ஒரு விசுவாசியின் விசும்பல் : உதுமாலெப்பை தே.காவில் இருந்து ஏன் விலகினார்? - THE MURASU

Sep 23, 2018

ஒரு விசுவாசியின் விசும்பல் : உதுமாலெப்பை தே.காவில் இருந்து ஏன் விலகினார்?

Raazi Muhammad Jabir -
தே.காவின் ஆத்மார்த்த விசுவாசி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களை தே.கா இழந்துவிட்டது.சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நொண்டி நொம்பலாகிக் கொண்டிருந்து தேசிய காங்கிறசை சற்று நிமிர்த்திவிட்டவர் உதுமாலெப்பை அவர்கள்.அந்த விசுவாசியின் இழப்போடு தே.கா இனித் தேய்ந்து தூர்ந்து விடும்.
உதுமாலெப்பை மட்டும் அல்ல.அவரைத் தொடர்ந்து சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன்,இன்னும் பல ஊர்களில் இருக்கும் பல முக்கியஸ்தர்கள் பதவி விலகத் தீர்மானித்திருக்கிறார்கள்.
உதுமாலெப்பை அவர்களுக்கு என்ன நடந்தது?
ஒரு விசுவாசி ஏன் விரட்டியடிக்கப்பட்டார்?
மெதுமெதுவாக ஆரம்பித்த ஊடல்கள் கட்சியை விட்டுப் போகுமளவிற்கு பூதாகரமாக வெடித்துவிட்டது.
சென்ற உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர் அட்டாளச் சேனையில் முஸ்லிம் காங்கிறசினர் வீதி விளக்குகளை போட்டிருந்தனர்.’’பார்த்தீர்களா அதாவுல்லாஹ் செய்யாததை முஸ்லிம் காங்கிறஸ் செய்துவிட்டது’’ என்று காங்கிறசின் ஆதரவாளர்கள் அங்கலாய்த்த போது அதற்குப் பதிலடியாக ‘அட்டாளச்சேனையில் விளக்குகள் பொருத்தாததற்கு அதாவுல்லாஹ்வைக் குற்றம் சுமத்தாமல் மாகாண சபை அமைச்சராக இருக்கும் உதுமாலெப்பை அவர்களிடம் கேளுங்கள் என்று தேசிய காங்கிறசின் உத்தியோக பூர்வ ஊடகம் பதிலளித்திருந்தது. ஒரே கட்சில் இருக்கும் உதுமாலெப்பை அவர்களை அக்கட்சியின் உத்தியோக பூர்வ ஊடகமும் உயர் பீட உறுப்பினர்கள் சிலரும் சாடும் போது அது உதுமாலெப்பை அவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தியது.அதாவுல்லாஹ் அவர்கள் அதனை அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும்போது உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு ஒன்று உருவாகுவது சம்பந்தமான பேச்சுக்கள் எழுந்தன. கிழக்கில் முஸ்லீம் காங்கிறசைத் தோற்கடிப்பதென்றால் நாம் ஒரு கூட்டமைப்பாக இயங்கினால் இலகுவாக இருக்கும் என்ற கருத்தில் உதுமாலெப்பை அவர்களும் தே.காவின் உறுப்பினர்கள் பலரும் இருந்தனர்.ஆனால் முஸ்லிம் காங்கிறசில் சேர்ந்தாலும் கூட்டமைப்பில் சேரக்கூடாது என்ற கருத்தில் அதாவுல்லாஹ் விடாப்பிடியாக இருந்தார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அட்டாளைச் சேனை பிரதேச சபையில் தேர்தல் கேட்பது சம்பந்தமான பல கூட்டங்கள் கிழக்குவாசலில் நடைபெற்றிருந்தும் அதில் அட்டாளைச் சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பை அவர்கள் அழைக்கப்படவில்லை. தனது பிரதேசம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் கூட்டத்தில் கூட தான் அழைக்கப்படவில்லை என்பது உதுமாலெப்பை அவர்களுக்கு மன வேதனையை அளித்தது. உதுமாலெப்பையும் அழைக்கப்பட்டால் கூட்டமைப்புக்கு அவர் ஆதரவு கொடுத்துவிடுவார் என்று அதாவுல்லாஹ் நினைத்தனால்தான் அவர் அழைக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் அட்டாளைச் சேனை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பம் தேசிய காங்கிறசுக்கு கிடைத்தது. தேசிய காங்கிறசின் 6 உறுப்பினர்களும், மக்கள் காங்கிறசின் 3 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவின் ஒரு ஆசனமும் சேர்ந்திருந்தால் அட்டாளைச் சேனை பிரதேச சபையைக் கைப்பற்றி முஸ்லிம் காங்கிறசை எதிர்க்கட்சிக்குத் தள்ளியிருக்கலாம். தான் பொதுஜன பெரமுனவிடம் பேசுகிறேன் என்று உதுமாலெப்பை அதாவுல்லாஹ்விடம் பல தடவை கூறியும் அதாவுல்லாஹ் பொறுமையாக இருங்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று தட்டிக் கழித்துவிட்டு இறுதியாக பொதுஜன பெரமுண உறுப்பினரை முஸ்லிம் காங்கிறசுக்கு வாக்களிக்குமாறு கூறிவிட்டார் அதாவுல்லாஹ்.இந்த அறிவு கெட்டதனத்தால் ஆட்சி காங்கிறசின் பக்கம் சென்றுவிட்டது.
