இரண்டில் ஒன்று வேண்டும். - THE MURASU

Jun 9, 2018

இரண்டில் ஒன்று வேண்டும்.

எஸ்.றிபான் -
இலங்கையில் முஸ்லிம்கள் செறிவாகவும், அதிகமாகவும் வாழ்கின்றதொரு மாவட்டமாக அம்பாரை திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆயினும், இம்மாவட்டம் உருவாக்கப்பட்ட காலம் முதல் மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவில்லை. இந்தப் புறக்கணிப்பு இம்மாவட்ட முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல இலங்கையில் வாழ்கின்ற எல்லா முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்தினால் செய்யப்பட்டு வருகின்ற மிகப் பெரிய அநீயாயமாகும். இதனையிட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கவனம் செலுத்துவதில்லை.

அம்பாரை மாவட்டம்
1955ஆம் ஆண்டு இலங்கையில் 20 நிர்வாக மாவட்டங்கள் காணப்பட்டன. இன்றுள்ள அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் 1961ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழ்தான் இருந்தன. இம்மாவட்டத்திற்குரிய கச்சேரி மட்டக்களப்பில் இயங்கியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பரப்பளவு, சனத்தொகை, அம்பாரை போன்ற தூர இடங்களிலிருந்து கச்சேரிக்கு அலுவல்களுக்கு வருகின்ற பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் போன்றவற்றை காரணம் காட்டி 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் போது அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையினராக இருந்தார்கள். 1963ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 43.11 வீதமாகவும், சிங்களவர்கள் 29.28 வீதமாகவும், தமிழர்கள் 23.23 வீதமாகவும் இருந்துள்ளார்கள்.

இவ்வாறு முஸ்லிம்கள் இருந்திட்ட போதிலும் அம்பாரை மாவட்டத்தின் கச்சேரி அம்பாரை நகரில் நிறுவப்பட்டது. ஆனால், உண்மையில் அம்பாரை மாவட்டத்தின் கச்சேரி முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற கரையோர பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக கல்முனையில் அமைந்திருக்க வேண்டும். ஏனெனில், 1961ஆம் ஆண்டிற்கு முன்னர் அதாவது அம்பாரை மாவட்டம் அமைவதற்கு முன்னர் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாரை, உகன போன்ற பிரதேசங்கள் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ்தான் இருந்துள்ளது.

ஆனால், அன்றைய அரசாங்கம் திட்டமிட்ட வகையில் அம்பாரை மாவட்டத்தின் கச்சேரியை அம்பாரையில் நிறுவியதுடன், திட்டமிட்ட வகையில் சிங்களவர்களை குடியேற்றம் செய்தும் வந்தன. காலத்திற்கு காலம் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் அம்பாரை மாவட்டத்தினை சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதொரு மாவட்டமாக மாற்ற வேண்டுமென்ற திட்டத்தினை எல்லா அரசாங்கங்களும் நடைமுறைப்படுத்திக் கொண்டே வந்துள்ளன.

காணி அபகரிப்பு
அம்பாரை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்டவர்கள் முஸ்லிம்களின் காணிகளை பல பெயர்களில் பெரும்பான்மையினர் அபகரித்துக் கொள்வதற்கு சாதகமாகவே செயற்பட்டுள்ளார்கள். இதற்காக நாட்டின் சட்டம், நீதி, மனட்சாட்சி ஆகியவற்றினைக் கூட கவனத்திற் கொள்ளாது செயற்பட்டார்கள். முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் இறக்காமம், பொத்துவில், ஒலுவில் ஆலிம் சேனை, பள்ளக்காடு, சம்மாந்துறை எனப் பல பிரதேசங்களிலும் அரசாங்கத்தினால் வனவளக் காணி என்றும், புனித பூமி என்றும், காட்டு யானைகளுக்கு வேலி அமைத்தல் என்றும் பறிக்கப்பட்டன. ஒரு சில காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்ட போதிலும் மாற்றுக் காணிகள் வழங்கப்படவில்லை.

