இனவாதம் ஆளும் நாடு - THE MURASU

Jun 21, 2019

இனவாதம் ஆளும் நாடு


எஸ்.றிபான் -
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னர் மிக மோசமான வகையில் பௌத்த இனவாதிகளினால் முன் வைக்கப்படுகின்றன. இந்த தாக்குதல்களைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் நடவடிக்கைகளும், முஸ்லிம்களையும், முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்குரிய முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தைப் பலியாக்கும் பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகளினாலும், இனவாதத்தை தமது அரசியலுக்கான மூலதனமாக் கொண்டுள்ள அரசியல்வாதிகளினாலும் முஸ்லிம்கள் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் தமிழர்களின் அரசியலைக் காட்டிக் கொடுத்து மக்களின் செல்வாக்கை இழந்தவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை முன் வைத்து அரசியலில் ஏதாவதொன்றை அடைந்து கொள்ளலாமா என்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மொத்தத்தில் இன்றைய அரசியல் சூழலில் எதிரும், புதிருமாக செயற்பட்ட தமிழ் இனவாதிகளும், சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக் கூட்டமைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, முஸ்லிம்களை நம்ப வைத்து ஏமாற்றும் நடவடிக்கைகளை சிங்கள, தமிழ் மிதவாதப் அரசியல்வாதிகள் மேற்கொண்டுள்ளார்கள். இச்செயற்பாடும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமேயாகும். 

இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தமது செயற்பாடுகளின் உச்சக் கட்ட நடவடிக்கையாக சாகும்வரை உண்ணாவிரதம் எனும் கோசத்தை முன் வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உண்ணாவிரதப் போராட்டம் சாத்தியப்படாது போனால், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்வதற்கும் தயாராக இருக்கின்றார்கள். இவர்களின் இந்த நடவடிக்கைகளினால் ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க வேண்டுமாயின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது அமைச்சர் பதவிகளையும், ஆளுநர் பதவிகளையும் தூக்கி வீச வேண்டியதொரு நிலையும் ஏற்பட்டது. முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்களின் இராஜினாமாக்கள் இனவாதிகளையும், அரசாங்கத்தையும், ஜனாதிபதி, பிரதமர் மந்திரியையும், சர்வதேசத்தையும், ஏனைய சமூக அரசியல்வாதிகளையும் மூக்கில் விரல் வைக்க வைத்துள்ளது. இனவாதிகளின் ஆட்டத்திற்கு மூக்கனாங் கயிறு கட்டியுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இப்படியும் ஒற்றுமைப்படுவார்களா, பதவிகளை தூக்கி வீசுவார்களா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் அமைச்சர் பதவிகளின் பின்னால் அலைகின்றவர்கள் என்ற கணிப்பீட்டை பொய்யாக்கியுள்ளது. இதனிடையே பாராளுமன்ற உறுப்பினர்கள் கபீர் ஹாசிம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர்கள் புதன்கிழமை (19.06.2019) அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 

பதவிகளின் இராஜினாமாவும் தாக்கமும்

பௌத்த இனவாதிகளும், இனவாதத்தை அரசியலுக்குரிய மூலதனமாகவும் கொண்டுள்ள பேரினவாத அரசியல்வாதிகளும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எதனையும் செய்வார்கள் என்பதற்கு தற்போது முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள இட்டுக்கட்டுக்களும், நெருக்குவாரங்களும் உதாரணங்களாக உள்ளன. அத்துரலிய ரத்ன தேரர் ஒரு பௌத்த குருவாக இருந்தாலும், அவரும் ஒரு அரசியல்வாதியாவார் என்பதனை பௌத்த மகாநாயக்க தேரர்களும், பௌத்தவர்களும் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், அவர் தான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகச் செல்ல வேண்டுமென்பதில் குறியாக இருக்கின்றார். இதற்காகவே கூட்டு எதிரணியினரின் திட்டமிடலுக்கு அமைவாகவே அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தார். 