இதேவகையான சம்பவம் இறக்காமத்திலும் பொத்துவிலிலும் அரங்கேறியது.இறக்காமல் பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பொது ஜன பெரமுணவின் ஒரே ஒரு பெண் உறுப்பினரையும் மக்கள் காங்கிறசுக்கு ஆதரவளிக்காமல் முஸ்லிம் காங்கிறசுக்கு ஆதரவளிப்பதற்காக ஐம்பது லட்சம் வரை அதாவுல்லா பேரம் பேசியிருந்தார்.
பொத்துவில் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவிலும் கூட முஸ்லிம் காங்கிறசை வெற்றி பெற வைப்பதற்காக சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட தேசிய காங்கிறசின் ஒரே ஒரு உறுப்பினரையும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் ஆக்கிவிட்டார் அதாவுல்லாஹ்.
மக்களிடம் முஸ்லீம் காங்கிறசை எதிர்ப்பது என்ற ஒரு கொள்கையைச் சொல்லிவிட்டு உள்ளுக்குள் கூட்டமைப்பை இல்லாமல் செய்ய காங்கிறசை ஆதரிக்கும் அதாவுல்லாஹ்வின் இந்த கீழ்த்தரமான அரசியலை உதுலெப்பை அவர்கள் விரும்பவில்லை. கட்சியின் கொள்கையை தலைவர் அதாவுல்லாஹ்வே அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.
இவ்வாறான அதிருப்திகள் இருக்கும் போது தனது குடும்ப உறுப்பினர்களின் மரணம்,சுகயீனம் காரணமாக சில கட்சிக் கூட்டங்களுக்கு அவரால் சமூகமளிக்க முடியாமல் போனபோது உதுமாலெப்பை கட்சியை விட்டு விலகிவிட்டார் என்ற பிரச்சாரம் திட்டமிட்டு முடக்கப்பட்டது. இல்லை உதுமாலெப்பை கட்சியோடுதான் இருக்கிறார் என்று காட்டுவதற்காகத்தான் அக்கரைப்பற்றில் ஒரு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது.அப்பொதுக் கூட்டத்தில் பேசிய உதுமாலெப்பை அவர்கள் தனக்கு கட்சியோடு சில அதிருப்திகள் இருப்பதாக பகிரங்கமாகவே மேடையில் கூறியிருந்தார்.அது என்ன என்று கூட அதாவுல்லாஹ் கேட்கவுமில்லை.அதைப் பற்றி விசாரிக்கவுமில்லை.
அதைத் தொடர்ந்து பேராளர் மாநாடு நடந்த தினத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்சிப் பிரமுகர்களின் கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில் இப்போது இருக்கும் பதவிகள் எல்லாமே இருப்பது போல் இருக்கட்டும் ஒரு சில மாதங்கள் போனதன் பின்னர் ஒரு விஷேட கூட்டம் ஒன்றில் மாற்ற வேண்டியவைகளை மாற்றும்வோம் என்று கூறிவிட்டார் அதாவுல்லாஹ். முடிவுக்கு மாற்றமாக திடீரென பேராளர் மாநாடு நடைபெறும் தினத்தில் நடந்த உயர் பீடக் கூட்டத்தில் ஒரு பட்டியலோடு வந்து பதவிகள் மாற்றப்பட்டதை அறிவித்திருக்கிறார்.பதவிகள் அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவர் எவரோடும் கலந்துரையாடாமல் தனது சுயவிருப்பில் பதவிகளை மாற்றிக் கொண்டு வந்திருந்தமை பலரை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
அதைத் தொடர்ந்து சிரேஷ்ட பிரதித் தலைவராக டாக்டர் உதுமாலெப்பை அவர்களும் பிரதித்தலைவராக நியமிக்கப்பட்டார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களுக்கு தேசிய அமைப்பாளர் பதவி எடுக்கப்பட்டு எந்த உப்புச் சப்பும் இல்லாத பிரதித் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது மேலதிகமாக உப தலைவர்களாக இன்னும் 3 பேரும் நியமிக்கப்பட்டனர்.எந்த மாற்றமும் இல்லை என்று கூறிவிட்டு அதாவுல்லாஹ் தனது சுயவிருப்பின் பெயரில் அனைத்தையும் மாற்றிருந்தார்.
