• Latest News

    Mar 3, 2019

    மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளங்கள்

    எஸ்.றிபான் -
    தேர்தல்கள் நெருங்குகின்ற போது அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் காலடிக்கு வருகை தருவதும், தேவைகள் யாவற்றையும் பூர்த்தி செய்து தருகின்றோமென்று சொல்லுவதும் வழக்கமான கதைதான். தேர்தல் முடிந்ததும் மக்களை விட்டு தூரமாகியும், வாக்குறுதிகளை கவனத்திற் கொள்ளாமலும் அரசியல் தலைவர்கள் இருப்பார்கள். இந்நிலைப்பாடு எல்லா சமூகத்தின் அரசியல் தலைவர்களிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இருந்தாலும், முஸ்லிம் தரப்பினர்களிடையே அதிகமாகவே இருக்கின்றன. முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருப்பதனை தண்டிப்பதற்கு முஸ்லிம் வாக்காளர்களுக்கு சந்தர்ப்பங்களும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் கடந்த மூன்று பாராளுமன்றத் தேர்தலில் ஒரே நபர்களே போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால், தோற்கடிக்க வேண்டியவர்களை வேறு தெரிவுகளில்லாததாலும், கட்சியை தோற்கடிக்க முடியாதென்ற வாக்காளர்களின் பலவீனத்தாலும் மீண்டும், மீண்டும் ஒரே நபர்களே பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

    கோட்டையை காப்பாற்ற முடியவில்லை
    ++++++++++++++++++++++++++++++++
    அம்பாரை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை தமதாக்கிக் கொள்ள வேண்டுமென்பதில் முஸ்லிம் கட்சிகளிடையே பலத்த போட்டிகள் ஏற்பட்டுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தோற்கடிக்கப்பட்டதுடன், அம்பாரை மாவட்டத்தின் அரசன் தாமே என்று முஸ்லிம் காங்கிரஸ் எண்ணிக் கொண்டது. அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றார்கள். புதிதாக தனித்து போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் தோல்வி ஏற்பட்டது.

    ஆயினும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்; அம்பாரை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்ற நிலைப்பாடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி தலைமையிலான அணியினரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்று மயில் சின்னத்தில் இணைந்து போட்டியிட்டார்கள். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐந்து பிரதேச சபையின் அதிகாரத்தை தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளமை என்பன போன்றவற்றினால் ஹஸன்அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பை முஸ்லிம் காங்கிரஸ் அலட்சியமாகவே பார்த்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. முஸ்லிம் காங்கிரஸின் வசமாக இருந்த நிந்தவூர், இறக்காமம் ஆகிய சபைகளும், சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகாரங்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவில்லை. அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அதிகாரத்தைப் பெற்றுள்ளன. கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டாலும் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அறுதிப் பெரும்பான்மை கூட முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவில்லை. அட்டாளைச்சேனை பிரதேச சபையிலும் எதிர்கட்சி வரிசையில்தான் உறுப்பினர்கள் அதிகம் பேர் உள்ளார்கள்.

    முஸ்லிம் காங்கிரஸிற்கு அம்பாரை மாவட்டத்தில் இத்தகையதொரு பின்னடைவு ஏற்படுவதற்கு சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கை முக்கியமானதொரு காரணமாகும். இங்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு அரசியல் கட்சியும் சாய்ந்தமருதில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென்ற சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் தீர்மானம் ஏனைய பிரதேச மக்களிடையே முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான எழுச்சியை ஏற்படுத்தியதென்றே கூற வேண்டும். இதனால்தான், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ள போதிலும் கோட்டையை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

