728x90 AdSpace

  • Latest News

    Jan 12, 2019

    அமைச்சர் பதவிகளால் சாதிப்பார்களா? சம்பாதிப்பார்களா?

    எஸ்.றிபான் -
    நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் எந்த வேளையிலும் பொதுத் தேர்தல் ஒன்று வருவதற்குரிய சாத்தியப்பாடுகள் உள்ளதாகவே இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான இன்றைய அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தயவிலேயே தங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைமுகமான நிபந்தனைகளின்; அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. இதனால், அக்கட்சியின் நிபந்தனைகள் நிறைவேறாத பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிராகச் செயற்படலாம். இதன் விளைவு பொதுத் தேர்தலாக மாறும். ஆதலால், இலங்கையில் ஒரு உறுதியான அரசாங்கம் இல்லாத நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும், ஏனையவர்கள் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதே வேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சிலரை அமைச்சர்களாக நியமிக்கமாட்டேன் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். ஆயினும், தனிப்பட்ட கோபங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பதவியை வழங்குவதற்கு மறுக்க முடியாதென்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அமைச்சர்கள் நியமனத்தில் தற்போது வரைக்கும் இழுபறி நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நீதிமன்றம் செல்வோம் என்று கூட தெரிவிக்கப்படுகின்றன. 

    செல்வாக்கு
    நெருப்பு அணைந்த போதிலும் இன்னும் புகைந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அரசியல் சூழல் இருக்கின்றது. எந்த வேளையிலும் மீண்டும் நெருப்பு பற்றிக் கொள்ளலாம். இத்தகையதொரு நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது ஜன முன்னணியுடன் கூட்டு வைத்துக் கொள்வதற்கு எடுத்துள்ள முடிவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளார்கள். இதனால், ஜனாதிபதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளார். அத்தோடு, ஜனாதிபதியின் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் தனது தனிப்பட்ட அரசியலுக்காக நாட்டையே பாழாக்கி விட்டார் என்ற கருத்து மோலோங்கியுள்ளது. இதே வேளை, மஹிந்தராஜபக்ஷவின் அண்மைக் கால நடவடிக்கைகள் அவரது அரசியல் செல்வாக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் பொது ஜன முன்னணியில் இணைந்து கொண்டார். தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கூட வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிரந்தர உறுப்பினர் என்றும், பொது ஜன முன்னணியில் இணைந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். 

    இத்தகையதொரு அரசியல் நெருக்கடியில் தேசியக் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் இருக்கின்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கை எடுத்துக் கொண்டால் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மூலமாக தாம் மீண்டும் சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கலாமென்று கணக்குப் போட்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் அரசியல் செல்வாக்கு இன்னும் ஆட்டங் காணும் நிலையே ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கியஸ்தர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கும் அதாவுல்லாஹ்வுக்கும் இடையிலேயே ஏற்பட்டுள்ள முரண்பாடு இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவர் தேசிய காங்கிரஸில் பயணிக்கமாட்டார் என்பது உறுதியாகவே இருக்கின்றது. ஆயினும், எந்தக் கட்சியில் இணைந்து கொள்வார் என்பதில் தெளிவில்லை.

    இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் செல்வாக்கில் அரசியல் நெருக்கடிச் சூழல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அக்கட்சிகள் அரசியல் நெருக்கடியை ஒற்றுமையாக எதிர் கொண்டமையே இதற்கு காரணமாகும். ஆயினும், இனிவரும் நாட்களில் அக்கட்சிகளின் செயற்பாடுகள் செல்வாக்கில் ஏற்ற இறக்கத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

    அமைச்சர் பதவிகள்
    தற்போது அரசாங்கத்தில் ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன், கபீர் ஹாசீம் ஆகியோர்கள் கெபினட் அமைச்சர்களாகவும், அமீர்அலி, அலிசாஹீர் மௌலானா, எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.சி.பைசால் காசீம் ஆகியோர்கள் இராஜாங்க அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பாரிய பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாக சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண வேண்டும். இன்னும் சிலர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளார்கள். 

