728x90 AdSpace

  • Latest News

    Jul 7, 2019

    ஒற்றுமையே பலம்


    சஹாப்தீன் -
    முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்து ஒரு மாதம் கடந்து விட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியூதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அத்துரலிய ரத்ன தேரர் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை முன் வைத்தார். அதே வேளை, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அஸாத்சாலி ஆகியோர்களை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றும் அத்துரலிய தேரர் உள்ளிட்ட பௌத்த இனவாதிகளும், கூட்டு எதிர்க் கட்சியினரும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆயினும், நாங்கள் பதவிகளை துறக்கமாட்டோம் என்று மேற்படி மூன்று பேரும் தெரிவித்தார்கள். இந்நிலையில்தான் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்தார். மேற்படி மூன்று பேரும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தால்தான் எனது உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இதே வேளை, பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் நாளை பதவிகளை இராஜினாமாச் செய்யாது போனால் நாட்டில் பெரும் களியாட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை செய்தார். இதனால், தாங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்யாது போனால் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டலாம் எனக் கருதி ஆளுநர்கள் இருவரும் முதலில் தமது பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த அமீர்அலி, அப்துல்லாஹ் மஹ்றூப் ஆகியோர்களும் தமது அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்வதற்கு முடிவு செய்தார்கள். இந்நிலையில் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் வீட்டில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடினர். எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமாச் செய்வதென்று முடிவு செய்து 03.06.2019 அன்று மாலை அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள். இவர்களில் கபீர் ஹாசிம், ஏ.எச்.எம்.ஹலீம் ஆகியோர்கள் 19.06.2019 அன்று அமைச்சர் பதவிகளை மீண்டும் பெற்றுக் கொண்டார்கள். 

    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தமை பௌத்த இனவாதிகளுக்கும், தேரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல சர்வதேச நாடுகளின் கவனத்தையும் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு வழி அமைத்தது. இந்நிலையில் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை தவிர ஏனையவர்கள் அமைச்சர் பதவிகளை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆயினும், கபீர் ஹாசிம், ஹலீம் ஆகிய இருவருமே அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றுக் கொண்டார்கள். 

    அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு ஒரு மாத கால அவகாசத்தை முன் வைத்தார்கள். அக்காலப் பகுதிற்குள் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீது முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து இறுதி முடிவினை அறிவிக்க வேண்டும். ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுதலை செய்ய வேண்டும். முஸ்லிம் பிரதேசங்களில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களின் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும், முஸ்லிம்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மக்களிடையே வன்முறையை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளையும் முன் வைத்தார்கள். 

    தற்போது கைது செய்யப்பட்ட அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள். ஆயினும், முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் மீது அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்காது, சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆயினும், ஏனைய கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீதும், டாக்டர் சிஹாப்தீன் சாபி மீதும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டே இருக்கின்றாhர்கள். அது மட்டுமன்றி முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா மீது பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றுநிருபத்தில் அரச உத்தியோகத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாத நிலை ஏற்பட்டது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு முயற்சியின் விளைவாக சுற்றுநிருபத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு அரச உத்தியோகம் செய்யும் முஸ்லிம் பெண்கள் அபாயா அணி முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து சாதிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆயினும் முஸ்லிம்களின் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே வேளை, றிசாட் பதியூதீன் மீதும், வைத்தியர் சாபி மீதும், ஹிஸ்புல்லாஹ், அஸாத்சாலி ஆகியோர்களின் மீதும் பௌத்த இனவாதிகளும், தேரர்களும், கூட்டு எதிரணியினரும் முன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாதென்று குற்றப் புலானாய்வு பொலிஸார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    இதே வேளை, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்த கால அவகாசம் கடந்து விட்டநிலையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானது, அரசியல் நோக்கத்தை பின்னணியாகக் கொண்டது என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீனும், அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாத வரை அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளுவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இதே வேளை, தாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள். 