    பிரதேச சபை கோரிக்கை
    ++++++++++++++++++
    இப்போது தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதனால் முஸ்லிம் கட்சிகள் மீண்டும் முருங்கை மரம் ஏறத் தொடங்கியுள்ளன. தமது பழைய வாக்குறுதிகளை தூசி தட்டி வெளியே எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்து வருகின்ற ஏதாவதொரு தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் ஆதரவை இழந்தால் முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இதனால், சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளுராட்சி சபை தருவோம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோமென்று காண்பிப்பதற்கு உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்தியுள்ளார்கள். இதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், எஸ்.எம்.எம்.இஸ்மாயில், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளின் அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால், முடிவுகள் எடுக்கப்படவில்லை. சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாது காலத்தை கழிக்கும் வகையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
    முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்பேச்சுவார்த்தை குறித்து தெரிவிக்கையில், சாய்ந்தமருது, கல்முனை பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், தமிழ்ப் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், மருதமுனை, நற்பிட்டிமுனை மக்கள் பிரதிநிதிகளுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். எல்லோரும் ஏற்று கொள்ளக் கூடியதொரு தீர்மானத்திற்கு வர வேண்டுமென்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    அதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் பிரதேச மக்களின் கருத்துகளைப் பெற்று செயற்பட தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    ஆகவே, சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை என்பது அடுத்த தேர்தலொன்றுக்கு இடையில் நிறைவேறுமென்று எதிர்பார்க்க முடியாது. அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கானதொரு நகர்வாகவே பேச்சுவார்த்தையை பார்க்க வேண்டியுள்ளது.
    1986ஆம் ஆண்டு வரை கல்முனைத் தொகுதியில் கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு, கரைவாகு தெற்கு, கல்முனை பட்டின சபை என நான்கு உள்ளுராட்சி சபைகள் இருந்தன. இதில் கரைவாகு தெற்கு என்பது சாய்ந்தமருது பிரதேசத்தைக் கொண்டதாக அமைந்திருந்தது. இந்நான்கு சபைகளையும் இணைத்தே 1988ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது.

    ஆயினும், சாய்ந்தமருது மக்களிடையே தனியான உள்ளுராட்சி சபை தரப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்து கொண்டிருந்தது. முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்போடு சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை ஒன்றின் போது தனியான உள்ளுராட்சி சபையும், தனியான பிரதேச செயலகமும் தரப்பட வேண்டுமென்று கேட்டார்கள். இதற்கு உள்ளுராட்சி சபை தர முடியாது. பிரதேச செயலகத்தை தர முடியுமென்று அஸ்ரப் தெளிவாகக் கூறினார். ஆனால், பின்னர் வந்த தலைவர்கள் வாக்குறுதி கொடுத்தால் நிறைவேற்ற வேண்டுமென்று சிந்திக்காது, வாக்குறுதிதானே என்று நினைத்துச் செயற்பட்டார்கள். இதன் விளைவு கோட்டையின் சரிவுக்கு வழி வகுத்துள்ளது.
    கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மர்ஹும் அஸ்ரப்பின் காலத்தின் பின்னர் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை தரப்பட வேண்டுமென்ற கோரிக்கை தீவிரமடைவதற்கு அம்மக்களின் வாக்குகளை பெற்று வந்த முஸ்லிம் காங்கிரஸும், அக்கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுமே காரணமென்பதனை யாரும் மறுக்க முடியாது.

    சாய்ந்தமருது அபிவிருத்தி ரீதியாக புறக்கணிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். ஆனால், கல்முனைத் தொகுதியில் சொல்லும் படியாக எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை. வாயால்தான் அபிவிருத்தி செய்தார்கள். இதனால், அபிவிருத்தி ரீதியாக சாய்ந்தமருது புறக்கணிக்கப்பட்டதென்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனாலும், மாநகர சபையால் குப்பை அள்ளுவதிலும் புறக்கணிக்கபட்டதாக தெரிவிக்கின்றார்கள். உண்மையில் இது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