    கடந்த எல்லா அரசாங்கத்திலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். ஆனால், சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதே வேளை, முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. அமைச்சர் பதவிகள் மூலமாக தனிநபர்கள் அலங்கரிக்கப்பட்டார்களே அல்லாமல் சமூகம் அலங்கரிக்கப்படவில்லை. இன்றைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் பத்து மாதங்களுக்கே நீடிக்கும். அதற்குள் முஸ்லிம் சமூகத்திடம் காணப்படும் பாரிய எதிர் பார்ப்புக்களை இவர்கள் பெற்றுள்ள அமைச்சர் பதவிகளின் மூலமாக தீர்க்க முடியுமா என்பதுதான் கேள்வியாகும். கல்முனையில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் இருக்கின்ற எட்டு மாதங்களில் எந்தவொரு வேலையையும் செய்து கிழிக்க முடியாதென்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

    இதே வேளை, அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டமை குறித்து அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்களை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக செல்லும் நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அமைச்சர் பதவிகள் சமூகத்தின் வெற்றி போல காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் பதவிகள் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கவில்லை என்பதற்கு கடந்த காலமே சாட்சியாகும். அமைச்சர் பதவிகள் தனி நபர்களையும், அவர்களின் குடும்பங்களையுமே வளர்த்துள்ளன. சமூகம் தேய்வடைந்து கொண்டு செல்வதனை தடுப்பதற்கு அமைச்சர் பதவிகள் துணை செய்யவில்லை. 

    தற்போது கூட அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்காது தாங்கள் அமைச்சர்களாக இருக்க வேண்டுமென்றே எண்ணியுள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லாது போயிருந்தால் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆட்சி அமைக்க முடியாது. அத்தகைய பங்களிப்பை செய்துள்ள அக்கட்சி எதிர்க் கட்சி வரிசையில் இருக்கின்றது. ஆனால், அக்கட்சி எல்லா அமைச்சர்களின் மூலமாகவும் காரியங்களைச் செய்து கொள்ளும் வல்லமையைப் பெற்றுள்ளது. இது போல் முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளாதிருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் போன்று பெரியதோர் அந்தஸ்தில் இருந்திருக்க முடியும். இத்தகையதொரு நிலைப்பாட்டிற்கு மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் முதலில் வந்திருந்தார். பின்னர் இதே நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூட வந்திருந்தார். 

    ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நாம் அனைவரும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளாதிருப்போம். அவ்வாறு இருந்தால் 30 அமைச்சர்களிடமும் வேலை வாங்கலாம். எங்களின் கோரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமென்று தெரிவித்தாக கல்முனையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளாது சமூகத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்தி இருந்தால் அதனை நிறைவேற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க முன் வந்திருப்பார். ஆனால், அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டமையால் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இதுதான் கடந்த காலங்களிலும் நடைபெற்றன.  சமூகத்தின் தேவையை விடவும் தனி நபர் பெற்றுக் கொள்ளும் பதவிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஆசைப்பட்டதனால்தான் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டோம் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை அவரது தலைமைப் பதவிக்கு பொருத்தமான கருத்தாக அமையவில்லை. 

    அமைச்சர் பதவிகள் மூலமாகத்தான் கட்சியினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்ளலாமென்ற சிந்தனை முஸ்லிம் கட்சிகளிடையே மேலோங்கியுள்ளது. இன்று எந்தக் கட்சியும் கொள்கை அளவில் செயற்படவில்லை. சமூகத்தின் தேவைகளை அடைந்து கொள்வதற்காக வகுக்கப்பட்ட கொள்கைகள் புறந்தள்ளப்பட்டு தேசிய கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப முஸ்லிம் கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகள் மக்களிடையே கொள்கைகளை விதைக்காது அபிவிருத்தி அரசியலையே விதைத்துக் கொண்டன. இதற்கு முஸ்லிம்களிடம் காணப்பட்ட அபிவிருத்தி எனும் எண்ணப் போக்கும் ஒரு காரணமாகும். ஆயினும், முஸ்லிம் பிரதேங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்திகள் என்பது பெரும்பாலும் வெறுமனே கொங்றீட் வீதிகளை அமைப்பதாகவே இருக்கின்றன. அது கூட திட்டமிடப்படாத வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

