கொழும்பை அண்டிய பிரதேசஙகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை - THE MURASU

Oct 7, 2018

கொழும்பை அண்டிய பிரதேசஙகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, தெற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதுடன், கிழக்கு, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மாவட்டத்திலும் சில சந்தர்ப்பங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

கடும் மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக கடும் காற்றுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அத்துடன், அரபி கடல் பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கடற்றொழிலாளர்களுக்கு இடர் முகாமைத்துவ நிலையம் சிவப்பு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இடர் முகாமைத்துவ நிலையத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, கொழும்பிலிருந்து ஆயிரத்து 650 கடல் மைல் தொலைவில் 100 முதல் 200 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இவ்வாறு கடும் மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில் கடும் காற்றுடன் கூடிய வானிலை குறித்த கடல் பிராந்தியத்தில் நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 

அத்துடன், மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என இடர் முகாமைத்துவ நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 

மேலும், மத்திய மற்றும் அதனை அண்மித்துள்ள தெற்கு வங்காளவிரிகுடா கடல் பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களில் மற்றுமொரு தாழமுக்க நிலைமை உருவாகுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து களுத்துறை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, புலத்சிங்ஹல, அகலவத்த, மத்துகம, பதுரெலிய மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையை தொடர்ந்து பல பிரதேசங்களுக்களுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, களுத்துறை, பதுரெலிய, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளிலுள்ள சுமார் 3500 மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் மழையுடனான வானிலையினால்  தடைப்பட்டுள்ள அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன எமது செய்திப் பிரிவிற்கு குறிப்பிட்டார்.

அத்துடன், பேராதனை, கடுகன்னாவ, கலஹா, கலகெதர உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள சுமார் 750 மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையை அடுத்து, மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக இராணுவ உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது. 

இதன்படி, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியை அண்மித்த பகுதிகளில் உதவிகளை வழங்கும் நோக்குடன் சுமார் 60 இராணுவ உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாள் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

காலி, பிட்டிகல, உடுகம மற்றும் யக்கலமுல்ல ஆகிய பகுதிகளிலும் 40 இராணுவ உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல, வெலிபென்ன, மத்துகம உள்ளிட்ட பகுதிகளில் உதவிகளை வழங்கும் நோக்குடன் 85 இராணுவ உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார். 

களுத்துறை மாவட்டத்தில் உதவிகளை வழங்குவதற்காக கடற்படையின் சில குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here