    இதே வேளை, கல்முனை மாநகர சபையின் மேயராக முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் சிராஸ் மீராசாஹிவு தெரிவு செய்யப்பட்டார். இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ் நிஸாம் காரியப்பரை மேயராக்க வேண்டுமென்பதற்காக இரண்டு வருடங்களின் பின்னர் சிராஸ் மீராசாஹிவுக்கு வழங்கிய மேயர் பதவியை பறித்துக் கொண்டது. இதனால், மேயர் பதவியையே முழுமையாக தருவதற்கு விருப்பமில்லாத கட்சிக்கு ஆதரவை வழங்குவதனை விடவும், வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதனை விடவும் முதலில் தனியான உள்ளுராட்சி சபையை பெற வேண்டுமென்ற தீர்மானத்தை சாய்ந்தமருது பிரதேச மக்கள் பள்ளிவாசல் தலைவாரின் தலைமையில் எடுத்தார்கள். அந்தக் கோரிக்கையை முன் வைத்து சுயேட்சைக் குழுவாக கல்முனை மாநகர சபைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். ஓன்பது உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

    சாய்ந்தமருது மக்களிடையே தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கை எழுச்சி பெறுவதற்கு அரசியல் கட்சிகளும், முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகளுமே காரணமாகும். ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன், அதாவுல்லாஹ் ஆகியோர்கள் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக உங்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவோமென்று பகிரங்கமாக அறிவித்தார்கள். ஆனால், அதனை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கவில்லை. காலத்தை கடத்தும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனை மாநகர சபையின் அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு போய்விடுமென்றார்கள். அவ்வாறு நடக்காது என்ற போது, இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் இன்று சாய்ந்தமருது மக்கள் தனியான சபை கேட்பார்கள். நாளை இன்னுமொரு பிரதேசம் எங்களுக்கும் சபை வேண்டுமென்று கேட்பார்கள். இதனால் அபிவிருத்திகளைச் செய்ய முடியதெனக் கூறியுள்ளார்.

    2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவை கல்முனைக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைத்து வந்து சாய்ந்தமருதிற்கு தனியான சபை தரப்படும் எனச் சொல்ல வைத்தார். பின்னர், ரவூப் ஹக்கீம் நாங்கள் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுதிக் கொடுத்ததையே அவர் வாசித்தார் என்று தெரிவித்திருந்தார். ஆகவே, ஏமாற்றுவதற்காகவே வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. அது போலவே தற்போது நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தையும் இருக்குமென்று கருதிக் கொள்ள வேண்டியுள்ளது.

    கல்முனையில் எதிர்ப்பு
    +++++++++++++++++
    சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதற்கு கல்முனை முஸ்லிம்களிடையே பலத்த எதிர்ப்புள்ளது. சாய்ந்தமருது தனியாகப் பிரியும்; போது கல்முனை மாநகர சபையின் அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு சென்றுவிடுமென்பதனால்தான் கல்முனை முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்கள். சாய்ந்தமருது நீங்கலாக உள்ள தமிழர்களின் வாக்குகளை விடவும், முஸ்லிம்களின் வாக்குகளே அதிகமாகும். இதனால், கல்முனை மாநகர சபையின் அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு செல்லாது என்றிருந்தாலும், முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறடிக்கப்படும் போது எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சியாலும் ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்iயை பெற முடியாது. அதே வேளை, தமிழர்கள் கூட்டமைப்பாக மாத்திரம் போட்டியிட்டால் தனிப் பெரும்பான்மையை பெற்ற கட்சியாக தமிழர்களின் கூட்டமைப்பே இருக்கும் என்ற கருத்தையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

