யாழ். மாவட்டத்தை ஆக்கிரமித்து உள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரி கட்டளை இடாதது ஏன்? - திட்டமிட்ட செயலா என்று அருணோதய மக்கள் முன்னணி சந்தேகம் - THE MURASU

Jul 3, 2018

யாழ். மாவட்டத்தை ஆக்கிரமித்து உள்ள குற்ற செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரி கட்டளை இடாதது ஏன்? - திட்டமிட்ட செயலா என்று அருணோதய மக்கள் முன்னணி சந்தேகம்

வடக்கில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் அண்மைய வாரங்களில் கட்டுக்கு அடங்காத வகையில் அதிகரித்து கொண்டு செல்கின்ற குற்ற செயல்களை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நல்லாட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை இனி மேலாவது எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் இணை தலைவரும், அருணோதய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான விசேட வைத்திய நிபுணர்  தேசமான்ய டாக்டர் கே. ஆர். ஹிர்சாந் கோரி உள்ளார்.

    இவர் இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் யாழ். மாவட்டத்தில் குற்ற செயல்களை உடனடியாக கட்டுப்படுத்தி இங்கு வாழ்கின்ற மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வர பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்காது இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டி உள்ளதுடன் யாழ். மாவட்டத்தில் நிலை கொண்டு உள்ள இராணுவத்தினர் இக்குற்ற செயல்களை கண்டும் காணாதவர்களாக முகாம்களுக்குள் முடங்கி கிடப்பது ஏன்? என்று கேள்வியும் எழுப்பி உள்ளார்.

    இவரின் அறிக்கை வருமாறு:-

    வடக்கில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் படுகொலைகள், கற்பழிப்புகள், துணிகர கொள்ளைகள், வாள்வெட்டுகள் என்று பாரிய உச்ச பட்ச வன்செயல்கள் அண்மைய நாட்களில் கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து கொண்டு செல்கின்றன. இதனால் இம்மாவட்டத்தை அச்ச பீதி ஆட்கொண்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பி போய் விட்டது.

    போருக்கு பின்னரான யாழ். மாவட்டத்தில் இவ்விதம் என்றும் இல்லாதவாறு வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளபோதிலும் இவற்றை கட்டுப்படுத்த பொலிஸ் தரப்பு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது. ஏனென்றால் குற்ற செயல்களின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவில்லை. இதனால் யாழ். மாவட்ட மக்கள் பொலிஸ் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர் என்பதும் வெளிப்படையான உண்மையே ஆகும்.

    இதே நேரம் இம்மாவட்டத்தில் நிலை கொண்டு உள்ள இராணுவத்தினர் குற்ற செயல்களை கண்டும் காணாதவர்களாக முகாம்களுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இவ்வாறான அசாதாரண சந்தர்ப்பங்களில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கவும் இராணுவத்துக்கு விசேட அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இவர்கள் குறைந்த பட்சம் ரோந்து நடவடிக்கைகளில்கூட ஈடுபடாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதையும் மக்கள் வேறு விதமாகவே எடுத்து கொள்ள நேர்கின்றது.

    மிக நீண்ட 30 வருட கால யுத்தத்துக்கு பின்னர் கிடைக்க பெற்ற சமாதானம், அமைதி, சந்தோசம், நிம்மதி ஆகியவற்றை யாழ். மாவட்ட மக்கள் ஒரேயடியாக தொலைத்து வருகின்ற நிலையில் நல்லாட்சி அரசாங்கம் இன்னமும் இவ்விடயத்தில் உருப்படியாக எதுவும் செய்யாமல் இருப்பது கவலை தருவதுட்ன் ஐயுறவுகளையும் ஏற்படுத்துகின்றது. சட்டம் , ஒழுங்கு ஆகியவற்றை பேணி குற்ற செயல்களை கட்டுப்படுத்த அக்கறை அற்றவர்களாக பொலிஸாரும், அதிகாரம் அற்றவர்களாக இராணுவத்தினரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட வகையில் அரசாங்கத்தால் வைக்கப்பட்டு உள்ளனரா? என்று நான் வினவுகின்றேன்.

    இந்நிலைமை தொடருமானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன மீதான குறைந்த பட்ச நம்பிக்கையைகூட நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இழந்து வ்டுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. ஏனென்றால் கட்டுக்கு அடங்காத வகையில் குற்ற செயல்கள் யாழ். மாவட்டத்தில் கட்டறுத்து கொண்டே செல்கின்றபோதிலும் நல்லாட்சியின் நாயகர் உரிய கட்டளைகளை பிறப்பிக்காமல் இருப்பது இக்கட்டுக்குள் தமிழ் மக்களை தள்ளி வைத்திருக்கின்ற செயலாகவே உள்ளது.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here