முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது - இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் - THE MURASU

May 14, 2019

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது - இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்

வைப்பகப் படம்
முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லர் என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், முஸ்லிம் சகோதரர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் 2019 ஆண்டு பிராந்திய மாநாடு பதுளையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில், “அண்மையில் ஏற்பட்ட தொடர் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செயற்பாட்டுக்கு காரணமாக இருந்தவர்களை கண்டுபிடித்து பயங்கரவாத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் அரசின் முப்படைகளும் செயற்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இந்நிலையில் குறிப்பிட்ட சில இடங்களில் வன்முறைகள் வெடித்து வருகின்றன. இதனால் அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உடமைகள் பாதிப்படைந்துள்ளன.
நாட்டில் ஏற்கனவே ஈஸ்டர் தொடர் குண்டு வெடிப்புகளினால் உயிரிழந்த பாதிப்புகளில் இருந்து இன்னமும் நாம் மீளவில்லை. தற்போதும் நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களும் எமது சகோதரர்களே. ஒரு சிலர் செய்யும் முறையற்ற செயற்பாடுகளை அனைத்து முஸ்லிம் மக்களும் செய்ததாக கருதமுடியாது. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடாத அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிப்படையக் கூடாது.
ஏற்கனவே 30 வருட கொடூர யுத்தம் காரணமாக எமது நாடு அபிவிருத்திகளில் பின்னடைவை சந்தித்தது. அதிலிருந்து தற்போது மீண்டுவரும் வேளையில், இவ்வாறான பிரச்சினைகள் நாட்டை மீண்டும் பின்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்.
எனவே, இந்த நாட்டைப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு முறையாக கையளிக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. இதை உணர்ந்து செயற்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here