    கிழக்கு மாகாணம்
    இதே வேளை, அமைச்சர் பதவிகளை முஸ்லிம் சமூகத்தின் உரிமை போன்று காட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த உரிமையைக் கூட கிழக்கு மாகாணத்திற்கு முழுமையாகப் பெற்றுக் கொடுக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் சார்பில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களுள் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் 06 பாராளுன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸின் சார்பில் 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸிற்குரிய ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களில் 06 பேர் கிழக்கு மாகாணத்தில் உள்ளார்கள். மக்கள் காங்கிரஸிற்குரிய 05 பாராளுமன்ற உறுப்பினர்களுள் 03 பேர் கிழக்கு மாகாணத்தில் உள்ளார்கள். மொத்தத்தில் மஹிந்தராஜபக்ஷவின் பிரதமர் என்ற கனவை கலைப்பதற்கு இவ்விரு கட்சிகளின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதியான முடிவு காரணமாகும். இந்த 12 பேரில் 09 பேர் கிழக்கு மாகாணத்தில் உள்ள போதிலும் கெபினட் அமைச்சர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை. 

    அமைச்சர் பதவி முஸ்லிம் சமூகத்திற்கான கௌரவம் என்றால் கிழக்கு மாகாணத்தை கௌரவப்படுத்துவதற்கு ஒரு கெபினட் அமைச்சர் பதவி பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஏன் நடவடிக்கைளை எடுக்கவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணம்தான் முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிக ஆதரவுத் தளமாக இருக்கின்றது. இங்கு 06 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதிலும் ஏன் ஒருவரைக் கூட கெபினட் அமைச்சராக நியமிக்கவில்லை. குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களில் பொருத்தமான ஒருவரை கெபினட் அமைச்சராக நியமித்திருக்க வேண்டும். ஆனால், யாரும் நியமிக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கெபினட் அமைச்சர் பதவிக்கு தகுதியில்லையா என்று கேட்கின்றோம். 

    கெபினட் அமைச்சராக எவரும் நியமிக்கப்படாத நிலையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 05 பேர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக அமைச்சரவை அந்தஸ்து இல்லாதவர்களைத்தான் இராஜாங்க அமைச்சராக நியமிப்பது வழக்கம். ஆனால், இம்முறை அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே வேளை, இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், இதுவொரு குழப்பாகவே இருக்கின்றது. இவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அந்த பொறுப்புக்களுக்கு கெபினட் அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிதி அமைச்சுக்களுக்கே ஒதுக்கப்படும். 

    எனவே, அமைச்சர் பதவியை முஸ்லிம் சமூகத்தின் உரிமை என்று சொல்லிக் கொண்டு ஊர்கோலம் போய்க் கொண்டிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், இராஜாங்க அமைச்சர்களும், ஆதரவாளர்களும் கிழக்கு மாகாணத்திற்கு கெபினட் அமைச்சர் பதவி வழங்காது போனமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

    இன்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கெபினட் அமைச்சர் பதவியின் கனதியை சுமக்க முடியாதவர்கள் என்றால், அடுத்த தேர்தலில் தகுதியானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் பிரதி அமைச்சர்களைப் பெற்றுக் கொண்டவர்கள் சரியாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பிரதி அமைச்சர் பதவிகளையே செய்ய முடியாதவர்கள் கெபினட் அமைச்சர் பதவிகளை எவ்வாறு சுமக்கப் போகின்றார்கள் என்று முஸ்லிம் கட்சிகளின் ஆதரவாளர்களும் பேசிக் கொள்கின்றார்கள். அப்படியாக இருந்தால் இராஜாங்க அமைச்சர் பதவியின் மூலமாகவும் சாதிக்கமாட்டார்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

