• Latest News

  Nov 10, 2019

  புதிய ஆட்சியில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் - அமைச்சர் றிசாட் பதியூதீன்

  புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் சிறிபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு முடியும என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
  புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்  இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் தலைமையில் சனிக்கிழமை (9) மாலை நிந்தவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சஜித் பிரேமதாச எதிர்வரும் 16ம் திகதி வெற்றிபெறுவது உறுதி செய்யப்பட்ட ஒரு விடயமாகும். இந்த தேர்தல் ஏனைய தேர்தலைகளைப்போல ஒரு சாதாரண தேர்தலல்ல. அன்னச்சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தான் இந்த நாட்டில் சமாதானம், ஜக்கியம், சகோதரத்துவம், இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும். 
  அமைச்சர்களோ தவிசாளர்களோ வாக்காளர்கள் ஒவ்வொருவரிடம் வந்து இவ்வாறுதான் வாக்களிக்க வேண்டும் என கூறுவதற்கு காலம் போதாது. ஆதலால் படித்த கற்றறிந்த உங்கள் அனைவரினதும் கடமையாக இதனை ஏற்று எவ்வாறு வாக்களிப்பது என்பதனை உங்கள் தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு இதனை ஒரு்சமுதாய பணியாக மேற்கொள்ளவேண்டும். 
  இந்த தேர்தலில் எங்களது வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியுற்றால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியாது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்தை ஆதரிப்பதற்கான காரணம் ஜனநாயகத்தை விரும்புகின்ற ஏனைய சமூகங்களை மதிக்கின்ற முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் அவர்களது சமூக சமய கலாச்சார பண்பாட்டு அம்சங்களை பின்பற்றி ஏனைய சமூகங்களுடன் கெளரவமாக வாழ்வதற்கேயாகும். 
  1200 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி தனது ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொள்ளுவதற்கு முயற்சிக்கவில்லை. 1990 ம் ஆண்டு பலவந்தமாக சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அப்பாவி முஸ்லிம்கள் தொழுகையில் சுஜுதிலே கொல்லப்பட்டார்கள். பேருவள அளுத்கம கண்டி திகன குளியாப்பிட்டிய அம்பாறை மினுவான்கொட போன்ற இடங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் வணக்கஸ்தலங்கள் சேதமாக்கப்பட்டன.
  முஸ்லிம்கள் கடந்த காலங்களில் ஏராளமான  கஸ்டங்கள், துன்பங்களை  அனுபவித்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் முஸ்லிம்கள் அபுஜஹீலுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா அல்லது அபுதாலிபுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா என்பதை சிந்தியுங்கள். எமது பாதுகாப்பை எமது  சமூகத்தின் சுய கெளரவத்தை உறுதிப்படுத்தக்ககூடிய ஓரே வேட்பாளர் சஜித் பிரேமதாச மட்டும்தான். எதிரணி வேட்பாளர் இனவாதத்தை தாரக மந்திரமாக தனது வாக்கு வேட்டைக்கு பயன்படுத்துகிறார். தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு தனது வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ள தந்திரமாக செயற்படுகிறார். 
  சஜித் பிரேமதாசவும்  ஹம்பாந்தோட்டையை சேர்ந்தவர்தான். ஆனால்  சஜித் பிரேமதாசவிடம் உண்மை வெல்லும். சஜித் ஒரு சிறந்த நிர்வாகி. இந்த நாட்டை நிர்வகிக்க பொருத்தமான ஒருவர். 
  திடமான தீர்மானங்களை உடனடியாக எடுக்கக்கூடிய ஒரு சிறந்த அரசியல் தலைவரின் புதல்வர். சாய்ந்தமருது கல்முனைப்பிரச்சினையை நன்கு அறிந்தவர். அந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை பெற்றுத்தருவதாக எம்மிடம் உறுதியளித்துள்ளார். 
  எமது காணிப் பிரச்சினைகளுக்கு புதிய ஆட்சி உருவாகி ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம் ஒரு வருட காலத்தினுள் உடனடி தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார். முஸ்லிம்கள் சமாதானமாக, ஒற்றுமையாக சகவாழ்வுடன் வாழ்வதற்கும் எமது  கல்வி மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கும் எதிர்வரும் 16 ம் திகதி அன்னச்சின்னத்திற்கு வாக்களித்து நமது சமூகக் கடமையினை நிறைவேற்றுவது நம்  ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும், என தெரிவித்தார். 
  அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் பைசால் காசீம், முன்னாள் ஆளுனர் ஆசாத் சாலி, முன்னாள் மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: புதிய ஆட்சியில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் - அமைச்சர் றிசாட் பதியூதீன் Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top