தலையெழுத்து - THE MURASU

Sep 17, 2018

தலையெழுத்து


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட முந்திரிகைப் பருப்பை நாய் கூட சாப்பிடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியுள்ளார். இராணுவத்தளபதி இடி அமீன் போல தோற்றமளிப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியிருக்கின்றார். நேவி சம்பத்திற்கு உதவியதாகச் சொல்லப்படும் பாதுகாப்பு படையணிகளின் பிரதானி நீதிமன்ற ஆணையையும் மீறி மெக்சிக்கோவுக்கு பறந்துள்ளார். 

ஒரு வாகனத்தைக் கூட இலகுவில் நிறுத்த இடம் கிடைக்காத கொழும்பு பிரதான வீதியில் நடிகை ஓவியாவுக்காக செங்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளதுடன் அவரைக் காண பெரும் ரசிகர் கூட்டம் வந்திருக்கின்றது. இந்த சமயத்தில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது. 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்;சிகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் அல்லது அனுப்பப்பட்டுள்ளனர். சுப்ரமணிய சுவாமியின் அழைப்பை ஏற்று இந்தியா சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மோடியைச் சந்தித்து மந்திராலோசனை செய்திருக்கின்றார். நாட்டில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஆயுதம் இருப்பதாக கூறப்பட்ட கதைகள் நீண்டுகொண்டிருக்கின்றது. முஜிபுர் ரஹ்மான் எம்.பி. ஆர்ப்பாட்;டக்காரர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட பால் பக்கற்றுகள் வழங்கியதாக 'கரடிவிடுதல்' நடந்து கொண்டிருக்கின்றது. வடக்கி;ல் ஒரு பிரதேசத்தில் மாட்டிறைச்சிக் கடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், இப்படியான ஒரு பின்புலச் சூழலில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் முன்னகர்வுகள் எவ்விதம் அமையப் போகின்றன என்பதும், முஸ்லிம் அரசியலின் வருங்காலம் என்னவாக இருக்கும் என்பதும் துணுக்குற்று, மயிர்கூச்செறியச் செய்யும் கேள்விகளாக நம்முன்னே இருக்கின்றன. 

கேடுகெட்ட அரசியல்

முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும், அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவும், அபிவிருத்தியில் உரிய பங்கினைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையிருக்கின்றது. ஆனால் தேர்தல் காலத்தில் பெரும் செயல் வீரர்களைப் போல பீரங்கிப் பேச்சு பேசுகின்ற பெருமளவிலான அரசியல்வாதிகள் காரியம் முடிந்த பிறகு பெட்டிப்பாம்பாக ஆகிவிடுகின்றார்கள் என்பதே நமது பட்டறிவாகும். 

ஓரிரு அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் உரிமைக்காக அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டிருந்தாலும் 99 சதவீதமானோர் தமது தேவைகளுக்காக மட்டுமே வாயைத் திறக்கின்றனர். பாராளுமன்றத்தில் சாப்பிடுவதற்காக வாயைத் திறக்கின்றனர். அதற்கு வெளியே பெருநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக வாயைத் திறக்கின்றனர். 

பெருநாள் வந்து விட்டால் பத்திரிகைக்கு அறிக்கை கொடுப்பதில் காட்டுகின்ற முனைப்பை, முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கின்ற போது, ஆயுத விவகாரம், தீவிரவாத ஊடுருவல் விவகாரம், அபாயா, மாட்டிறைச்சி, ஹலால் விவகாரங்கள் மற்றும் முஸ்லிம் அரசியலை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களுக்கு எதிராக அறிக்கை விடுவதில் காணக்கிடைப்பதில்லை. அப்படியானவர்களையே முஸ்லிம் சமூகம் தலைவர்களாகவும் தளபதிகளாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவு செய்திருக்கின்றது. 

எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்கின்ற முஸ்லிம் சமூகம் நமக்கு அரசியலிலும் மார்க்கத்திலும் கூட நல்ல தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வேண்டும் என்பதில் அக்கறையற்றதாக இருப்பதால்... நமது அரசியல் தலையெழுத்தை மாற்ற முடியாதிருக்கின்றது. 