    றிசாட் பதியூதீனுக்கு மீண்டும் அமைச்சர் பதவியை வழங்கினால் நாடு பூராகவும் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்துவோம் என்று அத்துரலிய ரத்ன தேரர் எச்சரித்துள்ளார். இவரது இக்கருத்தின் பிரகாரம் றிசாட் பதியூதீன் குற்றம் இல்லாதவர் என்றாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கூடாதென்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகின்றது. இதன் மூலமாக அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்தின் பின்னணியில் உள்ள அரசியலை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதே வேளை, றிசாட் பதியூதீன், வைத்தியர் சிஹாப்தீன் சாபி ஆகியோர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் அறிக்கையில் குற்றங்களுக்கு ஆதாரமில்லை என்றும், குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிநாடுகளின் தலையீடு மூலமாக விசாரணைகள் நடைபெற வேண்டும். வைத்தியர் சிஹாப்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறி;த்தான விசாரணைகளின் போது குற்றப் புலனாய்வு பிரிவினர் வைத்தியசாலையின் சாட்சியமளித்த அதிகாரிகளையும், ஏனையவர்களையும் அச்சுறுத்தியுள்ளார்கள். இதனால் உண்மைகள் மறைக்கப்பட்;டுள்ளன என்று அத்துரலிய தேரர் தெரிவித்துள்ளார். 

    அத்துரலிய ரத்ன தேரரின் இத்தகைய எச்சரிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்கள் றிசாட் பதியூதீன் அமைச்சர் பதவியை மீணடும் ஏற்றுக் கொண்டால், அதனை சாட்டாக வைத்து நாட்டில் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதனால் றிசாட் பதியூதீன் அமைச்சர் பதவியை இப்போதைக்கு எடுக்காதிருப்பதே சிறந்த முடிவாக இருக்கும். இதனால்தான் றிசாட் பதியூதீன் அமைச்சர் பதவியை எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வருவதற்கும் காரணமாகும். றிசாட் பதியூதீனின் இந்த முடிவு ஏனைய முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது. முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தமை சமூகத்திற்காக என்றிருந்தாலும், அந்த கூட்டுப் பொறுப்புச் செயற்பாட்டின் பின்னணியில் முஸ்லிம் கட்சிகளினதும்,  பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசியலும் இணைந்துள்ளது. அதாவது, றிசாட் பதியூதீன் மீது பௌத்த இனவாதிகளும், அத்துரலிய ரத்ன தேரர், பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, எஸ்.பி.திஸாநாயக்க, உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் அரசியல் நோக்கங்களுக்காக குற்றச்சாட்டுக்களை முன் வைத்ததனால் முஸ்லிம்கள் மத்தியில் றிசாட் பதியூதீன் மீத அனுதாபம் ஏற்பட்டது. 

    அதே வேளை, றிசாட் பதியூதீன் தன் மீது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அவருக்கு அரசியல் ரீதியான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது என்பது பொய்யான கூற்றல்ல. இந்நிலையில் றிசாட் பதியூதீனும், அவரது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தால் முஸ்லிம்கள் மத்தியில் றிசாட் பதியூனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் அதிக செல்வாக்கை ஏற்படுத்திவிடும். அது மட்டுமல்லாது அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களிடையே றிசாட் பதியூதீன் பற்றிய பேச்சுக்கள் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் றிசாட் பதியூதீனின் இராஜினாமா முஸ்லிம் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை தோற்றுவித்தது. 

    இத்தகையதொரு நிலை தமது அரசியல் இருப்பை மேலும் பலவீனப்படுத்திவிடும் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உணர்ந்து கொண்டார். இதனால்தான், றிசாட் பதியூதீன் மாத்திரம் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யக் கூடாது. முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் பதவிகளை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். இவரது இந்த முயற்சிக்கு ஆரம்பத்தில் முஸ்லிம் அமைச்சர்களிடையே ஆதரவு இருக்கவில்லை. ஆயினும், றிசாட் பதியூதீனின் இராஜினாமா ஏற்படுத்த இருக்கும் அரசியல் மாற்றத்தை விளக்கிய போது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள் உட்பட ஏனையவர்களும் தள்ளப்பட்டார்கள். ஆயினும், இவர்களின் இராஜினாமாக்கள் பௌத்த இனவாதிகளின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது. 

    முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாக்களில் சமூக தேவையும், அரசியல் தேவையும் இருந்ததனைப் போன்று, அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதில் சமூக தேவையை விடவும், அரசியல் தேவை அதிகமாகவே முஸ்லிம் கட்சிகளுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டுள்ளன. றிசாட் பதியூதீனும், அவரது கட்சியினரும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்ற முடிவு, இன்றைய அரசியல் சூழலில் பாதுகாப்பான முடிவாகும். பௌத்த இனவாதிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தடைக் கல்லாகவும் அமையும். அதே வேளை, குற்றச்சாட்டுக்களுக்கு உட்படாத முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டால் முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸிற்கும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாது அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று றிசாட் பதியூதீன் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கும் சாதகமாக அமைந்துவிடும். இந்த சிக்கல் நிலையிலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

