முஸ்லிம் தலைமைகளை கொலை செய்ய சூழ்ச்சி! - THE MURASU

Oct 7, 2018

முஸ்லிம் தலைமைகளை கொலை செய்ய சூழ்ச்சி!

எஸ்.றிபான் - 
இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளை கொலை செய்து அதனை தமிழர்களின் மீது சுமத்தி தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இன மோதலை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று தனக்கு நிதி உதவி அளித்தாக ஊழல் மோசடி அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். இவரது இக்கருத்து இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களில் இக்கருத்துக்கள் முக்கிய தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது. மேற்படி கருத்தை அடுத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இடையே பலத்த முரண்பாடுகள் உள்ளதனைப் போன்று அவர்களுக்கு ஆபத்துக்களும் அதிகமாகும். முஸ்லிம் அரசியல் தலைமைகளையும், முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாகக் காண்பிப்பதற்கு பெரும்பான்மையினவாதிகளினால் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளை கொலை செய்வதற்கும், அதனை தமிழர்களின் மீதும் சுமத்துவதற்கும் புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று நிதி வழங்கியுள்ளதென்ற குற்றச்சாட்டு முஸ்லிம்களை திட்டமிட்ட வகையில் ஒடுக்குவதற்கும், அடக்குவதற்கும் நீண்ட காலமாக நடவடிக்கைகள் மேற்; கொண்டிருக்கின்றார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆதலால், ஊழல் மோசடி அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமாரவின் கருத்துக்கள் குறித்து அரசாங்கம் விரைவாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொலை செய்ய நிதியுதவி
நாமல் குமார கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பிரான்ஸில் வசிக்கும் துஷாரபிரிய என்பவர் கிழக்கில் தமிழ், முஸ்லிம்களிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் அமைச்சர்களைக் கொலை செய்வதற்கும், பள்ளிவாசல்களை உடைப்பதற்கும் என கெரில்லா அமைப்பொன்றை உருவாக்குமாறு தனக்கு பணிப்புரை வழங்கியதோடு, அவற்றைச் செய்வதற்காக நிதியுதவி வழங்கியதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்குரிய ஆதாரங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது இக்கருத்துக்களை அரசாங்கம் பொறுப்புடன் கவனத்தில் எடுத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் மீது நாட்டின் பல பாகங்களில் திட்டமிட்டவாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. உயிர் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே பௌத்த இனவாத அமைப்புக்களின் தேரர்கள் இவற்றை முன்னின்று மேற்கொண்டார்கள். இவர்களுக்கும் முஸ்லிம்களை தாக்குமாறு வெளிநாடுகள் நிதியுதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டன. நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நோர்வே போன்ற ஒரு சில நாடுகள் பௌத்த இனவாத அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்கிக் கொண்டிருப்பதாக ஒரு சில அரசியல்வாதிகளினால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நாமல் குமாரவின் கருத்துக்களைத் தொடர்ந்து முழுமையாக நம்ப வேண்டியதொரு சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளை, அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் மீது தமிழர் தரப்பினரால் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் பாடசாலை வரும் போது பர்தா அணியக் கூடாதென்றும், ஒரு சில இடங்களில் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளன. இவைகள் தமிழ், முஸ்லிம்களிடையே இன மோதல்களை ஏற்படுத்துவதற்காகத்தானோ மேற்கொள்ளப்பட்டன என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. மட்டுமல்லாது முஸ்லிம்களின் காணிகளை தங்களின் காணிகள் என்று ஒரு சில தமிழ் இளைஞர்கள் அடிபிடிகளில் ஈடுபட்டதெல்லாம் இந்தப் பின்னணியில்தானோ என்றெல்லாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

மேலும், இப்போது தமிழர்களிடம் ஆயுதங்கள் கிடையாது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை முஸ்லிம்கள் வாங்கியுள்ளார்கள் என்று புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளி இன்பராசா ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளமை முஸ்லிம்களை ஆயுதக் குழுக்களுடன் தொடர்புபடுத்துவதற்கும், தமிழர்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதனை முஸ்லிம்களின் தலையில் சுமத்தி நாட்டை ஒரு குழப்ப நிலையில் வைத்துக் கொள்வதற்காகத்தானோ என்றெல்லாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஆனால், இன்பராசா மீது அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு காலதாமதங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பது கூட முஸ்லிம்களிடையே சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.

நாமல் குமார முன் வைத்துள்ள கருத்துக்கள் உண்மையாயின் நாட்டில் மிக மோசமான நிலைமைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஏனெனில், நாமல் குமார போன்று வேறு நபர்களுக்கு கூட முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டிருக்கலாம். அது மட்டுமன்றி நாடு மீண்டும் ஒரு இனக் கலவரத்தை சந்திக்குமாயின் 30 வருட யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித அவலங்களை விடவும் மோசமான அவலங்களை மூவின மக்களும் சந்திக்க வேண்டி ஏற்படலாம்.