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கும் றிசாட் பதியூதீனுக்கும் தொடர்புகள் இருப்பதாகத் தெரிவித்து சிங்கள மக்களிடையே மிக மோசமான இனவாதத்தை பரப்பினார்கள். முஸ்லிம்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று காட்டத் தொடங்கினார்கள். முஸ்லிம்களின் வீடுகள் இராணுவத்தினாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் போது வீட்டுப் பாவணைக்கு வைத்திருந்த கத்தி முதல் தற்காப்புக்காக வைத்திருந்த வாள்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், சிங்களவர்களின் வீடுகள் சோதிக்கப்படவில்லை. கத்தி, வாள்கள் பயங்கர ஆயுதங்கள் என்றால் இலங்கையிலுள்ள எல்லா வீடுகளிலும் இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதே வேளை, ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது குருநாகல், குளியாப்பிட்டி, மினுவாங்கொடை என 30 கிராமங்களில் வாழும் முஸ்லிம்களின் மீது பௌத்த பயங்கரப் போக்காளர்கள் கத்தி, வாள் முதலான ஆயுதங்கள் கொண்டு முஸ்லிம்களை தாக்கினார்கள். ஒருவர் மரணமடைந்தார். கோடிக் கணக்கான சொத்துக்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. ஆயினும், இத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களின் மீது போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

இது போதாதென்று நாட்டில்; முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை மேலும் பூதாகாரமாக்குவதற்காக அத்தரலிய ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்தார். அவசரகாலச் சட்;டம் உள்ள நிலையில் இதனை செய்தார். றிசாட் பதியூதீன், அஸாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்கள் தங்களின் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று கோரிக்கை முன் வைத்தார். இவரின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மகாநாயக்க தேரர்களின் ஆசிர்வாதம் மறைமுக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, அவசர காலச் சட்டம் உள்ள நிலையில் பொலிஸாரின் அனுமதி பெறப்படாததும், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் என மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத்திற்கு பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அஸாத்சாலி ஆகியோர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்து தங்களது பதவிகளை இராஜினாமாச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதன் மூலமாக நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி பௌத்த இனவாத்தின் முன் தோல்வி அடைந்தார். அல்லது பௌத்த இனவாத்திற்கு துணை போனார் எனலாம். 

இதே வேளை, முஸ்லிம்களின் மீது பௌத்த பயங்கர போக்காளர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 06 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பொதுபல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பில் விடுதலை செய்தார். இவ்வாறு விடுவிக்கப்பட்டவுடனேயே தமது முஸ்லிம் விரோத போக்கை வெளிப்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவர் உண்ணாவிரதம் இருந்த அத்துரலிய தேரரை பார்த்ததன் பின் நாளை 12 மணிக்கு முன்னதாக றிசாட் பதியூதீன், அஸாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்யாது போனால் நாட்டில் பெரியதோர் களியாட்டமே நடைபெறும் என்று எச்சரிக்கை செய்தார். 

அத்துரலிய ரத்ன தேரர் தாம் முன் வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடையலாமென்ற பயத்தினால்தான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் என்றிருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சிங்களவர்களின் சிந்தனைச் சலவையை மேலும் வேகமாகச் சுழல வைக்க வேண்டுமென்றதொரு திட்டமும், இவர்கள் இராஜினாமாச் செய்யாது போனால் முஸ்லிம்களுக்கு எதிராக பெரியதோர் வன்முறையை தோற்றுவிக்கின்ற சூழலை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தார்கள். இத்தகையதொரு நிலையில் கலகொட அத்த ஞானசார தேரரின் அறிவிப்பு முஸ்லிம்களிடையே பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில்தான் றிசாட் பதியூதீன், அஸாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்கள் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தார்கள். 

முஸ்லிம் அமைச்சர்களின் இந்த முடிவு இலங்கையின் அரசியலில் மாத்திரமன்றி பௌத்த இனவாதிகளின் திட்டமிடலிலும் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் பொருளாதாரத்திலும் பின்னடைவினை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அஸ்கரியபீட மகாநாயக்க தேரர்கள் உட்பட பலரும் அச்சமடைந்தார்கள். முஸ்லிம் அமைச்சர்கள் தங்களின் பதவிகளை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். முஸ்லிம் அமைச்சர்கள் அஸ்கரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்தார்கள். 

இந்த சந்திப்பின் பின்னர் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டுமென்று பலரும் கேட்டுக் கொண்டார்கள். முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி செயற்பட்ட அஸ்கரியபீட மகாநாயக்க தேரர்கள் முஸ்லிம் தாக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர்களையும், தாக்குதல்தாரிகளையும் கண்டிக்காத நிலையிலேயே இருந்தார்கள். 

