728x90 AdSpace

 • Latest News

  Jul 7, 2019

  முஸ்லிம்களை ஒரு கைபார்த்தல்


  எஸ்.றிபான் - 
  பௌத்த பேரினவாதிகளும், கடும் போக்கு இனவாத பௌத்த தேரர்களும் முஸ்லிம்களை ஒரு கை பார்த்தாக வேண்டுமென்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல் இருக்கின்றது. தங்களின் அதிகார வெறிக்கு முஸ்லிம்களை பலியாக்குவதற்கு இனவெறியை கையில் எடுத்துள்ளார்கள். முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டுமென்பதே பௌத்த கடும்போக்கு இனவாத தேரர்களின் பிரதான குறிக்கோளாக இருக்கின்றது. அதே வேளை, இவர்களின் இந்தச் செயற்பாடுகளின் மூலமாக அரசியல் இலாபம் தேடிக் கொள்வதற்கு இனவாத அரசியல்வாதிகள் முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். அரசியல் வங்குரோத்துக்காரர்களின் இறுதி ஆயுதமே இனவாதமாகும். இலங்கையில் இனவாத அரசியல் என்பது இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தோன்றிவிட்டது. வளமிக்க இலங்கை போன்று எமது நாட்டையும் மாற்றுவோம் என்று சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் அன்று தெரிவித்தன. அந்நாடுகளில் இனவாதம் இல்லாத காரணத்தினால் அவை எல்லாத்துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், வளங்களை இயற்கையாகப் பெற்றுள்ள இலங்கையின் அரசியல் தலைவர்களும், பௌத்த தேரர்களும் இனவாதத்தை கையில் எடுத்துக் கொண்டமையால் இலங்கை தேய்வடைந்து கொண்டு வருகின்றது. இன்று இலங்கையை சிங்கப்பூர் போன்று மாற்றுவோம் என்று சொல்ல வேண்டிய அவல நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இனவாதம்தான் இந்த நாட்டை பாழாக்கியுள்ளது என்பதனை தெளிவாக பெரும்பான்மையின அரசியல்வாதிகளும், தேரர்களும் உணர்ந்துள்ள போதிலும் இனவாதத்தை விட்டு விலக முடியாத நிலையிலேயே இருக்கின்றார்கள். சிறுபான்மையினருக்கு எதிராக இனவாதம் பேசி அரசியல் அதிகாரத்தைப் பெற்றவர்கள், தற்போது தமிழர்களை அரவணைத்துக் கொண்டு, நண்பர்கள் போன்று நடித்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய அரசியல் சூழலில் நடைபெறும் உண்ணாவிரதம், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீதும், பள்ளிவாசல்கள் மீதும், மத்ரஸாக்கள் மீதும், மதவிழும்மியங்களின் மீதும் குற்றச்சாட்டுக்களை வைத்து பௌத்த இனவாத தேரர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகளும், பெரும்பான்மையின அதிகாரிகளும்; உந்து சக்தியாக இருந்து வருகின்றார்கள். இவ்வாறு எல்லாத் திசைகளிலும் காலத்திற்கு காலம் சிறுபான்மையினர் மீது இனவாத விரோதக் கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கும் நாடு எவ்வாறு பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும், சிங்கப்பூர் போன்று ஜொலிக்கும் என்று எவ்வாறு சொல்ல முடியும். இதே வேளை, வல்லரசு நாடுகளின் ஆடுகளமாக இலங்கை மாறியுள்ளது. இதனை பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.


  கருத்தடை

  முஸ்லிம்கள் சிங்களவர்களின் பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம் கடைகளில் சிங்களவர்கள் வாங்கும் கொத்து ரொட்டியில் கருத்தடையை செய்யக் கூடிய மாத்திரைகளை கலக்கின்றார்கள். முஸ்லிம் சாப்பாட்டுக் கடைகளில் கருத்தடையை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகளை உணவில் சேர்க்கின்றார்கள். அதுமட்டுமல்லாது, முஸ்லிம்களின் உடுதுணிக் கடைகளில் விற்கப்படும் பெண்களின் உள்ளாடைகளில் கருத்தடையை ஏற்படுத்தக் கூடிய இராசாயன மருந்தைத் தடவியுள்ளார்கள். அதனால், முஸ்லிம்களின் கடைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென்று பௌத்த இனவாதிகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். போஸ்டர்களை அடித்து காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 
  இவர்களின் இக்குற்றச்சாட்டுக்கள் பொய்யானது. விஞ்ஞான அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாதவை. கருத்தடைகளை இவ்வாறு செய்ய முடியாதென்று வைத்தியர்கள் பலரும் தெரிவித்துக் கொண்ட போதிலும் அதனை நம்பாது இருப்பதற்கு சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் இருப்பதுதான் இந்த நாட்டிற்கு இருக்கின்ற மிகப் பெரிய சாபமாகும். ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் விழிப்படையாத நிலை தொடர்ந்து கொண்டிருக்குமாயின், அந்த சமூகத்தில் ஏமாற்றுக்காரர்களும், கொலைகாரர்களும், இனவாதிகளும், ஊழல்வாதிகளும் நல்லவர்கள் போன்று காட்சியளிப்பார்கள். மக்களும் அவர்களின் பின்னாலேயே அணிதிரளுவார்கள். இத்தகையதொரு நிலையையே நாம் இலங்கையில் கண்டு கொண்டிருக்கின்றோம். 