எதற்காக தாக்க வேண்டும்
புலம்பெயர்ந்துள்ளவர்களைப் பெர்றுத்த வரை நீண்ட காலமாக அங்குள்ள வாழ்வு முறைக்கு பழக்கப்பட்டு விட்டார்கள். அதிலிருந்து அவர்களினால் மீள முடியாதுள்ளது. நாட்டில் அமைதி நிலவினால் அதிகமானவர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது கூட அந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆதலால், நாட்டில் இன மோதல்கள் இருந்தால்தான் அவர்களினால் அங்கு தொடர்ச்சியாக வாழலாம்.

இதே வேளை, தமிழ், முஸ்லிம்களிடையே இன மோதல்களை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மையினரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முடியவில்லை என்று அரசாங்கத்தை சர்வதேசத்தின் முன்னால் இக்கட்டில் மாட்டிவிடவும் இனமோதல்களை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கலாம்.
இதே வேளை, நாட்டின் பாதுகாப்பு குறித்து பலத்த விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஆவாக் குழுவின் நடவடிக்கைகள், ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியுள்ளன. இவைகள் குறித்து விசாரணைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும், இலங்கை அரசாங்கம் தற்போது சீனா சார்பு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றன. இதனால், இந்தியா அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் மிகுந்த சினத்துடன் உள்ளன. இதனால் இந்நாடுகள் கூட இலங்கையின் அமைதியை குழைத்து தங்களின் காலடிக்கு அரசாங்கத்தை பணியச் செய்யவும் திட்டங்கள் வகுக்கப்படலாம். இதற்கு இனமோதல்களை ஏற்படுத்துவதற்கு கூட இந்நாடுகள் ஏற்பாட்டாளர்களை உலவ விட்டிருக்கலாம்.

ஆதலால், இலங்கையை குழப்ப நிலையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் புலம் பெயர் அமைப்புக்களும், மேற்படி நாடுகளும் ஒற்றுமையுடன் செயற்படுவதற்கும் திட்டங்கள் இருக்கலாம். வல்லரசு நாடுகள் தங்களின் ஆதிக்கதை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஆயுதக் குழுக்களை ஏற்படுத்திச் செயற்பட்டுக் கொண்டிருப்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
முஸ்லிம் அரசியல் தலைவர்களையும், பள்ளிவாசல்களையும் தாக்குவதற்கு சதி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்று கவனக் குறைவாக இருக்காது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அத்தோடு முஸ்லிம் அமைச்சர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். கடந்த 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீன் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அவர் மட்டக்களப்பு – ஓட்டமாவடிக்கு சென்ற போது பொலிஸார் அமைச்சர் றிசாட் பதியூதின் உயிருக்கு ஆபத்துள்ளதென்றும், அவரை குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாமென்றும் தெரிவித்துள்ளார்கள். 

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்புக்கு விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக இருந்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் அவருக்கு மரண தண்டனையும் விதித்திருந்தது. ஆயினும், அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புக் குறைபாட்டின் காரணமாகவே ஹெலிகொப்டர் விபத்தில் மரணமடைந்தார். ஆதலால், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அரசாங்கம் சிறந்த பாதுகாப்புக்களை வழங்க வேண்டும். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் வகுக்கப்பட்டன என்பது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணைகளின் போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆதலால், அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்கு சவால்கள் நிறைந்ததொரு காலமாக இலங்கை மாறிக் கொண்டிருக்கின்றது. அல்லது அவ்வாறு காண்பிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் எதுவாக இருந்தாலும் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட வேண்டியுள்ளது.

குற்றச்சாட்டுக்கள்
இலங்கை முஸ்லிம்களின் மீது இனவாதிகள், பேரினவாத அரசியல் சக்திகள், வெளிநாட்டு சக்திகள் என பலதரப்பாலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இலங்கை முஸ்லிம்களையும், முஸ்லிம் தலைவர்களையும் பயங்கரவாதிகள் போன்றும், முஸ்லிம்களிடையே ஆயுத அமைப்புக்கள் உள்ளதென்றும் பொய்களைச் சொல்லி முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை ஏனைய இனத்தவர்களிடையே பரப்புரை செய்யும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் தலைவர்கள் கடந்த அரசாங்கத்திடமும், இன்றைய அரசாங்கத்திடமும் பல தடவைகள் முறையீடுகளைச் செய்துள்ள போதிலும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றவர்களுக்கு எதிராக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதே வேளை, முஸ்லிம்களிடையே ஆயுத இயக்கங்களில்லை. முஸ்லிம் தலைவர்கள் அத்தகையதொரு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று பாதுகாப்பு தரப்பினரும், அரசாங்கத்தினரும் அறிக்கை விட்டு முஸ்லிம்களை திருப்திபடுத்திக் கொண்டதனையும் காண்கின்றோம். இத்தோடு முஸ்லிம் தலைவர்களும் அமைதியாக இருந்த வருகின்றதொரு நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் தலைவர்கள் தங்கள் மீதும், சமூகத்தின் மீதும் போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தவர்களின் மீது நடவடிக்கைகளை எடுக்கும் வரை ஓயக் கூடாது.