அது மாத்திரமன்றி அஸ்கரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்ன தேரர், முஸ்லிம்களின் கடைகளில் உணவுகளை உண்ணக் கூடாது. முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க எடுத்த முயற்சி பகிரங்கத்திற்கு வந்துள்ளது. இப்படியாக சிங்களவர்களை அழிக்க முற்பட்டவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென்று என்னிடம் கூறுகின்றனர். அப்படி செய்ய வேண்டுமென்று நான் கூற மாட்டேன். ஆனால் அது செய்யப்பட வேண்டியதுதான் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இவரின் சிந்தனைப் போக்கை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அஸ்கரிய பீடத்தின் நிலைப்பாடும் இதுதானா என்று சந்தேகங் கொள்ள வேண்டியுள்ளது. ஆதலால், முஸ்லிம்களை நசுக்குவதற்கு எல்லா பேரினவாதக் கட்சிகளும், இனவாதிகளும் ஒற்றுமைப்பட்டுள்ளார்கள். இவர்களின் ஒரே இலக்கு அதிகாரதிதைப் பெற்றுக் கொள்வதாகும். ஆகவே இனவாதம் பேசுகின்றவர்கள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வார்களாயின் சிறுபான்மையினர் மீது காடையர்களும், காவியர்களும் சட்டத்தைக் கையில் எடுத்து செயற்படுவார்கள். ஆதலால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுடனும், இராஜதந்திரமாகவும் செயற்பட வேண்டும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை பாரியதொரு அனர்த்தத்தை தடுத்துள்ளது. 

மீண்டும் அமைச்சர்கள்

இதே வேளை, கபீர் ஹாசீம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர்கள் மீண்டும் அமைச்சர்கள் பதவிகளை ஜனாதிபதியின் முன்னிலையில் (19.06.2019) பெற்றுள்ளார்கள். முஸ்லிம்களின் பாதுகாப்பு, முஸ்லிம்களை தாக்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தல், முஸ்லிம் அரசியல்வாதிகளின் மீது முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை முறைப்படி விசாரணை செய்து இறுதி முடிவினை எடுத்தல் உள்ளிட்ட பத்துக் அம்சங்களை முன் வைத்தே அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்தார்கள். இவற்றை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்கள். 

ஆனால், அமைச்சர் பதவிகளை துறந்து 15 நாட்கள் ஆகின்ற நிலையிலேயே கபீர் ஹாசீம், ஹலீம் ஆகியோர்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டார்கள். ஆயினும் பதவிகளை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாதென்பதே பலரது கருத்தாகும். இதே வேளை, அவர்கள் சிங்கள மக்களின் வாக்குகளின்; மூலமாகவே வெற்றி பெறுகின்றவர்கள். அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டாக வேண்டுமென்றும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. 

எது முக்கியம்?

அமைச்சர் பதவிகளை துறப்பதில் சிலருக்கு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்; பதவி இழப்பை சமூகத்திற்காகவே மேற்கொண்டார்கள் என்பதில் ஐயமில்லை. இன்றைய அரசியல் சூழலில் அரசியல் எதிர்காலமா, சமூகமா என்ற தெரிவுகள் வரும் போது சமூகத்திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். இன்றைய நெருக்கடியான இனவாத சூழலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள முஸ்லிம்களின் மீதே தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை 2010ஆம் ஆண்டு முதல் தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பௌத்த இனவாதிகள் போன்று தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்களில்லை. இங்கு தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றார்கள். 30 வருட யுத்தத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் நிறைய படிப்பினைகளைப் பெற்றுள்ளார்கள். 

ஆதலால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அங்குள்ள முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  குறைந்த பட்சம் முன் வைத்த ஒரு மாத காலம் வரைக்கும் பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்னர் அமைச்சர் பதவிகளை எடுத்திருக்க வேண்டும். அமைச்சர் பதவிகள் முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளாது என்று நிருபணமாகியுள்ளது. அதே வேளை, ஒற்றுமை மூலமாக முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளலாமென்றும் நிருபணமாகியுள்ளது. பதவி இல்லாது போனாலும் ஒற்றுமைப்பட்;டால் சாதித்துக் காட்டலாம் என்ற நிலையில் இவர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதனிடையே இவர்களின் அமைச்சர் பதவி ஏற்பு விடயத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ஆகியோர்கள் இருப்பதாகவும், அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரியாதென்றும் தெரிவிக்கப்படுகின்றன.