  முஸ்லிம்கள் சிங்களவர்களின் பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று நம்புவதற்கு அமைச்சரும், பௌத்த இனவாத அமைப்புக்களின் தோற்றத்திற்கு காரணமானவருமான சம்பிக்க ரணவக்க எழுதிய அல்-ஜிஹாத், அல்-ஹைதா எனும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள போலியான விசமக் கருத்துக்களே முக்கிய காரணமாகும். அந்நூலில் 2090ஆம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள். அதற்குரிய நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என்று எழுதியுள்ளார்கள். அதுமட்டுமன்றி இலங்கையை 2020ஆம் ஆண்டில் ஒரு தூய்மையான பௌத்த நாடாக மாற்ற வேண்டுமென்று சம்பிக்க ரணவக்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவரின் இந்த இலக்கை அடைய வேண்டுமென்று பௌத்த இனவாத தேரர்களும் இவருடன்; இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவருடைய புத்தகத்தில் உள்ள இத்தகைய கருத்துக்கள் சிங்கள பௌத்தர்களை நம்பும் படியாக்கியுள்ளது. இந்நூலில் முஸ்லிம்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ளவை போலியானது என்று நிருபிப்பதற்கு முஸ்லிம் தரப்பிலிருந்து எந்தவொரு நூலும் வெளியிடப்படவில்லை. வாயால் வடை சுடும் சமூகமாகவே முஸ்லிம்கள் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றார்கள். 

  முஸ்லிம்கள் கொத்துரொட்டி, ஏனைய உணவு வகைகள், உள்ளாடை ஆகியவற்றின் மூலமாக சிங்களவர்களின் இனப்பெருக்கத்தை தடை செய்கின்றாhகள் என்பது போலியான குற்றச்சாட்டு என்று மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ஆய்வுகளின் ஊடாகவும் நிருபிக்கப்பட்டன. இதனால், குற்றச்சாட்டுக்களை முன் வைத்தவர்களின் இனவாதத் திரை கிழிக்கப்பட்டுள்ளது. 

  இந்நிலையில்தான், குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர் முஹம்மட் சிஹாப்தீன் சாபி சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டிருக்கின்றார். அவர் 04 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு இவ்வாறு செய்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டியவர்கள் பின்னர் 08 ஆயிரம் பேருக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்துள்ளார் என்று தெரிவித்தார்கள்.
  இந்தக் குற்றச்சாட்டும் பொய்யானதென்று பல்வேறு தரப்பு விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கியுள்ள 210 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் கூட டாக்டர் சாபியின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வெளிநாட்டு விசாரணை வேண்டும்

  இதே போன்று முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூதீன், முன்னாள் ஆளுநர்கள் அஸாத்சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்களுக்கும் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கும் தொடர்புள்ளதென்று பௌத்த இனவாதிகள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். இவர்களின் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் கிடையாதென்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

  அரசியல் காழ்;ப்புணர்ச்சி காரணமாகவே இவர்களின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்கள். இந்நிலையில் உண்ணாவிரதம் மூலமாக எதனையும் சாதித்துக் கொள்ளலாமென்று அதீத நம்பிக்கை வைத்துள்ள அத்துரலிய ரத்ன தேரர் றிசாட் பதியூதீனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுமாயின் நாடு பூராகவும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அத்துரலிய ரத்ன தேரான் நோக்கம் தெளிவாகின்றது. அதாவது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் கூட்டு எதிர்க்கட்சியின் திட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதனால்தான் றிசாட் பதியூதீனுக்கு அமைச்சர் பதவி வழங்கக் கூடாதென்று தெரிவித்துள்ளார். 

