கிழக்கு ஆளுநரை எதிர்ப்பது நியாயமற்றது - THE MURASU

Jan 12, 2019

கிழக்கு ஆளுநரை எதிர்ப்பது நியாயமற்றது


எஸ்.றிபான் -
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு காரணமாக 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி இலங்கை - இந்திய உடன்படிக்கை செய்யப்பட்டது. இதற்கு அமைவாக 1987ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் அரசியல் யாப்பில் 13வது திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 03ஆம் திகதி ஒன்பது மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. ஆயினும், வடக்கும், கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைவதா அல்லது பிரிவதா என்பதற்கு 1988ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிப்ராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. ஆயினும், இந்த வாக்கெடுப்பை அரசாங்கம் நீடித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில் 2006ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி வடக்கும், கிழக்கும் இணைந்திருப்பது அரசியல் யாப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உயர்நீதிமன்றம் வடக்கும், கிழக்கும் இணைந்திருப்பது அரசியல் யாப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. அன்று முதல் கிழக்கும், வடக்கும் தனித்தனி மாகாணங்களாக செயற்படுகின்றன. 

முஸ்லிம்கள் எதிர்ப்பு
வடக்கும், கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டமையை முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் இலங்கை - இந்திய உடன்படிக்கை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசனம் என்றார். வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் 34 சத வீதமாக இருந்த முஸ்லிம்கள் 17 சத வீதமாக மாற்றப்பட்டார்கள். மேலும், இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களின் அடக்கு முறைக்கும், தமிழ் உயர் அதிகாரிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளினாலும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் நிர்வாகம் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்றுவதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதே வேளை, விடுதலைப் புலிகள் மாகாண சபை முறைமையை நிராகரித்து, தனித் தமிழீழக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அதற்காக ஆயுதப் போராட்டத்தையும் மேற்கொண்டார்கள். 

வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைய வேண்டுமாயின் முஸ்லிம்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களைக் கொண்ட நிலத் தொடர்பற்ற மாகாணம் உருவாக்கப்பட வேண்டுமென்று மர்ஹும் அஸ்ரப் அழுத்தமாகக் கூறினார். மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்திற்குப் பின்னர் தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கிழக்கு மாகாணம் வடக்கிலிருந்து பிரிய வேண்டுமென்று வலியுறுத்தினார். இவரது இக்கோரிக்கை கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆகவே, முஸ்லிம்கள் ஒரு போதும் வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்று விரும்பவில்லை. கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டும். அல்லது தங்களை தாங்களே ஆளக் கூடிய வகையில் தனியான மாகாணம் உருவாக்கப்பட வேண்டுமென்று கோரினார்கள். இதனால்தான், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் முன் வைக்கப்பட்ட அரசியல் தீர்வில் தென்கிழக்கு அலகு என்ற அம்சம் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைந்தே இருக்க வேண்டுமென்று கோரிக் கொண்டிருந்தார்கள். 

ஆளுநர் நியமனம்
வடக்கும், கிழக்கும் தற்காலிகமாக இணைந்திருந்த காலத்திலும், கிழக்கும், வடக்கும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டதன் பின்னரும் பெரும்பான்மை இனத்தவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். இம்மாகாணங்களில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதிலும் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் இம்மாகாணங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு இராணுவத்தில் இளைப்பாறிய முன்னாள் உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் ஆளுநர்களாக நியமித்தார்கள். இதனால், தமிழ் பேசும் மக்கள் மொழி ரீதியாக பல பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் யாப்பின் 19வது திருத்தத்தில் ஜனாதிபதியின் ஒரு சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும், ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் இன்னும் ஜனாதிபதிக்கே இருக்கின்றது. ஒரு மாகாணத்தின் ஆளுநர் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதியாக அவரின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவார். மாகாணத்தின்  நிர்வாகத்தை முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மேற்கொண்டாலும் அவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இருக்கின்றது. மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் பின்னர் ஆளுநரின் வகிபங்கு அளப்பரியதாக இருக்கும். 

மாகாணங்களுக்குரிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமித்தாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் பேசும் மக்களிலிருந்து ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வந்துள்ளன. 

மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமாச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்ட போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனாலும், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக அஸாத்சாலி நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அஸாத்சாலியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அதனை அவர் உறுதி செய்தார். என்றாலும், யாரும் எதிர் பார்க்காத வகையில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டார். மேல்மாகாண சபையின் ஆளுநராக அஸாத்சாலி நியமிக்கப்பட்டார். தற்போது ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேஷ் ராகவனும், சப்ரகமுவ மாகாண ஆளுநராக தாம திசாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முஸ்லிம்களில் முதலாவதாக பாக்கீர் மாக்கார் (1988 – 1993) மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். இரண்டாவது ஆளுநராக அலவி மௌலானா (2002 – 2015) நியமிக்கப்பட்டார். தற்போது ஹிஸ்புல்லாஹ்வும், அஸாத்சாலியும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் ஆளுநராக கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இருக்கின்றார். அதே வேளை, வடமாகாணத்தின் முதலாவது தமிழ் ஆளுநராக கலாநிதி சுரேஸ் ராகவன் திகழ்கின்றார்.