இதே வேளை, ஒரு மாதம் என கெடுவிதித்தவர்கள் அதற்கு முன்னதாகவே அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அமைச்சர் பதவி இல்லாது இவர்கள் இருக்கமாட்டார்கள். எல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகம் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைச்சர் பதவி துறப்பை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதனைச் செய்தாலும் குற்றம் காண்பதே கூட்டு எதிர் அணியினர் மற்றும் பௌத்த இனவாதிகளின் நோக்கமாகும். 

உண்ணாவிரதத்தின் மூலமாக பௌத்த இனவாதிகள் வெற்றி பெற்றாலும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அமைச்சர் பதவிகளை துறந்தமை மூலமாக அந்த வெற்றியை அவர்களினால் கொண்டாட முடியவில்லை. கூட்டாக இராஜினாமாச் செய்யாது இருந்தால் அதாவது றிசாட் பதியூதீன், அஸாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர்கள் மாத்திரம் பதவி துறந்திருந்தால் ஒவ்வொரு முஸ்லிம் அமைச்சர்கள் மீதும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இனவாதம் பேசி இருப்பார்கள். இப்போது ரவூப் ஹக்கீமையும், சஹ்ரானையும் தொடர்புபடுத்தி பேசுவதற்கு தலைப்பட்டுள்ளார்கள். 

ஆகவே, சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். அதுவே முக்கியமாகும். தமது சமூகத்தை நியாயத்தின் அடிப்படையில் பாதுகாப்பது ஒவ்வொரு சமூக உறுப்பினரினதும் கடமையாகும். இதே வேளை, ஏனைய அமைச்சர்களும் படிப்படியாக பதவிகளை ஏற்றுக் கொள்ளலாமென்று தெரிவிக்கப்படுகின்றன. ஆயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் தாம் முன் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை அமைச்சர் பதவிகளை தானும், தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். 

அதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசரப்பட்டு அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று நம்பலாம்.

மேலும், இன்றைய அரசியல் நெருக்கடியில் றிசாட் பதியூதீன் எதனைச் சொன்னாலும் அதில் பௌத்த இனவாதிகளும், கூட்டு எதிர் அணியினரும், ஒரு சில ஊடகங்களும் குறைகண்டு, இனவாத சாயத்தை பூசியே காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரவூப் ஹக்கீமின் பாத்திரம் முக்கியமானதாகும். அதனை அவர் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றார். இதற்கு அவர் ஏற்கனவே சந்தித்த அரசியல் நெருக்கடிகளின் போது பெற்றுக் கொண்ட அனுபவங்கள் உதவியாக இருந்து கொண்டிருக்கின்றன. இதே வேளை, முஸ்லிம் அரசியல்வாதிகள் பொறுப்பற்ற வகையில் கருத்துக்களை முன் வைப்பதனை நிறுத்த வேண்டும். கட்சிகளின் முகநூல் ஆதரவாளர்களும் தமது விமர்சனங்களை முன் வைப்பதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இத்தகையதொரு நல்ல சூழலில் ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன் ஆகியோர்கள் தேர்தலில் கூட்டாக ஒரு அணியாகச் செயற்பட வேண்டுமென்று பல தரப்பினரும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கூட்டு என்பது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையிலேயே அமைய வேண்டும். இதனை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராயலாம். 

குற்றச்சாட்டுக்கள்

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீது முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் தேவைக்காகவே என்பதனை நாட்டு மக்கள் படிப்படியாக புரிந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியுடன் சங்கமித்து இருப்பதனாலும், முஸ்லிம்களின் பெரும்பான்மையான வாக்குகள் கூட்டு எதிர் அணியினரின் ஜனாதிபதி வேட்பாளருக்கு எதிராகவே அளிக்கப்படும் என்ற கருதுகோளின் அடிப்படையிலும்தான் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. சிங்களவர்களின் வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகவே இனவாதத்தை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