கட்சியின் தலைவரும் செயலாளரும் அதாவுல்லாஹ்வாக இருப்பதால் உதவிச் செயலாளர் நாயகம் என்ற பதவிக்கு அவருடைய செல்லக் குழந்தை அஹமட் ஸகியை நியமித்திருக்கிறார் .தனக்கு அடுத்ததாக கட்சி தனது மகனுக்குரியது என்பதை காட்டுவதே இது.செயலாளராக இருக்கும் அதாவுல்லாஹ் இல்லாமல் ஆகும் போது அந்தக் கட்சி உதவிச் செயலாளர் நாயகமாக இருக்கும் அவரின் மகனுக்குச் செல்லும்.
குடும்ப அரசியலை இன்னொரு படிக்கு கொண்டு போகும் முகமாக அவருடைய இளைய மகன் தில்ஷான் மற்றும் மருமகன் சாக்கீர் ஹுசைன் என்பரோடு அஸ்மி கபூரும் உயர் பீடத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.குடும்ப உறுப்பினர்கள் உயர்பீடத்தில் இருப்பதை உதுமாலெப்பை அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் கட்சியை அதள பாதாளத்திற்கு எடுத்துச் செல்பவர்களுக்கு இன்னுமின்னும் பதவிகள் கொடுக்கப்படுவது கட்சியின் பல முக்கியஸ்தர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
உதுமாலெப்பை கூட்டமைப்பை ஆதரிக்கிறார்.அவர் கூட்டமைப்புக்குச் சென்றுவிடுவார் என்று உதுமாலெப்பை பற்றி தொடர்ச்சியான பிழையான பிரச்சாரங்கள் கட்சிகுள் இருப்பவர்களாலேயே அரங்கேற்றப்பட்டது.அதனை அதாவுல்லாஹ் நம்பும் அளவிற்கு நடாத்தப்பட்டது.
இவ்வாறு தொடர்ச்சியான ஓரங்கட்டுதலும்,கீழ் மட்ட உறுப்பினர்களால் அவமானப்படுத்துதல் நடந்தும் அதனை வெளிப்படையாக பகிரங்க மேடையில் கூறிய பின்னரும் அதனை என்ன என்று விசாரித்து சுமுகமாக தீர்த்துவிடுவதற்கு அதாவுல்லாஹ் முயற்சிக்கவில்லை. கட்சியின் மிக மூத்த உறுப்பினர் ஒருவருக்கு இழைக்கப்படும் அநீதிகளை விசாரிக்காமல் அதை இழைப்பவர்களுக்கு உயர்பீடத்திலும் இடம் கொடுத்திருக்கிறார் அதாவுல்லாஹ். இத்தனை அவமதிப்பிற்கு பின்னர் இறுதியாக தேசிய காங்கிறசின் ஒரு ஆத்மார்த்தமான விசுவாசி தனது பதவியை ராஜநாமாச் செய்துவிட்டார்.அவரைத் தொடர்ந்து இன்னும் பலர் ராஜநாமாச் செய்ய இருக்கிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன?இவை தற்செயலாக நடக்கிறதா?அல்லது யாராவது திட்டம் தீட்டி இவை அரங்கேற்றப்படுகிறதா?தேசிய காங்கிறசின் மூத்த உறுப்பினர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகின்றனரா?இதில் அதாவுல்லாஹ் பராமுகமாக இருக்கிறாரா?இருக்கவைக்கப்படுகிறாரா? தேசிய காங்கிறஸ் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா?என்றொரு கேள்வி எழுகிறது.
இவை அனைத்தையும் இயக்கிக்கொண்டு, அதாவுல்லாஹ்வின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு, திட்டமிட்டு தே,காவின் மூத்த உறுப்பினர்களை கட்சியை விட்டு விரட்டிவிட்டு தனது அரசியல் எதிர்காலத்திற்கு அத்திவாரம் இட்டுக் கொண்டிருக்கும் ஒரு கறுப்பு ஆடு அதாவுல்லாஹின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கறுப்பாடுதான் இப்போது தேகாவை அழித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அது ஆடு அல்ல.தே.காவை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கும் கறுத்த டைனோசர்..
யார் அந்தக் கறுப்பாடு??
-தொடரும்-

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here