காரைதீவு தவிசாளர் சர்வாதிகாரத்தின் உச்சத்தில், முறைகேடான வரவு - செலவு திட்டம் நிறைவேற்றம் : காரைதீவு மகா சபை முக்கியஸ்தர்கள் குற்றச்சாட்டு - THE MURASU

Dec 15, 2018

காரைதீவு தவிசாளர் சர்வாதிகாரத்தின் உச்சத்தில், முறைகேடான வரவு - செலவு திட்டம் நிறைவேற்றம் : காரைதீவு மகா சபை முக்கியஸ்தர்கள் குற்றச்சாட்டு

(காரைதீவு நிருபர்)
பொதுவாக இந்த நாட்டின் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மிக மட்டமான, மோசமான உள்ளூராட்சி சபை தலைவராக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் செயற்பட்டு வருகின்றார் என்று இப்பிரதேச சபையின் காரைதீவு மகா சபை சுயேச்சை குழு உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் தெரிவித்தார்.

இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை நேற்று சனிக்கிழமை காலை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் காரைதீவு மகா சபை செயற்பாட்டாளர் க. குமாரசிறியும் கலந்து கொண்டார்.

ஆறுமுகம் பூபாலரணம் இங்கு தெரிவித்தவை

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்ட காலத்தில் நாம் இருந்து வருகின்றோம். ஆனால் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முழுமையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவரை பாவனை செய்து அகங்காரம், ஆவேசம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டு அறிவீனமாக நடந்து வருகின்றார். பொதுவாக இந்த நாட்டின் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மிக மட்டமான, மோசமான உள்ளூராட்சி சபை தலைவராக இவரே உள்ளார். மாத்திரம் அன்றி காரைதீவு பிரதேச சபையின் மிக மட்டமான, மோசமான தவிசாளரும் இவரேதான் ஆவார்.

சட்டங்களுக்கு புறம்பாகவும், அவற்றை அப்பட்டமாக மீறியும் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சர்வாதிகாரியாக நடக்கின்றார். இவருடைய சர்வாதிகாரத்தின் உச்சமாக காரைதீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் முறைகேடாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே இந்த வரவு - செலவு திட்டம் வலிதற்றது ஆகும். உத்தேச வரவு - செலவு திட்டம் காரைதீவு பிரதேச மக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படவே இல்லை. உத்தேச வரவு - செலவு திட்டம் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு போதுமான கால அவகாசத்துடன் கையளிக்கப்படவில்லை. வரவு - செலவு திட்டம் மீது விவாதம் நடத்தப்படாமல் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. வரவு - செலவு திட்டத்தில் பல குறைபாடுகள், ஒழுங்கீனங்கள் உள்ளன. இவற்றை நாம் சுட்டி காட்டியபோதும் அவற்றை முறையாக திருத்தக்கூட முயற்சிக்காமலேயே எதேச்சையாக தவிசாளர் கம்பனி வரவு - செலவு திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. தவிசாளர் எதை சொன்னாலும் முன்மொழிந்து வழி மொழிந்து ஆமாம் சாமி போடுகிற உறுப்பினர்கள் சிலர் கூடவே இருக்கின்றனர். இவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் மு. காண்டிபன் இணைந்து இருப்பது அருவருப்பை தருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹீர் இந்த வரவு - செலவு திட்டத்தின் குறைபாடுகள், ஒழுங்கீனங்கள் ஆகியவற்றை முன்னால் நின்று வெளிப்படுத்தி நீதியின் குரலாக ஒலித்தபோது அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் காண்டிபன் அநீதிக்கு துணை போய் விட்டார். அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சபாபதி நேசராசா இந்த முறைகேடான வரவு - செலவு திட்டத்துக்கு துணை போகாமலேயே வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தார், ஏனென்றால் அவரால் எதிர்த்து வாக்களிக்க முடியாது. இந்த வரவு - செலவு திட்டத்தில் பல குறைபாடுகள், ஒழுங்கீனங்கள் உள்ளபோதிலும் உதாரணத்துக்கு ஒரு பிழையை இந்த இடத்தில் சுட்டி காட்டுகிறேன். எரிபொருளுக்கு ஏற்பட்ட உண்மையான செலவினத்தை காட்டாமல் அத்தொகையை குறைத்து பொய்யாக காட்டி உள்ளனர்.

