காரைதீவு பிரதேச சபையின் ஆட்சியை அடைவதற்கு ரெலோவின் அம்பாறை மாவட்ட குழு பாரிய பிரயத்தனம் - கல்முனை கூட்டத்தில் மகஜர் சமர்ப்பிப்பு - THE MURASU

Jan 12, 2019

காரைதீவு பிரதேச சபையின் ஆட்சியை அடைவதற்கு ரெலோவின் அம்பாறை மாவட்ட குழு பாரிய பிரயத்தனம் - கல்முனை கூட்டத்தில் மகஜர் சமர்ப்பிப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆட்சியை காரைதீவு பிரதேச சபையில் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இக்கட்சியின் தலைமையிடம் கட்சியின் அம்பாறை மாவட்ட பொது குழு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்ட பொது குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பின்னேரம் கல்முனையில் இடம்பெற்றது. கட்சியின் உப தலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, தவிசாளர் கே. சிவாஜிலிங்கம், பொருளாளர் கோவிந்தன் கருணாகரம் போன்றோர் பேராளர்களாக பங்கேற்று இருந்தனர். 

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறிப்பாக ஆராயப்பட்டதுடன் இளைஞர் அணியின் தெரிவும் இடம்பெற்றது. ஆயினும் இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் பங்கேற்று இருக்கவில்லை. அதே போல கிழக்கு மாகாண ஆளுனராக எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

                                         ஸ்ரீகாந்தாவின் உரை
பேராளர்களின் உரைகள் இடம்பெற்றபோது மாத்திரம் செய்திகள் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா உரையாற்றியபோது சிங்கள அரசாங்கங்கள் தங்க தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான தீர்வை தர போவதில்லை, புதிய அரசியல் அமைப்பு மூலமான தீர்வு குறித்து அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்ற இக்காலத்தில் அந்த புதிய அரசியல் அமைப்பின் நகலை பரிசீலிக்கின்ற நிலையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் உள்ளன, ஏக்க இராச்சிய என்கிற சிங்கள சொல்லின் நேர்மையான, நீதியான தமிழாக்கம் ஒருமித்த நாடு என்பது அல்ல, அது சமஷ்டியையோ, இணைந்த ஆட்சியையோ குறிக்கவில்லை, மாறாக காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்ற ஒற்றையாட்சிக்குள்தான் தள்ள பார்க்கின்றார்கள், இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு நடமாடும் சாட்சிகளாக அவற்றால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் கண்களுக்கு முன்னால் உள்ளபோதிலும் அவை பயன்படுத்தப்படவே இல்லை என்று மறுத்து அவற்றை பயன்படுத்திய மஹிந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு ரணில் அரசாங்கம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது, சிங்கள அரசாங்கங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் தமிழ் மக்களுக்கான தீர்வை எந்த வகையிலேனும் அடைந்தேயாக வேண்டும் என்று பேசினார்.

                                                    கருணாகரத்தின் உரை
பொருளாளர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றியபோது கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கணிசமான வாக்குகள் கிடைத்து இருந்தன, திருக்கோவில் பிரதேச சபையும், காரைதீவு பிரதேச சபையும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு உரித்தானவை என்று தேர்தல் ஒப்பந்தம் செய்து இருந்தோம், ஆயினும் அவற்றை எமக்கு தராமலேயே விடுவதற்கு ஏராளமான சூழ்ச்சிகளை செய்தார்கள், ஒருவாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றுடன் பேசி, அவவற்றின் ஆதரவுடன் திருகோவில் பிரதேச சபை தவிசாளர் பதவியை பெற்றிருக்கின்றோம், ஆயினும் பல பல சூழ்ச்சிகளை செய்து காரைதீவு பிரதேச சபையை பிடித்து வைத்திருக்கின்றனர், காரைதீவு பிரதேச சபை தமிழீழ விடுதலை இயக்கத்திடம் இருந்து பறி போய் இருக்கின்றது, மாகாண சபை தேர்தல் முன்னதாக விரைவில் வரும் போல தெரிகின்றது, அதற்கு நாம் தயாராக வேண்டி இருக்கின்றது, அம்பாறை மாவட்டத்தின் மூன்று ஆசனங்களையும் தமிழீழ விடுதலை இயக்கம் வெற்றி அடைதல் வேண்டும், அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும், இதற்காக நாம் எமது இளைஞர் அணியை பலப்படுத்த வேண்டி உள்ளது என்று பேசினார்.

                                                 சூடான வாத பிரதிவாதங்கள்
பேராளர்களின் உரைகளை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் வெளியேறி சென்ற பின்னர் காரசாரமான சூடான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா நினைத்தால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மிக மிக இலகுவாக தரம் உயர்த்தி தர முடியும், ஆயினும் அவர் அதை செய்து தருகின்றாரே இல்லை, இதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை பாரிய அழுத்தத்தை அவர் மீது பிரயோகிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்ட பொது குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அதே போல அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் இக்கூட்டத்துக்கு வரவே இல்லை, அவர் நழுவல் போக்கை கைக்கொண்டு நடக்கின்றார், அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் உள்ளன என்று கண்டனங்கள் தெரிவித்தனர்.

இவற்றுக்கு இடையில் தேர்தல் ஒப்பந்தத்தில் இணக்கம் கண்டிருந்தபடி காரைதீவு பிரதேச சபையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆட்சியை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோருகின்ற மகஜரை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர். அதே போல காரைதீவு பிரதேச சபையின் தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களில் ஒருவரான மோகன் எதேச்சையாக செயற்பட்டு வருகின்ற நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவரின் இடத்துக்கு இன்னொருவரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here