முஸ்லிம்களிடமிருந்து அரசாங்கத்தினால் காணிகள் பறிக்கப்பட்ட அதே வேளை, ஒரு சில பெரும்பான்மையினர் பெரும்பான்மை அரசியல்வாதிகளின் உதவியோடும், பௌத்த கடும்போக்கு பிக்குகளின் உதவியோடும் முஸ்லிம்களின் காணிகளை பலாத்காரமாக பறித்துக் கொண்டார்கள். தமது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கு காணிச் சொந்தக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தோல்விலேயே முடிவடைந்தன.

இவ்வாறு முஸ்லிம்களிடமிருந்து அரசாங்கத்தினால் பறிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலும் சிங்களவர்கள் புதிதாக குடியேற்றப்பட்டுள்ளார்கள். தென்பகுதியிலுள்ள சிங்களவர்களுக்கே காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், அவர்களை நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாற்றுவதற்கு நிரந்தர வீடுகளும் அரசாங்கத்தின் நிதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து முஸ்லிம்களை ஒரு குறுகிய நிலப்பரப்பில் வாழ வைப்பதும், சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதொரு மாவட்டமாக அம்பாரையை மாற்றுவதும்தான் பேரினவாதிகளினதும், ஆட்சியாளர்களினதும் நோக்கமாக இருந்து கொண்டிருக்கின்றது.

சனத்தொகை
அம்பாரை மாவட்டத்தினை சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதொரு மாவட்டமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதென்பதற்கு சனத் தொகையின் பெருக்கம் தெளிவாகக் காட்டுகின்றது. அதாவது சிங்களவர்களின் சனத் தொகை பிறப்பு வீதத்தினை விடவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு புதிய குடியேற்றங்கள், ஏனைய மாவட்டங்களின் கீழ் இருந்த பிரதேசங்களை அம்பாரை மாவட்டத்துடன் இணைத்துக் கொண்டமை ஆகியன சிங்களவர்களின் பிறப்பு வீதத்தினை விடவும் சனத்தொகை அதிகரித்துக் காணப்படுவதற்கு காரணங்களாக இருக்கின்றன.

சனத் தொகை கணிப்பீடுகளின் அடிப்படையில் 1963ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 46.11 வீதமாகவும், சிங்கவர்கள் 29.28 வீதமாகவும், தமிழர்கள் 23.23 வீதமாகவும், 1971ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 46.35 வீதமாகவும், சிங்களவர்கள் 30.18 வீதமாகவும், தமிழர்கள் 22.20 வீதமாகவும், 1981ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 41.54 வீதமாகவும், சிங்களவர்கள் 37.78 வீதமாகவும், தமிழர்கள் 20.01 வீதமாகவும், 2001ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 41.25 வீதமாகவும், சிங்களவர்கள் 39.90 வீதமாகவும், தமிழர்கள் 18.41 வீதமாகவும், 2007ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 43.99 வீதமாகவும், சிங்களவர்கள் 37.49 வீதமாகவும், தமிழர்கள், 18.33 வீதமாகவும், 2012ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 43.59 வீதமாகவும், சிங்களவர்கள் 38.73 வீதமாகவும், தமிழர்கள் 17.40 வீதமாகவும் காணப்பட்டுள்ளனர்.  இந்த சனத்தொகை அதிகரிப்பு வீதத்தினை பார்த்தால் சிங்களவர்களின் சனத்தொகை அதிகரிப்பு சுமார் 10 வீதத்தினால் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அரசாங்க அதிபர்
இலங்கை முஸ்லிம்களிடையே இலங்கை நிர்வாக சேவையில் சிரேஸ்டத்துவம் வாய்ந்தவர்கள் உள்ள போதிலும் முஸ்லம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாரை மாவட்டத்திற்கு ஒரு முஸ்லிமை அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு அரசாங்கம் முன் வரவில்லை. இம்மாவட்டத்தில் சிங்களவர்களை தென்பகுதியிலிருந்து குடியேற்றியும், பிற மாவட்டங்களுடன் இருந்த பிரதேசங்களை அம்பாரையுடன் இணைத்துக் கொண்ட போதிலும் இன்று வரைக்கும் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக உள்ளார்கள். ஆனால், முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு அரசாங்கம் மறுத்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டுமென்பது முஸ்லிம்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும்.

முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபரை நியமிப்பதற்கு மறுதலித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் மேலதிக அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை நியமிக்கவும் மறுதலித்துக் கொண்டிருக்கின்றது. 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேலதிக அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார்கள். இவர் ஒரு சில காலம் செயற்பட்டார். இதன் பின்னர் தமிழர் ஒருவரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற நிலையில் அரசாங்க அதிபர் நியமனம் முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதுடன், மேலதிக அரசாங்க அதிபர் நியமனமும் மறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதனையிட்டு முஸ்லிம் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் தமது கவனத்தைச் செலுத்துவதில்லை. அமைச்சர் பதவிகளையும், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காகவும் இரவு பகல் பாராது ஓடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறிப்பாக அம்பாரை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூகத்திற்கு தேவையான அரசாங்க அதிபர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை எடுப்பதில்லை. ஆனால், தேர்தல் காலங்களில் மாத்திரம் முஸ்லிம் அரசாங்க அதிபர், கரையோர மாவட்டம் போன்றவற்றைப் பேசிக் கொள்வார்கள்.

இன்றைய அரசாங்கம் முஸ்லிம்களின் அதிகபட்ச வாக்குகளின் மூலமாக வெற்றி கொண்ட போதிலும் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. யுத்த காலத்தில் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை இன்னமும் மீளவும் ஒப்படைக்காதுள்ளது. கடந்த காலங்களில் மாகாண சபை ஆளுநர்களில் ஒருவராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இன்றைய அரசாங்கம் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்கு முன் வரவில்லை. முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமியுங்கள் என்று முஸ்லிம் அமைப்புக்கள் பலவும் கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் ஜனாதிபதியோ, பிரதம மந்திரியோ அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. முஸ்லிம் கட்சிகளோ அதற்கு வலுச் சேர்க்கவில்லை.

கரையோர மாவட்டம்
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாரை மாவட்டம் 1775 சதூர மைல் பரப்பைக் கொண்டது. இவற்றில் 1340 சதூர மைல் பரப்பளவு சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலகங்களின் அதிகாரத்தில் உள்ளன. முஸ்லிம்களின் வசம் 260 சதூர மைல் பரப்பளவே உள்ளன.

முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் பறிக்கப்பட்டும், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களில் உள்ள அரச காணிகளை சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலகங்களின் கீழ் இணைத்துக் கொண்டும் முஸ்லிம் பிரதேச பிரதேச செயலகங்களின் எல்லைகள் குறுகிக் கொண்டிருக்கின்றன. மேலும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலமாக அம்பாரை மாவட்டம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இன்னும் சில வருடங்களில் அம்பாரை மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக வாழப் போகின்றார்கள். இந்நிலை ஏற்பட்டால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டம் என்ற கோசமும் இல்லாது போய்விடும். அத்தோடு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அதனால், முஸ்லிம் ஒருவரை அரசாங்க அதிபராக நியமியுங்கள் என்ற கோரிக்கையையும் முன் வைக்க முடியாது போய் விடும்.