முஸ்லிம் மதரஸாக்களிலும், பள்ளிவாசல்களிலும் ஆயுதங்கள் உள்ளன. அங்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை பொது பல சேன, ராவண போன்ற பௌத்த இனவாத அமைப்புக்கள் முன் வைத்தன. மேலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறிப்பாக றிசாட் பதியூதீன் அரச காணிகளை சட்டத்திற்கு முரணாக அபகரித்து வெளிநாட்டு முஸ்லிம்களை வடமாகாணத்தில் குடியேற்றிக் கொண்டிருக்கின்றார் என்று பௌத்த இனவாத அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தன. இதன் போது முஸ்லிம்களின் ஏனைய துறை தலைவர்களும், இந்தப் பிரச்சினை என்னோடு சம்பந்தப்பட்டதல்ல என்று ஒதுங்கிய அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது பற்றுக் கொள்ளாத சுயநலவாதிகள். எங்களிடையே என்னதான் முரண்பாடுகளும், பிரிவுகளும் இருந்தாலும் சமூகம் என்று வரும் போது, சமூகத்தின் மீது போலியானதொரு குற்றச்சாட்டை முன் வைத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். ஆனால், இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், மார்க்கப் பிரிவுகள் ரீதியாகவும் மோதிக் கொண்டு ஒற்றுமையை இழந்து பலமற்றதொரு சமூகமாக மாறிக் கொண்டிருப்பதனை எந்தத் தலைமையும் சிந்திக்கவில்லை.

பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்கு முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கும் அதே வேளை, இந்த நாட்டை பயங்கரவாத நடவடிக்கைளினால் சீரழித்து. பல உயிர்களை காவு கொள்வதற்கு காரணமாக இருந்த முன்னாள் ஆயுததாரிகளும், அவர்களுக்கு சார்பான தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்கு முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக தென்னிலங்கை பௌத்த இனவாதிகளும், வடக்கு, கிழக்கு இந்து இனவாதிகளும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

முன்னாள் புலிப் போராளி இன்பராசா புலிகளின் ஆயுதங்களை அமைச்சர்கள் றிசாட் பதியூதீனும், ஹிஸ்புல்லாஹ்வும் வாங்கியுள்ளார்கள் என்று சொல்லிருப்பது கூட ஒரு சதி முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இனக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு அவர்களே தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதனை முஸ்லிம்களிடையே உள்ள ஆயுதக் குழுக்கள்தான் தாக்கியுள்ளார்கள் என்று காட்டுவதற்காக இப்போதே முஸ்லிம்களிடையே ஆயுதங்கள் உள்ளனவென்று சொல்லிக் கொள்கின்றார்களா என்று முஸ்லிம்கள் சந்தேகம் கொள்வதனை யாரும் தப்பாகக் கருத முடியாது.

முஸ்லிம்களிடையே ஆயுதங்கள் உள்ளன. ஆயுதக் குழுக்கள் உள்ளன என்ற குற்றச்சாட்டு 1990ஆம் ஆண்டுகளிலிருந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களிடையே ஜிஹாத் என்ற பெயரில் ஆயுத இயக்கம் உள்ளதென்று விடுதலைப் புலிகளும் சொல்லிக் கொண்டார்கள். ஒரு சில தென்னிலங்கை அரசியல்வாதிகளும், பௌத்;த இனவாதிகளும் இக்கருத்தை முன் வைத்தார்கள். அது மட்டுமன்றி தலிபான், அல் - ஹைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு தொடர்புள்ளதென்றும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். 

முஸ்லிம்களை ஆயுதக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும் அவை யாவும் போலியான குற்றச்சாட்டுக்கள் என்பதனை இலங்கை புலனாய்வுப் பிரிவும், பாதுகாப்புத் தரப்பினரும் பல தடவைகள் சொல்லியுள்ளார்கள். என்றாலும் இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தயக்கமின்றி தமது முஸ்லிம் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அரசாங்கத்தில் உள்ள ஒரு சிலரின் ஆதரவு இருப்பதனால் அவர்கள் தமது இனவாத நடவடிக்கைகளை கைவிடாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவதானம் வேண்டும்

இவ்வாறு முஸ்லிம்களின் மீது எல்லாத் திசைகளிலிருந்தும் எதிர் நடவடிக்கைகளும், குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்பட்டு வருவதானலும் முஸ்லிம்களுக்கு எதிராக எல்லா மாகாணங்களிலும் தாக்குதல் சம்பவங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுவரொட்டிகள் என்பன முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதனாலும் முஸ்லிம்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தங்களின் பிரதேசங்களுக்கு வருகை தரும் புதியவர்கள் தொடர்பிலும், சந்தேகிக்கும் வகையில் நடமாடுகின்றவர்களின் மீதும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அத்தோடு, இவ்வாறு ஏதாவது நடக்குமாயின் யாரும் சட்டதைக் கையில் எடுக்கக் கூடாது. அவ்வாறு சட்டத்தைக் கையில் எடுப்பது முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவதாக அமைந்துவிடும். ஆதலால், பொலிஸாருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முஸ்லிம்களின் விடயங்களில் சட்டம் தமது கடமையை செய்வதற்கு சோம்பேறித்தனத்தைக் காட்டிக் கொண்டாலும், நாம் பொறுமையை இழக்கக் கூடாது.
Thanks Vidivelli - 05.10.2018


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here