728x90 AdSpace

 • Latest News

  Jun 3, 2019

  மேலாண்மைத் திணிப்புக்குள் பயங்கரவாதப் பிழைப்பு!

  (சுஐப்.எம் .காசிம்)
  பயங்கரவாதத்தை விடவும் பாரிய அதிர்ச்சியூட்டும் கருத்தாடல்களாகவே மேலாண்மைவாதத்தை கருத வேண்டியுள்ளது.அடிப்படைவாதம் கடும் போக்குவாதமாக வளர்ச்சியுற்று, கடும்போக்கின் பரிணாமம் தீவிரவாதமாகி,பின்னர் இது பயங்கரவாதமாக விஸ்வரூபமெடுப்பதற்கான அனைத்து வித்திடல்களும் பெரும்பான்மை மேலாதிக்கத்திலிருந்தே பிறக்கின்றன.ஈஸ்டர் தினக் குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நாட்டுத் தலைவர்களின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ள நிலையில்,ஒரு சில மேலாண்மைப் போக்கினர் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளதால், ஜனநாயகத்தின் பொது எதிரியான பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசின் செயற்பாடுகளைத் தடுமாற வைத்துள்ளன.
  ஜனநாயக விரோதிகளே இந்த அரசியல் நிகழ்ச்சிகளைக் கையிலெடுத்துள்ளதால், இவர்களின் சுயரூபங்களைப் புரிந்துகொள்வதற்கு பெரும் வாய்ப்பாகியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான தேரர்,தூக்கிப்பிடித்துள்ள கோஷம் நாட்டுப்பற்றுக்கான அடையாளமாகத் தென்படவில்லை.தேசப்பற்றுள்ள ஒருவர் நடந்து கொள்ளும் முறையாகவும் அவரது செயற்பாடுகள் அமையவில்லை.அவசரகாலச் சட்டத்தை அமுல் படுத்தி எஞ்சிப்போயுள்ள பயங்கவரவாதத்தின் எச்சங்களை அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கையில் பாராளுமன்ற உறுப்பினரான இவர் நடந்து கொள்ளும் முறையானது வெண்ணெய் திரள்கையில் தாழியை உடைப்பதைப் போலுள்ளது. எம்.பிப் பதவி என்பது மூன்று கருத்தாடல்களாகக் கொள்ளப்படுகிறது. Member of people மக்கள் பிரதிநிதி, Member of parliament பாராளுமன்றப் பிரதிநிதி, Member of party கட்சியின் பிரதி நிதியாகவே கருதப்படுகிறது. நேரடியாகத் தெரிவாகின்றவர் மக்கள் பிரதிநிதியாகவும், மாவட்டத்தை வென்றதற்காகக் கிடைக்கும் போனஸ் ஆசனம் பாராளுமன்றப் பிரதிநிதியாகவும், தேசியப் பட்டியலூடாகச் செல்பவர் கட்சியின் பிரதிநிதியுமாகவே கருதப்படுகிறார்.
  ஒக்டோபர் சதிப் புரட்சியில் மேலாண்மைவாதிகளின் சதியில் சிக்கி,கட்சிதாவிய இவர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசாங்கத்தை உருவாக்கப் பகிரங்கமாக முயன்றிருந்தார்.சுமார் 61 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குள் குறுக்கிட்டு சட்டவிரோத ஆட்சிக்காக உழைத்த இவரை,எவ்வாறு ஜனநாயகவாதியாகக், கருதுவது. விசுவாசத்திற்காக வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பதவியை பேரினவாதத்துக்குத் தாரைவார்த்தோரை எவ்வாறு தேசப்பற்றாளராக் கொள்வது? அமைச்சர் ரிஷாத்பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தவரும் இவர்தான்,பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைக்கும்படி அழுத்தம் கொடுத்தவரும் இவர்தான்.இப்போது இத்தனைனையையும் மீறி உண்ணாவிரதமிருக்கிறார். இவ்வாறு இருப்பதற்கான தேவை அவசரமாக இவருக்கு ஏன் ஏற்பட்டது.பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், தெரிவுக் குழுவின் விசாரணை அறிக்கைகள் வௌியானதன் பின்னர் ஏதாவது தீர்மானத்துக்கு வந்திருக்கலாமே? ஜனநாயக நடவடிக்கைகளில் நம்பிக்கையிருந்திருந்தால்,இந்த அவசரம் ஏற்பட்டிருக்காது. ஜனநாயகரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை,பிரதமரின் நம்பிக்கையால் அமைச்சராக்கப்பட்ட ஒருவரை தனிப்பட்ட ஒருவரின் கோரிக்கைக்காகப் பதவி நீக்கமுடியாது.அதிலும் ஜனநாயகத்துக்குச் சாவுமணி அடிக்கத்துடிக்கும் ஒரு சிலரின் சதிகளுக்காக,மக்களால் தெரிவான அரசாங்கம் அடிபணிய முடியாது.வாக்கெடுப்பில் தோற்ற பின்னரும் குறித்த அமைச்சர் பதவி விலகாதிருந்தால்,பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை, அமைச்சரையோ,அல்லது ஆளுநர்களையோ குற்றம் கண்டிருந்தும் அவர்கள் பதவிவிலக மறுத்தால்,அல்லது பதவி விலக்க,அரச தலைவர்கள் இணங்காதிருந்தால்,எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. மாறாக இத்தனை ஜனநாயகப் பண்புகளையும் மீறி ஒக்டோபர் அரசியல் புரட்சியியின் தோல்வியை, ஜனநாயக விழுமியங்களில் திணிக்க முயல்வது சர்வதேசச் சட்டம் பொது மக்களுக்கு வழங்கிய வாக்குரிமைகளைக் குழி தோண்டிப் புதைப்பதாகவே அமையும். எதிர்வரும் காலங்கள் தேர்தல் சீசனாக உள்ளதால்,கடும்போக்கு வாக்குகளை உசுப்பி ஒரு பக்கம் அணிதிரள வைக்கும் பெரும்பான்மை மேலாண்மைவாதிகள் இதற்குப் பின்னாலுள்ளதை, நாளாந்தம் ஒவ்வொரு திசைகளிலிருந்தும் எழும்பும் முஸ்லிம் மகளுக்கு எதிரான சோடனைக் கோஷங்கள் புலப்படுத்தப்படுகின்றன.மேலும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையானவர் நடந்து கொள்ளும் போக்குகள், இவரின் விடுதலையில் நம்பிக்கை வைத்தோரை, விடுதலைக்காகப் பரிந்து பேசிய முஸ்லிம் தலைவர்களையும் தலைகுனிய வைத்துள்ளது. ஜனநாயக நடைமுறைகளிலிருந்து வௌிவரவுள்ள தீர்ப்புக்களுக்குப் பின்னரே இவர்கள் எதிர்ப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.இவ்வாறு இல்லாது இப்போது முந்திக் கொண்டமை தோல்வியின் வௌிப்பாடுகளோ தெரியாது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: மேலாண்மைத் திணிப்புக்குள் பயங்கரவாதப் பிழைப்பு! Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top