கல்முனை மாநகர எல்லைக்குள் டிசம்பரில் டியூசனுக்குத் தடை; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் முதல்வர் றகீப் - THE MURASU

Dec 6, 2018

கல்முனை மாநகர எல்லைக்குள் டிசம்பரில் டியூசனுக்குத் தடை; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் முதல்வர் றகீப்

(அஸ்லம் எஸ்.மௌலானா)
டிசம்பர் விடுமுறை காலத்தில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-11 வரையான மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் (டியூசன்) நடத்தப்படுவது, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்படுவதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தலை மீறி டியூசன் வகுப்புகள் நடத்தப்பட்டால், குறித்த டியூட்டரிகளின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"வருடத்தின் பெருங்காலப்பகுதியை கல்விக்காக ஒதுக்கி, கற்றுக்களைத்திருக்கும் மாணவர்கள், வருட இறுதியில் தமது பெற்றோர், உறவினர்களுடன் சந்தோசமாக பொழுதுப்போக்கவும் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களை மேற்கொள்வதற்காகவுமே வருட இறுதிப்பகுதியான டிசம்பர் மாதத்தை அரசாங்கம் பாடசாலை விடுமுறை காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆனால் முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்ற தனியார் கல்வி நிலையங்கள், இவ்விடுமுறை காலத்திலும் டியூசன் வகுப்புகளை நடாத்தி, மாணவர்களின் ஓய்வுக்கு குந்தகம் விளைவிக்கின்றன. இது தொடர்பில் பள்ளிவாசல்கள் சம்மேளனம், கோவில்கள், சமூக அமைப்புகள் போன்றவையும் பெற்றோர்கள் தரப்பிலும் தம்மிடம் விடுத்திருக்கும் கோரிக்கைகளுக்கமைவாக மாணவர்களின் நலன் கருதி, இக்காலப்பகுதியில் எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் டியூசன் வகுப்புகளுக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளேன்.

இதன் பிரகாரம் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் தரம்-1 தொடக்கம் தரம்-11 வரையான மாணவர்களுக்கு எவ்வித டியூசன் வகுப்புகளும் நடத்தப்படக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை விடுக்கின்றேன். இதனை மீறி செயற்படும் டியூட்டரி உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.

இத்தடையை கண்டிப்பாக அமுல்படுத்தும் பொருட்டு எமது மாநகர சபை உத்தியோகத்தர்கள் புதன்கிழமை (05) தொடக்கம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதன்போது எமது அறிவுறுத்தலை மீறி செயற்படும் டியூட்டரிகள் கண்டறியப்பட்டு, அவை வியாபார உரிமம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தின் நிமித்தம் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மாணவர்களிடம் கட்டணங்களை அறவீடு செய்யும் தொழில் நிறுவனங்களாக காணப்படுவதனால் அவை யாவும் கல்முனை மாநகர சபையில் வியாபார உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் அனைத்து டியூட்டரிகளும் இந்த வியாபார உரிமத்தை பெற்றாக வேண்டும்.

அத்துடன் எதிர்காலத்தில் குறித்த டியூட்டரிகள் யாவும், மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கின்றனவா என்பது தொடர்பில் மாநகர சபையினால் பரிசோதிக்கப்படுவதுடன்  மாநகர சபையில் பதிவு செய்யப்பட அனைத்து டியூட்டரிகளும் பொதுவான ஒரு கொள்கைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கமைப்பு செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்.

ஆகையினால் நமது மாணவர் சமூகத்தின் நலன்களை கருத்தில் கொண்டு எமது மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு டியூட்டரி உரிமையாளர்களிடம் அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று முதல்வர் றகீப் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here