தவிசாளர் ஜெயசிறில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர் என்பதற்காக நாம் அவரை நாம் எதிர்க்கவில்லை. அவருடன் இணைந்து, இணங்கி பிரதேச சபையை வெகுசிறப்பாகவும், நேர்த்தியாகவும் நடத்துவதற்கு நாம் நல்லெண்ண சமிக்ஞைகள் விடுத்து இருந்தோம். அவர் அவற்றை பொருட்படுத்தாமல் கொம்பு முளைத்தவர் போல எதேச்சையாக நடந்து வந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்தோம். முறைகேடான வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்தே இனியும் பொறுக்க முடியாது என்கிற நிலையில் ஊடகவியலாளர்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றோம்.

காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரையும் கொண்டதாக புதுமையான நிதி குழுவை தவிசாளர் உருவாக்கி வைத்திருக்கின்றார். உப குழுக்கள் ஒவ்வொன்றிலும் தவிசாளர் விசித்திரமான முறையில் அங்கம் வகிக்கின்றார். நிதி குழு கூட்டம், உப குழுக்களின் கூட்டம் ஆகியன ஒரு முறைகூட உண்மையில் கூடவே இல்லை, மாறாக கண் துடைப்புகளே நடந்து உள்ளன. தவிசாளரின் தீர்மானங்கள் மாத்திரமே நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஏனைய உறுப்பினர்களின் தீர்மானங்கள் எழுத்தில் மாத்திரம் கிடக்கின்றன. உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், ஆலோசனைகள் போன்றவைகூட்ட குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.  இது வரையிலான பதவி காலத்தில் இவர் என்ன சேவை செய்திருக்கின்றார்? என்று கேட்கின்றபோது வீதிகளை துப்புரவு செய்ததாகவும், தெரு விளக்குகள் போட்டதாகவும் தவிசாளர் ஜெயசிறில் காட்டுவது இவரின் இயலாமையைத்தான் பறை சாற்றுகின்றது. ஆனால் மறுபுறத்தில்  தவிசாளர் பதவியின் அதிகாரத்தையும், பிரதேச சபையின் வளங்களையும் தனிப்பட்ட ஈட்டங்களுக்காக இவர் வெளிப்படையாகவே துஷ்பிரயோகம் செய்து வருகின்றார். 

நாம் தவிசாளர் ஜெயசிறிலின் வரம்பு மீறிய  தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் குறித்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு வருகின்ற தினங்களில் எழுத்துமூல முறைப்பாடு மேற்கொள்ள உள்ளோம். அத்துடன் இவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றோம்.

                                             குமாரசிறி
குமாரசிறி பேசுகையில் தெரிவித்தவை வருமாறு

மோசடியான வரவு - செலவு திட்டமே நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே இதை ஏற்க முடியாது. பொது மக்களின் பணம் சுரண்டப்படுவதற்கு இடம் கொடுக்க முடியாது. செலவுகள் மறைக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் காட்டப்பட்டு இருப்பது மக்களை ஏமாற்றுகின்ற போக்கிரித்தனமான வேலை ஆகும். நான் தவிசாளரை நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து இவை தொடர்பாக விளக்கம் தருமாறு கடிதம் மூலம் கோரினேன். சபையின் நடவடிக்கைகளை பார்ப்பதற்கே அவருக்கு நேரம் போதமல் காணப்படுகின்றபோது இதற்கு பதில் அளிக்க நேரம் இல்லை என்று பொறுப்பு இல்லாமல் மறுமொழி சொன்னார். தவிசாளரான அவரை குற்றம் சுமத்தி பொலிஸில் அடைத்து விட்டு உப தவிசாளராக உள்ள முஸ்லிம் ஒருவரை ஆட்சியில் அமர்த்த போகின்றீர்களா? என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டார். வரவு - செலவு திட்டத்தில் சில தவறுகள் உள்ளனதான், ஆனால் அவற்றை பெரிதாக்க தேவை இல்லை என்று சொன்னார். ஆயினும் நாம் இவரின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here