728x90 AdSpace

 • Latest News

  May 24, 2020

  வாழ்வொழுங்குகளை கடைப்பிடித்து முன்மாதிரியான சமூகமாக திகழ்வோம்; கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் பெருநாள் வாழ்த்து

  (அஸ்லம் எஸ்.மௌலானா)
  பல்லின சமூகங்கள் வாழ்கின்ற இத்தேசத்தின் ஓர் அங்கமான முஸ்லிம்கள், வாழ்வொழுங்குகளை பேணி நடப்பதன் மூலம் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியாக திகழ்வோம் என்று கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

  அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

  "மனிதனைப் புனிதப்படுத்துகின்ற நோன்பு எமக்கு கற்றுத்தந்துள்ள அனைத்து நற்பண்புகளையும் இறையச்சத்தையும் முழு வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பதன் மூலமே இறைவன் விரும்புகின்ற நல்லடியார்களாக எம்மால் மாற முடியும். மேலும், நோன்பு நோற்று, ஏழை, எளியவர்களின் பசியையும் கஷ்டங்களையும் உணர்ந்துள்ள நாம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எப்போதும் நேசக்கரம் நீட்டுபவர்களாகவும் வீண் செலவுகளை தவிர்த்து, சமூகத்தின் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும் பயனுள்ள விடயங்களுக்கும் வாரி வழங்குபவர்களாகவும் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  கடந்த வருடம் சதி நாசகார சக்திகளின் வலைக்குள் சிக்குண்ட எம்மில் ஒரு கும்பல், ஏப்ரல்-21 அன்று மேற்கொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, வன்முறைமுகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமையால், எமது கடந்த ரமழான் நோன்பு பெரும் அச்ச சூழ்நிலையில் கடந்து சென்றது.

  அவ்வாறே தற்போது கொவிட்-19 எனும் கொடிய நோய்க்கு மத்தியிலும் முஸ்லிம்கள் மீது இனவாத வெறித்தனமொன்று அரங்கேற்றப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் இவ்வருட ரமழானை நிறைவு செய்திருக்கிறோம். கொவிட்-19 காரணமாக உயிரிழந்த எமது சகோதரர்கள் சிலரும் அத்தொற்று ஏற்படாமல் இயற்கை மரணமடைந்த இன்னும் சிலரும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படாமல், எரிக்கப்பட்ட கொடூர சம்பவங்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் நெஞ்சங்களையும் எரித்து விட்டிருக்கின்றன.

  எவ்வாறாயினும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஆன்மீக ரீதியில் பக்குவப்பட்டிருக்கின்ற முஸ்லிம்கள், தாம் எதிர்கொள்கின்ற துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடித்து, எவரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டி, தேசிய ஐக்கியத்தை உறுதி செய்திடுவோம்.

  மேலும், கொவிட்-19 தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான காலப்பகுதியில் தேச நலன் சார்ந்த விடயங்களில் முஸ்லிம்கள் மிகக் கரிசனையோடு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் இம்முறை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை தமது வீடுகளில் இருந்தவாறே கொண்டாடுவதன் மூலம்  கொவிட்-19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைத்து, எமது முன்மாதிரியை முழு உலகுக்கும் பறைசாற்றுவோம். அத்துடன் உலகைப் பீடித்துள்ள இக்கொடிய நோய் இல்லாதொழிய இத்திருநாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: வாழ்வொழுங்குகளை கடைப்பிடித்து முன்மாதிரியான சமூகமாக திகழ்வோம்; கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் பெருநாள் வாழ்த்து Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top