வீதிகளுக்கு தெரு விளக்குப் போடுவதும், செப்பனிடுவதும், தமது அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தின் கிளையை திறப்பதும், பணம் பெற்றுக் கொண்டு தொழில்வழங்குவதும், ரயில் பாதை அமைக்கப் போவதாக கதைவிடுவதும், துபாய், கட்டார் போல அபிவிருத்தி செய்வோம் என கற்பனைக் கதை பேசுவதும், வெறுமனே வாழ்வாதாரம் வழங்குவதும் மாத்திரம் முஸ்லிம் அரசியலின் நோக்காக இருக்க முடியாது என்பதை மக்களும் அரசியல்வாதிகளும் தெளிவாக உணர வேண்டிய காலமிது. 

இன்றைய முஸ்லிம் அரசியலில் தனித்துவ அடையாள அரசியலின் இலட்சணங்களை இழந்தும், இணக்க அரசியலின் அனுகூலங்களையும் பயன்படுத்தாமலும் முஸ்லிம் கட்சிகள் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பெரும்பான்மைக் கட்சிகளின் அரசியல்வாதிகள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சுருங்கக் கூறின், பெருந்தேசியக் கட்சிகளுக்கு கிளை நிறுவனங்கள் போல பெரும்பாலான முஸ்லிம் கட்சிகளும், முகவர்கள் போல கணிசமான முஸ்லிம் அரசியல்வாதிகளும் மாறியிருக்கி;ன்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. 

நிலையான இலக்கு

நமது அனுபவங்களின் படி இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இலக்கு என்பது மிகவும் தூரநோக்குடையதும் பரந்துபட்டதும் ஆகும். அதாவது முஸ்லிம் தேசியத்தை நிறுவி முஸ்லிம்கள் ஒரு தனித்துவ இனம் என்பதை இன்னும் உரக்கச் சொல்ல வேண்டும். இனப் பிரச்சினைத் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கை உறுதிப்படுத்த வேண்டும். யுத்தகாலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றிய முஸ்லிம்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். 

வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள முஸ்லிம்களின் காவுகொள்ளப்பட்ட காணிகளை மீளப் பெறப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக முஸ்லிம்களுக்கும் காணிப் பங்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி, நிர்வாகம், தொழில்வாய்ப்பு உள்ளடங்கலாக அனைத்து விடயங்களிலும் முஸ்லிம்களுக்குரித்தான வீதாசார இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். வடமாகாண முஸ்லிம்கள் முழுமையாக மீள் குடியேற்றப்பட வேண்டும். எந்தத் தேர்தல் முறை வந்தாலும் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். 

முஸ்லிம்கள் எந்த மொழியைப் பேசினாலும் அவர்கள் இஸ்லாம் என்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் என்ற அடிப்படையில், அவர்களுடைய மத தனித்துவம், பள்ளிவாசல், இன மற்றும் மத அடையாளங்கள், அபாயா போன்ற நம்பிக்கைகள், இறைச்சி உண்ணல், ஹலால் உணவுகள் உள்ளிட்;ட அவர்களது உரிமைகளை யாரும் சவாலுக்குட்படுத்தாத நிலை உருவாக்கப்பட வேண்டும். 

இஸ்லாத்தைப் பின்பற்றினாலும் முஸ்லிம்கள் 'இலங்கையர்' என்ற பொதுமைப்படு;த்தலின் அடிப்படையில் அவர்கள் ஏனைய இனங்களைப் போல நோக்கப்படுவதுடன், அரசியல் உரிமை உள்ளடங்கலாக அனைத்து விதமான உரிமைகளும் அரச பொறிமுறையின் ஊடாகவே வழங்கப்படுவது அவசியமாகும். இதனையெல்லாம் செய்துமுடிக்கும் திராணியுடன் முஸ்லிம்களின் அரசியல் ஆளுமையுள்ளதாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கான அரசியலாக அல்லாமல் மக்களுக்கான அரசியலாக அது மறுபிறவி எடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. 