டாக்டர் முஹம்மட் சிஹாப்தீன் ஷாபி மீது முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் கூட ஆதாரமற்றவை. தனிப்பட்ட கோபத்தினாலும், அரசியல் தேவைக்காகவுமே டாக்டர் ஷாபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்கின்றவர்களுக்கு பணம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டே முறைப்பாடுகள் செய்விக்கப்பட்டுள்ளன என ஊடகங்களின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. அதே வேளை, குற்றச்சாட்டுக்களை முன் வைத்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அழைக்கப்பட்ட போது மறுதலித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு, மருத்துவப் பேராசிரியர்கள் பலரும் இக்குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறியுள்ளார்கள். குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 69 தாதிகள் டாக்டர் ஷாபி குற்றமற்றவர் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே, குற்றச்சாட்டுக்களை முன் வைக்க வேண்டும். அதன் மூலமாக இனவாதத்தை பேச வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இனவாதமே ஆட்சி செய்கிறது 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இனவாதம் பேசியே அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டார்கள். 2009ஆம் ஆண்டு வரை தமிழர்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை முன் வைத்தார்கள். இதற்கு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பெரும் உதவி புரிந்தது. இக்காலப் பகுதியில் பேரினவாத அரசாங்கம் முஸ்லிம்களின் மீது மிதவாதப் போக்கையே பின்பற்றிக் கொண்டிருந்தது. ஆயினும் அவ்வப்போது தமது உண்மையான சுயரூபத்தையும் பேரினவாத அரசாங்கம் காட்டாமலுமில்லை. ஆனால், முஸ்லிம் சமூகத்தை அடக்குவதற்குரிய அனைத்துத் திட்டங்களையும் தமிழ் ஆயுதக் குழுக்களோடு யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வகுத்துக் கொண்டார்கள். யுத்தம் முடிவடைந்தவுடன் அதனை அமுல்படுத்துவதனை அவதானிக்கலாம். இதற்கு அரசாங்கமும் துணையாகவே செயற்பட்டது. பௌத்த தேரர்களை மீறிச் செயற்படும் நீதியும், நெஞ்சுறுதியும் கொண்ட அரசியல் தலைவர்கள் இது வரைக்கும் தோன்றவில்லை. பௌத்த இனவாத தேரர்கள்தான் இன்று நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம் அனைத்தையும் சீரழித்து முஸ்லிம்களை அடிமைகள் போன்று நடத்துவதற்கே திட்டங்களை வகுத்துள்ளார்கள். இதனை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதே வேளை, பௌத்த இனவாத தேரர்களின் ஆதிக்கம் இலங்கையின் அரசியலில் அதிகரித்துக் கொண்டு வருவது சிறுபான்மையினருக்கு தற்போதைக்கு ஆபத்தாக இருந்தாலும், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் என்று நினைத்து அதற்கு பேரினவாத அரசியல்வாதிகள் ஆதரவு அளித்துக் கொண்டாலும், நீண்ட காலத்தில் பேரினவாத அரசியல் தலைவர்களுக்கும், நாட்டிற்கும் ஆபத்தாகவே அமையும். இனவாதமும், வன்முறையும் அதிக அழிவுகளை ஏற்படுத்தும், ஆயினும் அதன் ஆயுட்காலம் குறுகியதாகும். 

இதே வேளை, மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கங்களினால் தெரிவிக்கப்பட்டன. முஸ்லிம்களும் நம்பினார்கள். ஆனால், முஸ்லிம்களின் மீது இனவாதக் கருத்துக்களும், தாக்குதல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. காலத்திற்கு காலம் மாறிமாறி ஆட்சி செய்த அரசாங்கங்களையும், முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் நம்பி முஸ்லிம்கள் ஏமாந்துள்ளார்கள். ஏப்ரல் 21ஆம் திகதியே தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் எல்லோரையும் பயங்கரவாதிகள் என்று பார்க்க வேண்டாம். முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாக்கி விடாதீர்கள் என்றும் கவர்ச்சிகரமான வார்த்தைகளை ஜனாதிபதி முதல் ஏனைய அமைச்சர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்படும் நெருக்குவாரங்கள் குறையவில்லை. நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் ஒரு சமூகமாகவே முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களினாலும், அரசாங்கங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நம்பிக்கைத் துரோகத்தை முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு முஸ்லிம் அமைப்புக்களும், புத்திஜீவிகளும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் மிகவும் சோம்பேறித்தனத்தை முஸ்லிம் அமைப்புக்களும், புத்திஜீவிகளுமே கொண்டுள்ளார்கள்.  
Vidivelli 21.06.2019

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here