இனவாதக் கருத்துக்கள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு தமிழ் பேசும் இனத்தவர்களில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்த தமிழ் அரசியல்வாதிகள் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாகவே ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார். இதற்கு முதல் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரி, அரசியல்வாதிகள் நியமிக்கப்பட்ட போது எதிர்ப்புக்களை காட்டாதவர்கள் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிர்ப்பு காட்டுவது என்பது அவர் ஒரு முஸ்லிம் என்பதனாலேயேயாகும். முதற் தடவையாக தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று சந்தோசப்பட வேண்டும். இதனை ஒரு ஆரம்பமாக வைத்து இனிவரும் ஆளுநர்கள் தமி;ழ் பேசும் சமூகங்களை சார்ந்தவர்களாக இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் முரளிதரன் கருணா அம்மான் கிழக்கு மாகாணத்தில் அமைச்சர்கள் எல்லோரும் முஸ்லிம்கள், ஆளுநரும் முஸ்லிம் என்று தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டாலும் அமைச்சர் பதவியை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கின்றார். அக்கட்சி அரசாங்கத்தில் இணையாத நிலையில் அமைச்சர் பதவியைக் கொடுக்க முடியாது. தமிழர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படாமல் இருப்பது முஸ்லிம்களின் திட்டமிட்ட செயலல்ல. முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதனை கருணா போன்றவர்கள் கேள்விக்கு உட்படுத்தவும் முடியாது. 

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பழி தீர்க்கும் நடவடிக்கை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியேந்திரன் தெரிவித்துள்ளார். இதே வேளை, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து வெள்ளிக்கிழமை (இன்று) ஹர்த்தாலுக்கு கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் துண்டுப் பிரசுரம் மூலமாக தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அரசியல் அமைப்பு சபையில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 08ஆம் திகதி உரையாற்றிய கலாநிதி ஹிஸ்புல்லாஹ் 'வடக்கு – கிழக்கு இணைப்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. வடக்கும் கிழக்கும் இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையேற்படும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படக்கூடாது, அதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதியளிக்கமாட்டோம்' என்று தெரிவித்திருந்தார். அவர் வடக்கும், கிழக்கும் இணைந்திருந்த போது தமிழ் ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்களை படுகொலை செய்தன. காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஏறாவூர், கல்முனை, சம்மாந்துறை, அழிஞ்சிப்பொத்தானை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் புனித ஹஜ் கடமைக்கு சென்ற 68 பேர் உட்பட 150 முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். கிண்ணியா, மூதூர், மன்னார் என முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். வடக்கும், கிழக்கும் இணைந்திருந்த நிலையிலேயே இப்படுகொலைகள் நடைபெற்றன. இதனைக் கருத்திற் கொண்டுதான் அவர் வடக்கும், கிழக்கும் இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என்றார். மேலும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக 42 சத வீதம் உள்ளார்கள். கிழக்கை வடக்குடன் இணைக்கும் போது முஸ்லிம்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக மாறுவர். முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் 17 அல்லது 18 சதவீதமாக குறைவடையும். இந்த உண்மையை கூறுவதனை இனவாதக் கருத்தாகப் பார்க்க முடியாது.

 அதே வேளை, தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதற்கு ஹிஸ்புல்லாஹ் துணையாக செயற்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 
இவைகளை பெரிது படுத்தி இரண்டு இனங்களுக்கும் இடையே ஏற்பட்டிருந்த கடந்த கால கசப்புணர்வுகள் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழர்களில் ஒரு சிலர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக தமிழ் மக்களை கிளர்ந்தெழச் செய்ய முயற்சிகளை எடுப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரப்பட்டார்கள். சுமார் 25 வருடங்களுக்கு மேல் தமது இருப்பிடத்தை பார்க்க முடியாது நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாக இருந்தார்கள். இதனை முஸ்லிம்கள் மறக்க முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதனை மறக்க முடியாது. வடமாகாணத்தில் முஸ்லிம்களின் பல ஏக்கர் காணியில் தற்போதும் தமிழர்கள் குடியிருக்கின்றார்கள். அக்காணிகளை மீளவழங்குவதற்கும் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு யுத்த காலத்தில் முஸ்லிம்கள் மிகப் பெரிய துன்பங்களை அனுபவித்தார்கள். 
பாலமுனையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்கள் முன்னிலையில் முஸ்லிம்கள் உரிமைக்காக போராட சமூகம் என்று தெரிவித்தார். திருகோணமலை சண்முக மகளிர் கல்லூரில் முஸ்லிம் ஆசிரியைகளின் அபாயா பிரச்சினையின் போது முஸ்லிம் ஆசிரியர்கள் புடவைதான் கட்ட வேண்டுமென்று தெரிவித்திருந்தார். இவ்வாறு வரலாறு நெடுகிலும் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துக் கொண்டே வந்துள்ளார்கள். 

கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக கலாநிதி ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளமையை இனவாதப் பார்வை கொண்டு பார்க்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும் என்றும் எதிர் பார்க்கின்றார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்பது தமிழர்களின் விருப்பம். அது போலவே கிழக்கு தனியாக இருக்க வேண்டுமென்பது முஸ்லிம்களின் விருப்பம். கிழக்கு மாகாணம் வடக்குடன் இணையும் போது முஸ்லிம்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும். பாதிப்புக்குள்ளாகக் கூடிய முஸ்லிம் சமூகத்திலிருந்து கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள நிலையில்  எவ்வாறு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம்கள் சம்மதம் தெரிவிக்க முடியும். தமிழர்கள் தங்களின் நல் எண்ணத்தைக் காட்ட வேண்டும்.

அம்பாரையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் விரும்புகின்றார்கள். தற்போதுள்ள அம்பாரை மாவட்டம் சிங்கள பெரும்பான்மையின அரச அதிபர்களினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. அதிகாரிகளின் துணையுடன் முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் பூர்வீகக் காணிகள் கபளிகரம் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து விடுபடுவதற்கு கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்று முஸ்லிம்கள் கோருகின்ற போது அதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள். 
நிலத் தொடர்பற்ற மாகாணம் என்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தென்கிழக்கு அலகு என்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்போது முஸ்லிம் ஆளுநரையும் எதிர்க்கின்றார்கள். இப்படியாக முஸ்லிம்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களை தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்துக் கொண்டே வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும். முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தலை அசைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த தலையாட்டிகள் சர்வதேசத்தின் திட்டங்களுக்கும், ரொக்கங்களுக்கும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதே வேளை, கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வையும், அசாத்சாலியையும் ஆளுநர்களாக ஜனாதிபதி நியமித்த போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் 'மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும் கௌரவமான பதவியாக மதிக்கப்பட வேண்டியதொன்றாகும். அந்த நியமனங்கள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சி சார்பற்ற கௌரவமான நிலையில் இருப்பவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் என்ற பதவியையும் அகௌரவப்படுத்தி, இவ்வாறானவர்களை நியமித்து அவரும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்' என்று தெரிவித்துள்ளார். கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு முதல் கிழக்கு மாகாண ஆளுராக ரோஹித போகலாகம நியமிக்கப்பட்டிருந்தார். வேறு சில அரசியல்வாதிகளும் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களை ஆளுநராக நியமித்த போது அரசியல் கட்சி சார்பானவர்கள் என்று விஜித ஹேரத் தெரிவிக்கவில்லை. ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அரசியல் சாயமாக பார்க்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் விளைவாக ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு தம்மிடம் மீதமாகவுள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்கின்றார். இதனை அவர் அமைச்சர்கள் நியமனத்தின் போது நிரூபித்தார். ரணில் விக்கிரமசிங்கவினால் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாதென்பதனை நாட்டு மக்களுக்கு காட்டுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அதே வேளை, சரிந்துள்ள தமது செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்வதற்கும் எண்ணியுள்ளார். மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு முடக்கும் அதே வேளை, மாகாணங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநர்களின் மூலமாக தம்வசப்படுத்தி மாகாண மட்டத்திலும் ஐக்கிய தேசிய முன்னணியின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அதற்காகவே எல்லா ஜனாதிபதிகளைப் போலவும் தமக்கு விசுவாசமானவர்களை ஆளுநர்களாக நியமனம் செய்து கொண்டிருக்கின்றார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 

நாட்டில் 30 வருட கால யுத்தம் பல படிப்பினைகளை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முன் வைத்துள்ள போதிலும் இனவாதிகளிடம் காணப்படும் இனவாத கருத்துக்களில் மாற்றங்களை காண முடியவில்லை. இனவாதக் கருத்துக்களின் மூலமாக தங்களின் அரசியலை பாதுகாத்துக் கொள்வதற்கே பெரும்பாலான அரசியல்வாதிகள் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு முஸ்லிம் ஆளுநர்களின் நியமனங்கள் குறித்து முன் வைக்கப்படும் கருத்துக்கள் நல்ல எடுத்துக் காட்டாக இருக்கின்றது.

சவால்கள்
இதே வேளை, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இப்போதே சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இத்தகைய சவால்கள் இனிவரும் காலங்களில் நிறைவாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால் அவர் கத்தி முனையில் நடப்பது போலவே செயற்பட வேண்டியுள்ளது. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளும், இனவாதிகளும் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். என்றாலும், நெருக்கடிகளை சமாளிக்கக் கூடிய வல்லமையை அவர் பெற்றுள்ளார். அத்தோடு தாம் இன மக்களையும் பாகுபாடு இன்றி நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே வேளை, தமிழ் அரசியல்வாதிகள் ஆளுநர் ஒரு முஸ்லிம் என்று இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்காது. அவரின் நல்ல செயற்பாடுகளுக்கு ஒத்தழைப்பு வழங்க வேண்டும். அவரின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலன்களை பாதிக்குமாக இருந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்பதில் தப்பில்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தமது நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஆளுநர் முன்னெடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினாலும், தனியாரினாலும் கபளிகரம் செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம்களின் காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here