    இதே வேளை, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விதித்த காலக்கெடு முடிவடைந்திருந்தாலும், குற்றச்சாட்டுக்கள் போலியானது, அரசியல் நோக்கத்தைக் கொண்டதென்று தெரியவந்துள்ள போதிலும், பௌத்த இனவாதிகளினதும், இனவாத தேரர்களின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. முஸ்லிம்களிடையே காணப்படும் அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும். அபாயா, ஹலால் உணவு, மத்தரஸாக்கள் அகற்றப்பட வேண்டுமென்ற கோசங்களை பௌத்த இனவாத அரசியல்வாதிகளும், தேரர்களும் எழுப்பிய வண்ணமே இருக்கின்றார்கள். ஆகவே, முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்று தெரியவந்துள்ள நிலையில், முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டு வருகின்றார்கள். இதன் மூலமாக முஸ்லிம் விரோத மற்றும் இனவாதக் கருத்துக்களை தொடர்ச்சியாக முன் வைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்று தெளிவாகின்றது. இத்தகைய குற்றச்சாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. அதே வேளை, பௌத்த இனவாதிகளினதும், அரசியல்வாதிகளினதும், தேரர்களினதும் முஸ்லிம் விரோத மற்றும் இனவாத நடவடிக்கைகளின் பின்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்தராஜபக்ஷவும் இருப்பதாக ஆளுந் தரப்பினரால் குற்றம்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், முஸ்லிம் விரோத மற்றும் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அரசியல்வாதிகளும், பௌத்த தேரர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தராஜபக்ஷ ஆகியோர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீது ஆளுந் தரப்பினர் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்களை தட்டிக் கழிக்க முடியாததாக இருக்கின்றது.

    இவ்வாறு இலங்கை அரசியல் சடுகுடு நிலையை அடைந்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்படுதல் வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமையான போக்கு தேர்தலிலும் தொடர வேண்டுமென்று முஸ்லிம்களிடையே பரவலான பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆயினும், இந்த ஒற்றுமையை ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் போட்டி, பொறாமை அரசியலையே மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்கள் கொழும்பிலும், ஊடகங்களிலும் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டாலும் தமது பிரதேசங்களில் வேற்றுமையை மேலும் வளர்க்கும் செயற்பாட்டையே முன்னேடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நிந்தவூர் பிரதேசத்தில் கல்வி அமைச்சின் அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை 2016 – 2020 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடங்களை திறக்கும் வைபவத்திற்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை அதிதிகளில் ஒருவராக அழைக்கக் கூடாதென்று குறிப்பிட்டு பாடசாலைகளின் அதிபர்களை அங்குள்ள அரசியல்வாதிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அமைய அதிபர்கள் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதே வேளை, குறிப்பிட்ட பாடசாலையின் அதிபர்கள் தங்களின் நிலையை நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரிடம் விளக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. நிந்தவூரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து இப்பிரதேச மக்கள் அதிருப்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமைப்பட வேண்டுமென்று பொது மக்கள் விரும்பிக் கொண்டிருக்கும் நிலையிலும், அதற்காக பிராத்தனைகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென்றும் பேசிக் கொள்கின்றார்கள்.
    முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளும், கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தேவைக்காக இனவாத கருத்துக்களையும், பொய்களையும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகம் சார்ந்த விடயங்களில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இதற்கு பிரதேசங்களில் நடைபெறும் விழாக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விழாக்களை அரசியல் மயப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுப்பதனை தவிர்க்க வேண்டும். 

    கடந்த காலங்களில் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் நடத்திய போது, அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்காத போது, சட்டம் அதன் கடமையை செய்வதில் காலதாமதத்தைக் காட்டிய போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை. அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ளும் விதமாகவே நடந்து கொண்டார்கள். இதனால் முஸ்லிம்களின் மீது மேலும் தாக்குதல்கள் நடைபெற்றன. ஆனால், தற்போது அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்து ஒற்றுமையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையை முஸ்லிம்களும், ஏனைய சமூகத்தினரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், இந்த ஒற்றுமை கொழும்பில் மாத்திரம் இருந்தால் போதாது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுவதில் மட்டும் இருந்தால் போதாது, பிரதேச மட்டங்களிலும் இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தை ஒரு இலக்கை நோக்கி வழிநடத்த வேண்டுமாயின் முதலில் பிரதேச மட்டத்தில் உள்ள மக்கள், அரசியல்வாதிகளிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும். முரண்பாடுகள் கலையப்பட வேண்டும். இதற்கு மாற்றமாக கொழும்பில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று காட்டிக் கொண்டாலும் அது ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.
    வீரகேசாி 07.07.2019
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒற்றுமையே பலம் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top