தனிப்பட்ட விருப்புக்களை தவிர்த்து பொறுப்புள்ள ஜனாதிபதியாக செயல்படல் வேண்டும். - THE MURASU

Dec 13, 2018

தனிப்பட்ட விருப்புக்களை தவிர்த்து பொறுப்புள்ள ஜனாதிபதியாக செயல்படல் வேண்டும்.

இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்மூலம் இந்த நாட்டில் நீதித்துறை உயிர்வாழ்கின்றது என்பதனை காட்டுகின்றது.
அதிலும் இந்த வழக்கானது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளோடு சம்பத்தப்பட்டு இருந்தால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்குமா என்ற கேள்வி எழும்பாமலில்லை.
எமது நாட்டின் நீதித்துறை சில சந்தர்ப்பங்களில் நிறைவேற்று அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு இருந்த வரலாறுகளும் உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு வெளியாகுவதற்கு முன்பே அரசியல் யாப்பு என்ன கூறுகின்றது என்றும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும் பாமர மக்களால்கூட விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
ஒரு பொறுப்புள்ள ஜனாதிபதி அதிலும் பல தசாப்தகால அரசியல் அனுபவம் உள்ள ஒருவர் அரசியல் யாப்பினை படித்து பார்க்காமலா பாராளுமனரத்தினை கலைத்தார் என்று பாமர மக்கள் கேள்வி எழுப்புகின்ற நிலைக்கு இன்றைய ஜனாதிபதியின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக இருந்தது மிகவும் கவலையான விடயமாகும்.
அதிலும் ஐந்து வருடங்களுக்கு பதவிவகிக்க மக்கள் வழங்கிய ஆணையினை உதாசீனம் செய்துவிட்டு, எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல் திடீரென பாராளுமன்றத்தினை கலைத்ததானது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.   
ஜனாதிபதியின் செயல்பாடு கவலையாக இருந்தாலும், இதனை சர்வதேசத்தினர் வேறுவிதமாகவே நோக்குவார்கள். அதாவது அரசியல்யாப்பினை விளங்கிக்கொள்ளாத முட்டாள்தனமான ஒருவரா இந்த நாட்டின் தலைவர் என்று சிந்திக்கின்ற நிலைமைக்கு இந்த நாட்டினை ஜனாதிபதி அவர்கள் கொண்டு சென்றது துரதிஷ்டமான விடயமாகும்.
எனவே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளையும், தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும் உதறித்தள்ளிவிட்டு ஓர் பொறுப்புள்ள ஜனாதிபதி என்ற நிலையிலிருந்து அரசியல் சாசனத்தின்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகும்.  
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here