கட்சி என்ற மாயை

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தலைமைத்துவ மாயைக்குள் இருந்து வெளியில் வர வேண்டும். தலைவர் எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும் மக்கள் நினைக்கின்ற போக்கும், மோசமான பேர்வழி ஒருவர் அரசியல்வாதி ஆனதால் மாத்திரம் அறிவாளியாக, சமூக சிந்தனையாளராக மாறிவிடுவார் என்று குருட்டுத்தனமாக முஸ்லிம்கள் நம்பும் நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். எந்தப் பெரிய கொம்பன் என்றாலும், தவறு செய்கின்ற போது மக்கள் மன்றத்தில் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் உருவாகினால் மாத்திரமே முஸ்லிம் மக்கள், அரசியலின் ஊடாக அடைய நினைக்கும் அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடியதாக இருக்கும். இந்தக் கருத்து நிலையில் நின்று முஸ்லிம் கட்சிகளின் அசைவியக்கத்தை நோக்கினால், நமது அரசியல் எந்த இடத்தில் நிற்கின்றது என்பதும், இலக்கை அடைய இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதும் புலனாகும். 

மு.கா.வின் நிலை

அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸின் மக்களரசியல் என்பது இறங்கு முகமாகவே இருந்தது. 25 பேராக இருந்த கட்சியின் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 90ஆக அதிகரிக்கப்பட்டாலும் அஷ்ரப் மரணிக்கும் போது மு.கா.வுக்கு இருந்த 12 எம்.பி.க்கள் என்ற எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளக்கூட முடியாதவாறு, அது 6 எம்.பி.க்களாக குறைவடைந்திருக்கின்றது. தலைவர் றவூப் ஹக்கீமின் போக்குகளும் உட்கட்சி பிளவுகளும் இதற்கு முக்கிய காரணமாகும். 

அஷ்ரபின் இடத்தை ஹக்கீமால் மட்டுமல்ல இன்றிருக்கின்ற எல்லா முஸ்லிம் தலைவர்களால் ஒன்றாகச் சேர்ந்து கூட நிரப்ப முடியவில்லை. அந்த வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கட்சியின் தாயகமான கிழக்கு மக்களின் வாக்குகளில் கவனம் செலுத்திய அளவுக்கு, அவர்களது அபிலாஷைகளை பெரிதாக கணக்கிலெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. 

கண்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனத்தை பெரிதும் நம்பியிருக்கின்ற மு.கா. தலைவர் அநேக சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவராக அல்லாமல் பெரும்பான்மைக் கட்சிகளின் குறிப்பாக ஐ.தே.க.வுக்கு நல்லபிள்ளையாக இருப்பதற்கே முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றார் என்று கூறப்படுவதுண்டு. ஐ.தே.க.வுக்குள் நடந்திருப்பதைப் போலவே, தனது கட்சிக்குள்ளும் அதிகாரத்தையும் பதவியையும் நிலையாக வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை சாணக்கியமாக ஹக்கீம் செய்திருக்கின்றார். 

மு.கா. என்ற கட்சியை மக்கள் இன்னும் அஷ்ரப் விட்டுச் சென்ற சொத்தாகவே மக்கள் மதிக்கின்ற போதிலும், முஸ்லிம்கள் விடயத்தில் ஹக்கீம் தலைமையிலான  மு.கா.வின் நடத்தையை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதே கடந்த இரண்டு மூன்று வருடங்களில் எதிர்கொண்ட பின்னடைவுக்கு காரணம் எனலாம். இதே நிலைமை தொடர்ந்தால், கட்சியின் வீழ்ச்சியை இதைவிடப் பலமாக அடுத்த தேர்தலில் மு.கா. தலைவரும் தளபதிகளும் உணர்ந்து கொள்வார்கள். 

எவ்வாறிருப்பினும் றவூப் ஹக்கீம், அண்மைக்காலமாக கட்சியினதும் தனதும் போக்குகள் பற்றிய மீள் வாசிப்பொன்றை நிகழ்த்திக் கொண்டிருப்பதாக நம்பமாக தெரிகின்றது. தன் மீதான குற்றச்சாட்டுக்கள், கட்சியில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக அவர் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டிருக்கின்றார். இதனடிப்படையில், மீள்வாசிப்பொன்றை நிகழ்த்தி மு.கா. தன் தவறுகளை திருத்திக் கொள்ளுமாக இருந்தால் பின்னடைவை சற்று சரிசெய்யக் கூடியதாக இருக்கும் என்றே அனுமானிக்க முடிகின்றது. 