  மேலும், அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்ட பௌத்த இனவாத தேரர்களும், அரசியல்வாதிகளும் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் போலியானது, ஆதாரமற்றதென்று தெரியவந்துள்ள நிலையில், குற்றம் புலனாய்வினரின் அறிக்கையை நம்ப முடியாது. குருநாகல் போதனா வைத்தியசாலையில் டாக்டர் சாபி குறித்து மேற்கொள்ளப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவினரின விசாரணைகளின் போது வைத்தியசாலையில் சாட்சியமளித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இதனால், அவர்கள் உண்மையான தகவல்களை வழங்கவில்லை என்று அத்துரலிய ரத்ன தேரர் குற்றப் புலனாய்வு பிரிவின் மீது குற்றம் சுமத்தி நாட்டில் மற்றுமொரு புரளியை கிளப்பியுள்ளார். தங்களினால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வெளிநாடுகள் விசாரிக்க வேண்டுமென்ற கோணத்தில் கருத்துக்களை முன் வைத்துள்ளார். 

  தாங்கள் நினைத்தது போன்று நடக்காது போனால் எந்தப் போலியான குற்றச்சாட்டையும் முன் வைப்பார்கள். அதற்கு சாதகமாக விசாரணை அறிக்கைகள் அமையாது போனால், விசாரணை அறிக்கையையே ஏற்றுக் கொள்ள முடியாதென்று இந்நாட்டின் நீதித்துறை மற்றும் பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றும் தெரிவிக்கின்றார்கள். அத்துரலிய ரத்ன தேரரின் கருத்து இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போதும், யுத்த காலங்களிலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை வெளிநாடுகளே விசாரிக்க வேண்டும். இலங்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தமிழர் தரப்பினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அத்துரலிய ரத்ன தேரரின் கருத்து தமிழர் தரப்பினரின் கோரிக்கைகளை நியாயப்படுத்துவதாக இருக்கின்றது. இதே வேளை, தமிழர் தரப்பினர் வெளிநாட்டு தலையீடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற வேண்டுமென்று தெரிவித்த போது அத்துரலிய ரத்ன தேரர் போன்றவர்கள் அதனை கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால், தாங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்கள் போலியானது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில தங்களின் மீதான பலியை மறைப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மீது அவநம்பிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

  எண்ணெய் ஊற்றல்

  இவ்வாறு பௌத்த இனவாதிகளும், இனவாத தேரர்களும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீத நம்பிக்கையிழந்துள்ளார்கள். அதே வேளை, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இனவாத நடவடிக்கைகளை ஐ.நா உள்ளிட்ட சர்தேச அமைப்புக்களும், சர்வதேச நாடுகளும் கண்டித்துக் கொண்டிருக்கின்றன. அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். உண்ணா விரதப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், அவசர காலச் சட்டம் முஸ்லிம்களின் மீதே அதிக அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

  அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்காது பௌத்த தேரர்களின் போலியான குற்றச்சாட்டுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இனவாhத்தின் உச்சக் கட்டம்தான் அரபு மொழிக்கு எதிரான கோசமாகும். ஒரு (அரபு) மொழியின் ஊடாக பயங்கரவாதம் பரவுகின்றதென்ற புதியதொரு கண்டு பிடிப்பை இலங்கையிலுள்ள பௌத்த இனவாதிகளே கண்டு பிடித்துள்ளார்கள். 
  இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த இனவாதிகள் 2009ஆம் ஆண்டிற்கு முதல் தமிழர்களுக்கு எதிராகவே மிகவும் மோசமான இனவாhதத்தை மேற்கொண்டார்கள். இப்போது தமிழர்களையும், முஸ்லிம்களையும் நிரந்தர பகையாளர்களாக மாற்றி, இந்த இரண்டு இனங்களையும் மோதவிடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். 

  முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே உள்ள பிணக்குகள், முரண்பாடுகளை கையில் எடுத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் பிணக்குகள், பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துத் தருகின்றோம் என்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதவிடுவதற்காக இவ்வாறு செயற்படுகின்றார்கள என்று தெரிந்தும் அல்லது தெரியாமலும் இருந்து கொண்டு பௌத்த இனவாதிகளை துணைக்கு அழைத்து முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர் தரப்பில் ஒரு குழுவினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் கூட்டு எதிரணியினரின் வலைக்குள் நின்று கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளின் மீது எண்ணெய் ஊற்றி மேலும் பற்ற வைப்பதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்று தமிழர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக கல்முனை p சுபத்திராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் இணைந்து கொண்டார். அதுமட்டுன்றி மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தஞான சாரத் தேரர், அத்துரலிய ரத்ன தேரர் ஆகியோர்கள் கல்முனைக்கு வருகை தந்து, தமிழர்களே உங்களின் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துத் தருகின்றோம் என்று உறுதி மொழியும் வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் தமிழர்களின் பிரச்சினைகைளை தீர்க்க வேண்டுமென்று வரவில்லை. தமிழர்களையும், முஸ்லிம்களையும் நிரந்தர பகையாளர்களாக்கி, தமிழர்களும், முஸ்லிம்களும் 1990ஆம் ஆண்டுகளின் பின்னர் மோதிக் கொண்டதனைப் போன்று மோதவிடுவதற்காகயன்றி வேறில்லை.