    பொறுப்புக்கள்
    இதே வேளை, எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளுராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக நிமியக்கப்பட்டுள்ளார். இவருக்கு இவ்வமைச்சுப் பதவி மூலமாக மிகப் பெரிய சிக்கல்  இருக்கின்றது. அதாவது சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபையை வழங்க வேண்டிய நிலைக்கு அல்லது வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலமாக ரவூப் ஹக்கீம் தம்மை நோக்கி வந்த அம்பை ஹரீஸின் பக்கம் திசை திருப்பியுள்ளார். அது மட்டுமன்றி மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனும் பாதுகாக்கப்பட்டுள்ளார். சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை என்பது ஹரீஸின் கைகளுக்குள் அகப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை வழங்குவதும், வழங்காது விடுவதும் ஹரீஸின் எதிர்கால அரசியலுக்கு பெரும் ஆப்பாக இருக்கப் போகின்றது. 

    பொதுத் தேர்தல்
    இவ்வாறு அரசியல் உராய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ரவூப் ஹக்கீம் தமது கட்சியை பொதுத் தேர்தலுக்கு அல்லது மாகாண சபைத் தேர்தலுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கின்றார். இதற்காகவே அவர் இராஜாங்க அமைச்சர்களின் ஊர்கோலங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பல இடங்களில் பின்னடைவுகளைக் கண்டுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸிடம் உள்ளது. என்ற போதிலும், அதன் 2019ஆம் ஆண்டிற்குரிய வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது தடவையாக பிரிதொரு தினத்தில் வரவு – செலவுத் திட்டம் முன் வைக்கப்பட்ட போது எதிர் அணியினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

    ஆதலால், உள்ளுராட்சி சபையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு இனிவரும்; தேர்தல்களில் ஏற்பட்டு விடக் கூடாதென்பதில் ரவூப் ஹக்கீம் குறியாக இருக்கின்றார். அதற்காக கிழக்கு மாகாணத்தில் பல பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். கட்சியை விட்டு தூரமாகியுள்ளவர்களை கட்சியோடு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளார். தற்போது அம்பாரை மாவட்டத்தில் தரித்துள்ளார். 

    ஆனால், இத்தகையதொரு முன் ஆயத்த வேலையை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் மேற்கொள்ளவில்லை. சில வேலைகளில் முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் மக்கள் காங்கிரஸையும் தூண்டக் கூடும். அதன் பின்னர் துரித செயற்பாடுகளில் ஈடுபடலாம். 

    இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு அம்பாரை மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்துவதில்தான் தடைகள் உள்ளன. இம்மாவட்டத்தில் இரு கட்சிகளிiடையே விட்டுக் கொடுப்பு நடைபெற்றால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இணைந்து செயற்படுவது சாத்தியமாகும். ஆயினும், எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் இக்கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் சூழலே உள்ளது. அது சில இடங்களில் இணைந்தும், சில இடங்களில் தனித்தும் இருக்கலாம். இது கூட முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் எடுக்கும் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளன. 

    கட்சிகளின் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்ளல் அல்லது அதிகரித்துக் கொள்ளல் என்பது அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. கடந்த காலங்களைப் போன்று தொழில்களை விற்பனைப் பொருளாகவும், கொந்தராத்து என்ற பேரில் பணம் உழைக்கும் நடவடிக்கைகளும், ஆதரவாளர்களை பிரித்தாளும் நிலையும், முகவர்கள் மூலமான நடவடிக்கைகளும், எதிர் அணியினரை அரவணைக்காது அரசியல் பலி வாங்கும் போக்கும், குழி பறிப்புக்களும் உள்ளிட்டவை நடக்குமாயின்; கட்சிகளின் செல்வாக்கில் மாத்திமன்றி தனி நபர்களின் செல்வாக்கிலும் வீழ்ச்சி ஏற்படலாம். ஆதலால், தற்போது முஸ்லிம் கட்சிகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பரீட்சைக் காலமாகும். இதில் சித்தி என்பது அவர்களின் நடவடிக்கைகள் எனும் விடைகளிலேயே தங்கியுள்ளன. 
    Vidivelli 28.12.2018

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சர் பதவிகளால் சாதிப்பார்களா? சம்பாதிப்பார்களா? Rating: 5 Reviewed By: The Murasu
    Scroll to Top