இந்த ஆபத்திலிருந்து அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் காணிகளையும், முஸ்லிம்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே கரையோர மாவட்டக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கோரிக்கையை பலரும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இக்கோரிக்கையை தேர்தல் காலங்களில் தூக்கிப் பிடித்துக் கொண்டு வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டமை உண்மையாகும். முஸ்லிம்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ள கரையோர மாவட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுத் தருமென்று அக்கட்சியின் தலைவர் முதல் பிரதேச சபை உறுப்பினர் வரை வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் புதிய அரசியல் யாப்பு வரைபுக்கான முன் மொழிவுகளில் கரையோர மாவட்டத்தினை முன் வைக்கவில்லை. இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது முன் திட்ட அறிக்கையில் கரையோர மாவட்டக் கோரிக்கையை முன் வைத்தது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரையோர மாவட்டக் கோரிக்கையை ஒலுவில் கரையோர மாவட்டம் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதனை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முழக்கம் மஜீட் பெயரில் குற்றம் கண்டார். அவர் கல்முனை கரையோர மாவட்;டம் என்று அமைய வேண்டுமென்று தெரிவித்தார். ஆனால், அவர் புதிய அரசியல் யாப்புக்குரிய முன் மொழிவுகளில் தமது கட்சியாகிய முஸ்லிம் காங்கிரஸ் கரையோர மாவட்டத்தை கோரவில்லை என்பதற்கு வெட்கப்படவில்லை.
முஸ்லிம் காங்கிரஸை கண்டிப்பதற்கு பதிலாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீனை கண்டித்தார். கரையோர மாவட்டம்தான் முஸ்லிம்களின் கோரிக்கையாகும். அது எந்தப் பெயரில் அமைந்தாலும், எந்தப் பிரதேசத்தில் அமைந்தாலும் அது பிரச்சினையில்லை. ஆனால், கரையோர மாவட்டத்தை அடைந்து கொள்வதற்கு முயற்சிகளை எடுக்காது குடுமிச் சண்டையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

1978ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன நியமித்த மொரகொட எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் முன் சாட்சியமளித்த முஸ்லிம்கள் தங்களுக்கு கரையோர மாவட்டம் தரப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். முஸ்லிம்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஆராய்ந்த ஆணைக் குழு முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டம் அமைய வேண்டுமென்று பரிந்துரை செய்தது. ஆணைக் குழுவின் இந்த சிபார்சினை அன்றைய அமைச்சர் பீ.தயாரத்ன எதிர்த்து அதனை நடைமுறைப்படுத்தாது தடுத்தார்.

ஆயினும், 1978ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டமும், 1982ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டமும், 1985ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டமும் உருவாக்கப்பட்டது. இதன் போது கூட கரையோர மாவட்டக் கோரிக்கையை முஸ்லிம்கள் முன் வைத்தார்கள்.
1985ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தை அரசாங்கம் உருவாக்கிய போது கரையோர மாவட்டத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் முன் வந்தது. ஆனால், இதன் போது அமைச்சர் கே.டபிள்யூ.தேவநாயகம், அமைச்சர் பீ.தயாரத்ன ஆகியோர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதனால் அன்றும் கரையோர மாவட்டம் உருவாகவில்லை. ஆயினும், முஸ்லிம்கள் தொடர்ந்தும் கரையோர மாவட்டக் கோரிக்கையை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இரண்டில் ஒன்று
முஸ்லிம்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கின்ற கரையோர மாவட்டத்தை அரசாங்கம் தர வேண்டும். ஆயினும், ஆட்சி மாறினாலும் கரையோர மாவட்டத்தை தருவதற்குரிய விருப்பம் அரசாங்கத்திடம் காண முடியாதுள்ளது. காலத்திற்கு காலம் முன் வைக்கப்படும் எதிர்ப்புக்களை காரணம் காட்டி கரையோர மாவட்டத்தை அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது. இன்று கூட கரையோர மாவட்டக் கோரிக்கைக்கு அமைச்சர் தயாகமகே, பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் ஆகியோர்கள் எதிர்ப்புக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு காலத்திற்கு காலம் எழும் எதிர்ப்புக்களை சாட்டாகக் கொண்டு அரசாங்கம் கரையோர மாவட்டக் கோரிக்கை நிராகரித்துக் கொண்டிருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டத்தினை காலதாமதமின்றி வழங்க வேண்டும். இல்லையாயின் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும். அரசாங்கம் இந்த இரண்டில் ஒன்றையாவது உடனடியாக முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகளை முன் கட்சிகளும், அமைச்சர்களும் எடுக்க வேண்டும்.
VIDIVELLI - 08.06.2018

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here