  முஸ்லிம்களின் மீது முன் வைத்துக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றாக வலுவிழந்து போய்க் கொண்டிருக்கும் நிலையில், பௌத்த இனவாதிகளினால் நாட்டில் ஏற்படுத்திய கொந்தளிப்பு நிலை படிப்படியாக ஓய்ந்து கொண்டிருக்கின்றது. இதனை ஞானசார தேரருக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டை தொடர்ந்தும் கொந்தளிப்பு நிலையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வரைக்கும் நீடிக்க வேண்டும் என்பதே திட்டமாகும். இதற்காகவே அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாரோ என்று எண்ணும் படியாக அவரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. 

  ஞானசார தேரர் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக கண்டி தலதா மாளிகையின் முன் வாசலில் 10 ஆயிரம் பிக்குகளையும், ஒரு இலட்சம் பொது மக்களையும் எதிர்வரும் 07ஆம் திகதி ஒன்று திரட்டிப் இஸலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகப் போராட உள்ளதாக தெரிவித்துள்ளார். சிவ்ஹெல மஹா அமுலுவ எனும் தொனிப் பொருளிலேயே இந்நடவடிக்கையை ஞானசார தேரர் மேற்கொண்டுள்ளார். 
  இவரின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென்று தெரிவிக்கப்படுகின்றது. இதனை தடுக்கும் நடவடிககைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். அவசரகாலச் சட்டத்தின் கீழ் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். 

  முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்பட உள்ளோம் என்று தெரிவிக்கின்ற இவர்கள் பௌத்த அடிப்படைவாதத்திற்கும், இந்து அடிப்படைவாதத்திற்கும் எதிராக போராட வேண்டும். அடிப்படைவாதம் முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளதாகவே மக்களுக்கு காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

  அடிப்படைவாதம்

  பொதுவாக என்று அடிப்படைவாதம் எனும் கருத்தாடல் பிழையாகவே பயன்படுத்தப்படுகின்றன. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒரு முஸ்லிம் பின்பற்றி நடந்தால் ஒரு போதும் அவன் குற்றச் செயல்களைச் செய்யமாட்டான். அது போலவே ஏனைய மதங்களின் அடிப்படையை பின்பற்றி ஒருவர் வாழும் போது தீய காரியங்களில் ஈடுபடமாட்டார். ஆகவே, அடிப்படைவாதம் என்பது ஒரு மதத்தினை பின்பற்றுவோருக்கு இருக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால், எல்லா மதங்களையும் பின்பற்றுவோரிடையே தீவிர சிந்தனைப் போக்குடையவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் வலிமையால், மற்றவர்களை அச்சுறுத்தி தமது இலக்கை அடையலாம். தமது சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இல்லாமல் செய்யலாமென்று நம்புகின்றார்கள். இவர்களையே இன்று உலக அளவில் அடிப்படைவாதிகள் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகையவர்கள் முஸ்லிம்களிலும் உள்ளார்கள். இவர்களின் நடவடிக்கைகளுக்கும், இஸ்லாமிய தத்துவத்திற்கும், அடிப்படைக்கும் சம்பந்தமே கிடையாது. 

  எனவே, பௌத்த இனவாதிகள் தங்களின் சுய இலட்சிகங்ளை முஸ்லிம்களை பலியாக்கியே அடைந்து கொள்ள முடியுமென்று நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அதற்கேற்றவாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கமும், பேரினவாத அரசியல் தலைவர்களும் இவர்களை பகைத்துக் கொள்ளக் கூடாதென்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, இனவாத நடவடிக்கைகளின் மூலமாக தாங்கள் எவ்வாறு அரசியல் இலாபம் அடைந்து கொள்ளலாம். அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்று திட்டமிடுகின்றார்கள். ஆனால், முஸ்லிம் தலைவர்கள் இனவாத நடவடிக்கைகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று திட்டமிடுவதற்கு பதிலாக ஒற்றுமைப்படுமாறு அழைக்கின்றார்கள். திட்டமிடப்படாத ஒற்றுமை, வேற்றுமையை விடவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆதலால், இன்றைய நெருக்கடியான சூழலில் முஸ்லிம்கள் திட்டமிட்டு செயற்படுதல் வேண்டும். அதற்காக ஒற்றுமைப்பட வேண்டும்.
  விடிவெள்ளி 05.07.2019
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: முஸ்லிம்களை ஒரு கைபார்த்தல் Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top