ஆனால், இத்தனை வருடங்களாக மக்களது வாக்குகளைப் பெற்ற மு.கா., முஸ்லிம்களின் இலக்கு என்ற தலைப்பின் கீழ் மேலே பட்டியலிடப்பட்டுள்ள முஸ்லிம்களின் இன, மத உரிமைகள், காணி, மனித உரிமை மீறல், பிரதிநிதித்துவம், இனப் பிரச்சினை தீர்வில் உரிய பங்கு, அரசியலமைப்பு மறுசீரமைப்பில்; காப்பீடு, இனவாதத்தில் இருந்து பாதுகாப்பு, முஸ்லிம்களை தேசியமாக நிறுவுதல் உள்ளிட்;ட அபிலாஷைகள் மற்றும் நீண்டகால இலக்குகளை அடைவதில் ஒரு அடியைத் தானும் இன்னும் எடுத்து வைக்கவில்லை. 

மக்கள் காங்கிரஸ்

றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இப்போது சற்று ஏறுமுகமான பாதையில் இருப்பதாக பலரும் சொல்கின்றனர். ஆனால் மு.கா. போன்று அ.இ.ம.கா. கட்சி தன்னளவில் ஒரு பலமான அரசியல் இயக்கமாக இன்னும் முழுமையாக பரிணாமம் அடையவில்லை. உண்மையில் றிசாட் பதியுதீன் என்ற, அக்கட்சித் தலைவரின் சற்று விவேகமாக அரசியல் செயற்பாடுகளின் காரணமாகவே அந்தக் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது என்பதை சொல்லியாக வேண்டும். கட்சியை வளர்ப்பதில் ஓரிருவரை தவிர்த்துப் பார்த்தால் ஏனையோரின் பங்கு மிகக் குறைவாகும். 

கடந்த தேர்தலில் ஹசனலியின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புடன் சேர்ந்து மக்கள் காங்கிரஸ் உருவாக்கிய முஸ்லிம் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் கூட்டமைப்பு வெளியிட்ட மக்கள் நலன்சார்ந்த 12 பிரகடனங்களில் கூட்டமைப்பு என்ற அமைப்போ அல்லது அதில் அங்கம் வகிக்கும் இரு கட்சிகளுமோ கொள்கைப் பிடிப்புடன் இருந்து அதற்காக பாடுபடாமல் இருப்பதன் காரணமாக, 'கூட்டமைப்பு' என்ற கோட்பாடு இப்போது மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கத் தொடங்கியிருக்கின்றது என்பதும், மக்கள் காங்கிரஸின் மீதும் இதன் தாக்கம் இருக்கும் என்பதை சொல்லாமல் விட முடியாது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு கொண்டே, சமகாலத்தில் மக்களை நெருங்குவதற்காக கொஞ்சம் வித்தியாசமான அணுகுமுறையுடன் செயற்படுகின்றார் என்றே வைத்துக் கொண்டாலும், அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவி வழங்கும் அரசியலிலே அவரது கட்சி பிரதான கவனம் செலுத்துகின்றது. 

வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், காணிப் பிரச்சினை போன்ற ஓரிரு விடயங்களைத் தவிர்த்துப் பார்த்தால், மேலே பட்டியலிடப்பட்டுள்ள முஸ்லிம்களின் நீண்டகால நிலையான அபிலாஷைகளை அடைவதில் பாரிய காலடிகளை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னோக்கி எடுத்து வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. 

