்தார். குறித்த பெண் களுவாஞ்சிக்குடி மாங்காடு பகுதியில் மறைந்திருப்பதாக நேரில் கண்ட சாட்சியொருவரின் தகவல்கள் கடந்த ஆண்டு ஜுலை 6 ம் திகதி தனக்கு கிடைத்ததாக தெரிவித்தார்.
  ஜுலை 8 ம் திகதி தான் மட்டக்களப்பு சென்று குறித்த நபரை சந்தித்து மேலும் பல தகவல்கள் பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். அந்த சாட்சி வழங்கிய தகவல்கள் படி சாரா என்பவரை கடந்த செப்ரெம்பர் மாதத்தில் ஒரு தினம் அதிகாலை 3.15 மணியளவில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேத்தா தீவு பகுதியில் கண்டதாகவும் இரண்டு ஆண்களுடன் வீதிக்கு வந்த குறித்த பெண் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளமஞ்சள் நிற பிக்கப் வாகனமொன்றின் பின்புற ஆசனத்தில் ஏறியுள்ளார். குறித்த வாகனத்தின் சாரதியின் ஆசனத்திற்கு அடுத்ததாக தான் அறிந்த மற்றொருவர் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
  அவ்வதிகாரி ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொறுப்பதிகாரியாக இருந்து அண்மையில் கைதுசெய்யப்பட்ட அபூபக்கர் எனும் அதிகாரி என சாட்சி தெரிவித்தார்.
  சாரா என்பவருக்கு படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல இருவர் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாக சாட்சி தெரிவித்தார். அவரின் சிறிய தந்தையும் அவரது சகோதரரும் இதற்கு உதவிசெய்துள்ளனர்
  சாராவின் தாய் தங்கியுள்ள தேத்தாதீவு இல்லத்திற்கு சென்ற போது அவர் அங்கிருக்கவில்லை. எனினும் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் அங்கு தங்கியிருந்ததாகவும் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன மாஹில்கந்த மேலும் தெரிவித்தார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் : புலஸ்தினியை பாதுகாப்பாக இந்தியாவுக்குஇ அனுப்பி வைத்தது யார்..? மேலதிகத் தகவல் வெளியானது Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top