728x90 AdSpace

 • Latest News

  May 24, 2020

  அநீதிகள் இல்லாதொழிய இந்நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம் - ரிஷாட் பதியுதீனின் “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..

  புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

  “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
   
  கொவிட் – 19 கொரோனாவின் பீதி, நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாத ஆட்சியாளர்களின் போக்கு, தொடர்ச்சியாக சுற்றிவளைக்கும் ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியிலும் ஒரு மாதம் நோன்பிருக்க "அல்லாஹ்" எமக்கு அருள்புரிந்தான். அல்லாஹ்வின் இந்த அருட்பார்வைகள் ஆட்சியாளர்களுக்கும் நாட்டுக்கும் கிடைக்க வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும். இன்று ஈத் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்களும் என்னுடைய இப்பிரார்த்தனையில் இணைந்துகொள்ள வேண்டும்.

  மக்களின் நாளாந்த வாழ்க்கைகள் முடக்கப்பட்டு, உலகமே இயல்பு நிலையை இழந்துள்ளதால், எமது வரலாற்றில் விசித்திரமான ஒரு  சூழலில் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

  மத நம்பிக்கைகளை அடியொற்றிப் பின்பற்றும் அதேவேளை, நாட்டின் சட்ட திட்டங்களையும் மதித்தே, நாம் பெருநாளைக் கொண்டாட வேண்டியுள்ளது. இதுவே, முஸ்லிம்கள் கூட்டுப் பொறுப்புக்களுக்கு உடன்படாதோரெனக் காட்டமுனையும் கெடுதல் சக்திகளை தனிமைப்படுத்தி, அவர்களைத் தோற்கடிக்க உதவும். எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு எமக்கு எதிராக முத்திரை குத்த சில தீய சக்திகள் தருணம் பார்த்திருப்பதை  மனதிற்கொண்டு செயற்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலைமை, எமது எந்தத் தேவைகளையும் பொதுநோக்கிற்கு குந்தகம் ஏற்படாது முஸ்லிம்கள் செயற்படுவதை காலத் தேவையாக்கிவிட்டது. எனினும், பொதுத் தேவைகளுக்கு அறவே குந்தகம் ஏற்படுத்தாத எமது இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி செயற்படவும், முஸ்லிம்களாகிய நாம் தடுக்கப்பட்டமை எமக்கு பெருங் கவலையளிக்கிறது.

  இதேபோன்று எமது தனிப்பட்ட சில செயற்பாடுகளை முடக்கும் நோக்கில், அவற்றைப் பொது உடமைகளில் குறுக்கிடுவதாக முடிச்சுக்கள் போடப்படும் கபட செயற்பாடுகளையும் நாம் கண்டுகொள்ளாமலில்லை. மாற்று அரசியல் கருத்துடைய தலைமைகளை சங்கடத்தில் மாட்டிவிடவும், அத் தலைமைகளை ஆதரிக்கும் சமூகத்தவரின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தவும் இன்றைய நாட்களில் வெளியிடப்பட்ட ஒருதலைப்பட்சமான அரச வர்த்தமானிகள், ஓரவஞ்சனையான அரசியல் கைதுகள் எல்லாம் எமக்கெதிரான கெடுதல் சக்திகளின் மறைமுகத் தூண்டுதல்களாகவே உள்ளன.

  இந்த அநீதிகள் இல்லாதொழிய இந்நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். கெடுதல்காரர்களின் நிகழ்ச்சி நிரலிலிருந்து விடுபட்டு மக்கள், மத நலன்களுக்கு முதலிடம் வழங்கும் மனோநிலைகளை ஆட்சியாளர்களுக்கு ஆண்டவன் வழங்குவானாக. சோதனை ஏற்படும் பொழுதெல்லாம் இறை நம்பிக்கையாளர்கள் தொழுகை, பொறுமையைக் கொண்டே அல்லாஹ்விடம் உதவி தேடுவர். மட்டுமன்றி, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாம் இவ்வநீதிகளுக்கு எதிராக நாடியுள்ள சட்ட நடவடிக்கைகள் வெற்றிபெறச் செயற்படுவதுடன், எல்லாவற்றுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியை நம்பியுள்ளதாகவும் அவர் தனது பெருநாள் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
  ஊடகப்பிரிவு–
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: அநீதிகள் இல்லாதொழிய இந்நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம் - ரிஷாட் பதியுதீனின் “ஈதுல் பித்ர்” நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.. Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top