    இத்தகையதொரு ஆபத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக இருப்பதனை யாரும் குற்றமாகக் கருதவும் முடியாது. இதனால், 1986ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்ததைப் போன்று நான்கு சபைகளை உருவாக்குவதே வழியாகும். இத்தகையதொரு நடவடிக்கையை உள்ளுராட்சி, மாகாண சபைகள் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மேற்கொண்ட போது இதற்கு முஸ்லிம் காங்கிரஸின் கல்முனைப் பிரதிநிதி எதிர்ப்பைக் காட்டினார்.
    றிசாட் பதியூதின் சாய்ந்தமருதிற்கு தனியான சபையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அதனையும் அந்தப் பிரதிநிதி தடுத்தார்.
    இப்போது 1986ஆம் ஆண்டிற்கு முதல் இருந்தவாறு நான்கு சபைகளை உருவாக்க வேண்டுமென்று தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முஸ்;லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், எல்லைகளை தீர்மானிப்பதில் பிரச்சினைகள் உள்ளன. கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு ஆகிய இரு சபைகளின் எல்லைகள் தாழவெட்டுவான் சந்திருந்துதான் ஆரம்பமாகியது. ஆனால், தற்போது தமிழர்கள் தங்களுக்கு கல்முனை கடற்கரை பள்ளிவீதியை அடிப்படையாக வைத்து எல்லை பிரிக்கப்பட வேண்டுமென்று கேட்கின்றார்கள். இதனால், முஸ்லிம் வர்த்தகர்களை 90 சதவீதம் கொண்டுள்ள கல்முனை நகரம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோய்விடும். மேலும், 1986ஆம் ஆண்டு வரை தாழவெட்டுவானை எல்லையாகக் கொண்டு கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு ஆகிய சபைகள் இருந்தமையை புறக்கணித்து புதிய எல்லைகளை தமிழர்கள் கேட்பது அவர்களின் ஆக்கிரமிப்பு சிந்தனையாகவே இருக்கின்றது.

    இதனால், கல்முனையிலுள்ள தமிழர்களின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்ள வேண்டிய இறுக்கமானதொரு நிலைப்பாடும் இருக்கின்றது. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாதென்பதில் தமிழர்களில் ஒரு தரப்பினர் மிகவும் தீவிரமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

    முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டத்தை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். கல்முனையில் நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு புதிய எல்லைகளை வேண்டுகின்றார்கள். காரைதீவுச் சந்தியில் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு சொந்தமாக இருக்கின்ற காணிக்கு சுற்றுமதில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, கல்முனையில் தமிழர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும். முஸ்லிம் செயலகத்தின் கீழ் செயற்பட முடியாதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் தமிழர் தரப்பினர் வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்று அரசாங்கத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

    இவைகளை கருத்திற் கொள்ளாது முடிவுகளை எடுக்க முடியுமா என்பதுதான் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை என்பதில் உள்ள மற்றுமொரு சிக்கலாகும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸாக இருந்தாலும், ஏனைய கட்சிகளாக இருந்தாலும் சாய்ந்தமருது மக்களுக்கு தனியான உள்ளுராட்சி சபை தரப்படும் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போது மேற்படி அத்தனை பிரச்சினைகளும் இருக்கவே செய்தன. அதனால், வாக்குறுதிகளை அளிக்கும் முன்னர் இத்தகைய சிக்கல்கள் உள்ளன. அதனால் எங்களினால் அதனைச் செய்ய முடியாதென்று தெளிவாகக் கூறியிருக்க வேண்டும். அதனைவிடுத்து எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கி விட்டோம். அவைகளை நிறைவேற்றியா இருக்கின்றோம். எதனையும் செய்யவில்லை. மக்களும் நம்மோடுதான் இருக்கின்றார்கள். உள்ளுராட்சி சபையை பெற்றுத் தருவோம் என்று சொல்லுவதில் என்ன குறையப் போகின்றதென்று சிந்தித்ததன் விளைவே சாய்ந்தமருது மக்களின் எழுச்சிக்கும், கோட்டையின் சரிவுக்கும் காரணமாகும். இதனை நிபர்த்தி செய்வதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தி எல்லா தரப்பினரதும் கருத்துக்களை பெற்று இறுதி முடிவுகளை எடுப்போம். சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது. அதனை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று ஏமாற்றும் நோக்கத்தில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாக இருக்குமாயின், இந்த ஏமாற்று வேதாளங்களின் திருகுதாளங்கள் சாய்ந்தமருது மக்களிடம் பலிக்குமா என்பது சந்தேகமே. ஆதலால், தங்களின் உண்மையான நிலைப்பாட்டை அரசியல் பிரதிநிதிகள் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
    Vidivelli 01.03.2019
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீண்டும் முருங்கை மரம் ஏறும் வேதாளங்கள் Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top