• Latest News

  Feb 5, 2020

  அதாவுல்லாஹ்வின் கோட்டைக்குள் அலி சப்றியின் ஆட்டம்...! இது யாரால்...?  " இளநீர் அருந்துவது யாரோ, கோம்ப மட்டை சுமப்பது யாரோ " என்ற பழமொழி பற்றி அறிந்திருப்போம். இன்றைய அம்பாறை அரசியல் களத்தில் அதுவே நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. மொட்டு கட்சியினர் மு.அ அதாவுல்லாஹ்வை விட ஒரு தீவிர விசுவாசியை பெற்றிட முடியாது என்பது உலகமறிந்த உண்மை. மஹிந்தவை ஆதரித்தால், தன் சமூகமே தன்னை தூற்றுமென நன்கறிந்தும் தன்னந்தனியே நின்று மஹிந்த அணியினருக்கு ஆதராவான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்.

  இப்போது மீண்டும் மஹிந்த அணியினர் ஆட்சியமைத்துள்ளனர். பதவி, அதிகாரமுள்ள பக்கம் மக்கள் படையெடுப்பதொன்றும் புதிதல்ல. எப்படியாவது தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமல்லவா? அதனை பயன்படுத்தி ஆட்சியின் பக்கமுள்ள அரசியல் வாதிகள் தங்களது அரசியல் இருப்பை உறுதி செய்துகொள்வார்கள். மொட்டு ஆட்சியமைத்தவுடன் எல்லோரும் மு.அ அதாவுல்லாஹ்வை நோக்கி தங்களது பார்வையை செலுத்தினர். அதாவுல்லாஹ்வின் அக்கரைப்பற்று கிழக்கு வாசல் நிரம்பி வழிந்தது.

  இப்போது முஸ்லிம்களின் பார்வை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றியை நோக்கி திரும்பியுள்ளது. அலி சப்றியை பிரதானமாக கொண்டு அதாவுல்லாஹ்வின் கோட்டையான அம்பாறையில் மொட்டு அணியினர் தங்களது பிரச்சாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர். இதனால் அதாவுல்லாஹ் அணியினர் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். மொட்டு கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் கையாளுகை தனக்குள்ளே இருக்க வேண்டும் என்ற அதாவுல்லாஹ்வின் கனவு தவிடு பொடியாகியுள்ளது. அம்பாறை மாவட்ட முஸ்லிம்களிடத்தில் அதாவுல்லாஹ்வையும் மீறி அரசியல் செய்ய முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.

  அலி சப்றியை நோக்கி மக்கள் பார்வை திரும்ப என்ன காரணம் எனும் வினா மிக முக்கியமானது. கடந்த அமைச்சரவை நியமனத்தின் போது முஸ்லிம்களில் யாருமே அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இது பாரிய விமர்சனமாக மாறியிருந்தது. இதற்கு பதிலளித்த சில மொட்டு கட்சியினர் எதிர்வரும் பாராளுமன்றத்தில் அலி சப்றியை தேசியப்பட்டியலினூடாக நுழைத்து அமைச்சும் வழங்கப்படும் என கூறியிருந்தனர். அலி சப்றி என்பவர் முஸ்லிம் சமூகத்திலுள்ள நன்கு படித்தவர்களில் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை. அவருக்கு தேசியப்பட்டியல் கிடைப்பதானது முஸ்லிம் சமூகத்திற்கு மகிழ்வானதொரு செய்தி தான்.

  இதில் மிகவும் முக்கியமான செய்தி மறைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு அமைச்சரவை நியமியுங்கள் எனும் கோரிக்கை வலுத்த போது, அது அலி சப்றிக்கு வழங்கப்படும் என கூறுவதானது மொட்டு அணியினர் முஸ்லிம்கள் சார்பான பிரதிநிதியாக அலி சப்றியையே கருதுவதை அறிந்துகொள்ள முடியும். இதன் பிறகு மொட்டு அணியினர் முஸ்லிம்களின் ஆதரவை அலி சப்றியினூடாக பெறும் வியூகம் வகுத்துள்ளதையும் துல்லியமாக்கின்றது. அப்படியானால், மஹிந்த அணியினருக்கு தனது ஆதரவை நீட்டியதால், தனது அரசியல் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சியை சந்தித்த அதாவுல்லாஹ் போன்றவர்களின் நிலை?

  இதே தேசியப்பட்டியல், அமைச்சு கதையை மு.அ அதாவுல்லாஹ்வை நோக்கி மொட்டு அணியினர் சொல்லியிருந்தால், அதாவுல்லாஹ் அசைக்க முடியாத ஒரு அரசியல் வாதியாக மீண்டும் பரிணமித்திருப்பார். இதற்கு அதாவுல்லாஹ் மிகப் பொருத்தமானவரும் கூட. இவற்றினூடாக மொட்டு அணியினர் அதாவுல்லாஹ் போன்றோரை புறக்கணிப்பதை அறிந்துகொள்ளலாம். இதனை விட நன்றி கெட்ட தனம் வேறு எதுவுமிராது. இதனை புரிந்த கொண்ட மக்கள் அலி சப்றியினை தலையில் சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்போது மக்கள் மு.அ அதாவுல்லாஹ்வை புறக்கணித்து அலி சப்றியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கு காரணம் மொட்டு அணியினரின் செயற்பாடன்றி வேறு ஏதுமல்ல.
  இப்போது " முற்றத்து மல்லிகை மணக்கவில்லையா? " என மக்களை நோக்கி கேள்வி எழுப்புவதில் பயனில்லை. எங்கு பிழையுள்ளதென்பதை தேடி கண்டு பிடித்து நிவர்த்திக்க வேண்டும்.
  துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
  சம்மாந்துறை.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: அதாவுல்லாஹ்வின் கோட்டைக்குள் அலி சப்றியின் ஆட்டம்...! இது யாரால்...? Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top