தேசிய காங்கிரஸ்

இதேவேளை, தேசிய காங்கிரஸ் கட்சி வேறுவிதமான ஒரு வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.இந்தக் கட்சியும், அபிவிருத்தி அரசியலில் ஜொலித்த ஏ.எல்.எம்.அதாவுல்லா என்ற தனியொரு அரசியல்வாதியில் தங்கியிருக்கின்ற கட்சி என்ற கருத முடிகின்றது. ஆயினும் அரசியல் அதிகாரங்கள் எதுவுமற்ற நிலையில் அக்கட்சிக்கு இவ்வளவு ஆதரவு கிடைப்பது பெரிய விடயமாகும். இந்தக் கட்சி வடக்கு,கிழக்கு  பிரிப்பு, இனப்பிரச்சினை தீர்வு போன்ற முக்கியத்துவமிக்க விடயங்களி;ல் மக்கள் சார்பு நிலைப்பாடொன்றை எடுத்தாலும் 2015ஆம் ஆண்டு தேர்தல்;களின் மக்களின் முடிவுகளுக்கு அந்நியப்பட்ட நிலைப்பாட்டை அதாவுல்லா எடுத்ததால் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிட்டது. 

இருப்பினும், அதாவுல்லாவின் தோல்வி அவரை நேரமெடுத்து மீள்பரிசீலனை செய்ய வழிவகுத்திருக்கின்றது. உள்ளுராட்சித் தேர்தலில் புதிய வியூகங்களை வகுத்து களத்தில் இறங்கி வேலை செய்து, கோட்டைகளை கைப்பற்றியிருக்கின்றார். அத்துடன் வடக்கு, கிழக்கில் தேசிய காங்கிரஸை விஸ்தரிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார். ஆனால் தேசிய அரசியல் போக்குக்கு அமைவாக தீர்மானங்களை எடுக்க முனைவதாலும் சிங்கள பெருந்தேசியத்தின் ஒரு தரப்பினரை பகைக்காமல் கருத்துக்களை முன்வைக்க பிரயத்தனப்படுவதாலும், விடுதலைப் புலிகளை எதிர்த்த அதே வேகத்தை இனவாதம்  போன்ற சில விவகாரங்களில் அவரிடம் காணக்கிடைக்கவில்லை.  

அதாவுல்லா கட்சிக்குள் கூட சொல்லாமல் காய்களை நகர்த்துபவர் என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் தேசிய காங்கிரஸ் கவனமாக இருக்குமென்று கருத இடமுண்டு என்றாலும், வட-கிழக்கு பிரிப்பு விடயத்தில் எடுத்ததைப் போன்று, முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையை தீர்த்தல், காணிப் பங்கீடு, அரசியலமைப்பு மறுசீரமைப்பு,  பௌத்த இனவாதம், இன மத உரிமைகள், தேசியம் நிறுவுதல் என நீண்டகாலத்தில் அடையப்பட வேண்டிய அபிலாஷைகள் விடயத்திலும் அக்கட்சி தெளிவான நிலைப்பாடுகளை எடுத்து, முன்செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.
அன்றாடங்காய்ச்சி அரசியலாக அல்லாமல், தூரநோக்கான வழியில் முஸ்லிம் அரசியல் செல்ல வேண்டியிருக்கி;ன்றது. ஆனால், முஸ்லிம்களுக்கான அரசியலின் இலக்கு மற்றும் நிலையான அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விட, போட்டிச் சந்தையில் கட்சி வளர்ப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. 

றவூப் ஹக்கீமுக்கு கட்சியை மீளத் தூக்கி நிறுத்த வேண்டும், றிசாட் பதியுதீனுக்கு கட்சி வளர்க்க வேண்டும், அதாவுல்லாவுக்கு கட்சியை விஸ்தரித்து வளர்க்க வேண்டும், ஹசனலிக்கும் பசீர் சேகுதாவூதிற்கும் தமது புதிய கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடுகளே முன்னுரிமைக்குரிய விடயங்களாக இருக்கின்றது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிலும் நிலைமை இதுதான்.  எனவேதான் முஸ்லிம்களின் அபிலாஷைகளை மூலையில் கிடக்கின்றன.
இந்த நிலைமை மாற்றப்படும் வரைக்கும் முஸ்லிம் அரசியலின் தலையெழுத்தும் முஸ்லிம்களின் தலையெழுத்தும் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கும்.
No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here