முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவே ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிடுகிறார் என ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
இராஜாங்க அமைச்சர் அலி சாகிர் மௌலானா தெரிவித்தார்.
காத்தான்குடியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு
தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில்
ஆராயும் கலந்துரையாடல் திங்கட்கிழமை இரவு நடைபெற்றபோது அங்கு கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் எம்.முஸ்தபா
தலைமையில் அவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தொடர்ந்து
கருத்துத் தெரிவித்த அவர் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைச்
சிதறடிப்பதற்காகவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுகின்றார். அவரின் இந்த செயற்பாடு
முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகத்தனமான செயலாகும்.
ஆளுநர் பதவியை அவர் இராஜினாமாச் செய்த போது இந்த நாட்டியிலுள்ள முஸ்லிம்
அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று அவருக்காக குரல் கொடுத்தோம்
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைப் பயணத்தை ஆரம்பித்தோம். அந்த ஒற்றுமையை
இன்று ஹிஸ்புல்லாஹ் சீர்குலைத்துள்ளார். முஸ்லிம் சமூகத்தை காட்டிக்
கொடுக்கும் செயற்பாட்டை அவர் செய்திருக்கின்றார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் ஏன்
போட்டியிடுகின்றார். இது யாருடைய நிகழ்ச்சி நிரல் என்பதெல்லாம் மக்களுக்கு
நன்கு தெரிந்த விடயமாகும்.
முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் சஜித் பிரேமதாசாவுக்கு சென்று விடக்
கூடாது என்பதற்காக முஸ்லிம்களுடைய வாக்குகளை சிதறடிக்க வேண்டும்
என்பதற்காகவே அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சஜித் பிரேமதாசாவின்
பக்கம் பல அரசியல் தலைவர்கள் இணைந்து கொண்டு வருகின்றனர் என்றும் அவர்
தெரிவித்தார்.
மெட்ரோ நியூஸ் -
0 comments:
Post a Comment