மாட்டிறைச்சிக்கான போராட்டம்! வடக்கிலும் விஸ்தரிப்பு - THE MURASU

Jun 1, 2018

மாட்டிறைச்சிக்கான போராட்டம்! வடக்கிலும் விஸ்தரிப்பு

எஸ்.றிபான் -
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளில் பௌத்த இனவாதமும், இந்து இனவாதமும் ஒரு கோட்டில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு அதிகாரம் வேண்டும். தமிழ் மொழிக்கு அரச அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆயுதக் குழுக்களும் போராட்டங்களை நடத்திய போது பௌத்த இனவாதிகளும், பெரும் பேரினவாதிகளும் தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தனர். இது பௌத்த நாடு. தமிழர்களும், முஸ்லிம்களும் பௌத்த பாரம்பரியங்களை மதித்து நடக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். தமிழர்கள் இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் சவுதிக்கும் செல்ல வேண்டுமென்று பௌத்த இனவாதிகள் தெரிவித்தார்கள்.

மேலும், மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது  பொதுபல சேன, ராவண போன்ற பௌத்த இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களின் மார்க்க விழுமியங்கள் எதிர்த்தார்கள், ஹலால் உணவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார்கள். பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களின் மீதும், குடியிருப்புக்களின் மீதும் பேருவளை, தர்கா நகர், ஜிந்தோட்டை, அம்பாரை, திகன, கண்டி ஆகிய இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான இந்நடவடிக்கைகளின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்து இனவாதிகள் யாரும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

ஆனால், திடீரென்று இலங்கை பௌத்த - இந்துக்களின் நாடு. இது வேறு சமூகத்திற்குரிய நாடல்ல. இங்குள்ள பராம்பரியத்தை ஏற்று நடக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று இலங்கை சிவசேன அமைப்பின் தலைவர் மறவன்புல க.சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கள் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பௌத்த இனவாதத்திற்கு பெரும் தேசியக் கட்சிகள் மௌனமாக இருந்ததனைப் போன்றே வடக்கு, கிழக்கில் ஆதிக்கம் பெற்றுள்ள பேரினவாதக் கட்சிகளும் மௌனமாக இருந்து கொண்டிருக்கின்றன. பௌத்தர்களும், இந்துக்களும் வாழும் நாட்டில் மாடு அறுக்கும் கடைகள் எதற்கு என்று சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இதன் மூலம் பௌத்த இனவாதமும், இந்து இனவாதமும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு கோட்டில் செல்லுவதற்கு தயாராகியுள்ளமை தெரிகின்றது. இது வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன ஐக்கியத்தை மீண்டும் 1990ஆம் ஆண்டுகளின் காலத்திற்கு இழுத்துக் கொண்டு சென்று விடுமோ என்று தமிழ், முஸ்லிம் உறவுகளில் அக்கறையுள்ளவர்கள் கவலை கொண்டுள்ளார்கள். இதற்கு எதிராக தமது கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
கடந்த 26ஆம் திகதி சாவகச்சேரி பஸ் நிலையத்தின் முன்பாக இலங்கை சிவசேன அமைப்பின் தலைவர் மறவன்புல சச்சிதானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சாவகச்சேரியில் இறைச்சிக்காக மாடு அறுப்பதனை நிறுத்த வேண்டும். அங்குள்ள மாறு அறுக்கும் கூடத்தினை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கைகளை முன் வைத்து நடத்தப்பட்ட இவ்வார்ப்பட்டத்தில் காவியுடை தரித்த சில மதத் தலைவர்களும் பங்கு கொண்டார்கள்.

சாவகச்சேரியில் இறைச்சிக்காக மாடு அறுப்பதுடன் இவர்களின் ஆர்ப்பாட்டம் சம்பந்தப்பட்டிருந்தாலும் மறவன்புல சச்சிதானந்தத்தின் கருத்துக்கள் முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தினை தூண்டுவதாகவே அமைந்துள்ளன. அதாவது, பௌத்தர்களும், இந்துக்களும் வாழும் புனித நாட்டில் மாடு அறுக்கும் கடைகள் எதற்கு. இங்குள்ள பாரம்பரியத்தை மதித்து நடக்க முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இதனைச் சொல்லுவது எங்களது கடமை. இங்கு இரத்தம் சிந்த வேண்டாம் என்று  மறவன்புல சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

இனவாதக் கருத்துக்கள்
சாவகச்சேரியில் இறைச்சிக்காக மாடு அறுப்பதனையும், விற்பனை செய்வதனையும் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இது பௌத்த, இந்துக்களின் புனித பூமி. இங்குள்ள பாரம்பரியத்தை மதித்து நடக்க முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று சொன்னதற்கும் தொடர்பில்லை. சாவகச்சேரியில் இறைச்சிக்காக மாடு அறுப்பதனை சாட்டாக வைத்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வந்தேறு குடிகல்ல. இந்த நாட்டின் பரம்பரை குடிகள். சோனகர் என்ற இனமே இஸ்லாம் மதத்தை தழுவி முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், முஸ்லிம்கள் அவர்களின் மார்க்க விழுமியங்களைப் பின்பற்றவும், அதன்படி உணவுகளை உண்பதற்கும் அரசியல் யாப்பில் உரிமை உண்டு. இந்த உரிமையை மீறும் வகையில் கருத்துக்களை மறவன்புல சச்சிதானந்தம் முன் வைத்துள்ளமை ஒரு குற்றச் செயலாகும். ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகைளை மீறும் வகையில் யாரும் கருத்துக்களை முன் வைக்க சட்டத்தில் இடமில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் சிறு குழுவினர்தானே என்று அலட்சியமாக தமிழ், முஸ்லிம் அரசியல் மற்றும் ஏனைய துறைத் தலைவர்கள் இருக்க முடியாது. இதன் பின்னணியை ஆராய வேண்டும். சிவசேன அமைப்பு இந்தியாவில் உள்ள இனவாத அமைப்பாகவுள்ள ஆர்;.எஸ்.எஸ் எனும் அமைப்பின் ஒரு பிரிவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பின் வழிகாட்டுதலின் படியே இலங்கை சிவசேன அமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கை சிவசேன அமைப்புக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உண்டு. சிவசேன அமைப்பின் காரியாலயத்தினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சிவசேன அமைப்பினர் மாட்டிற்காக முஸ்லிம்களை துன்புறுத்தியும், கொலை செய்தும் கொண்டிருக்கின்றார்கள். இந்தியாவில் இறைச்சிக்காக மாடு அறுப்பதனை தடை செய்ய வேண்டுமென்று கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், அத்தகையதொரு சூழலை இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏற்படுத்தவே மறவன்புல சச்சினாதந்தம் போன்றவர்கள் சிந்திக்கின்றார்களா என்று எண்ண வேண்டியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேன போன்ற பௌத்த இனவாத அமைப்புக்கள் ஆரம்பத்தில் சிறிய அளவிலேயே தமது முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இவர்கள் தங்களின் நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகளின் உதவியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மிகவும் மோசமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை கட்டுப்படுத்துவதற்கு முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. இதனால், பெரும் பேரினவாத அரசியல் கட்சிகள் பௌத்த இனவாத அமைப்புக்களின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றன. இன்று பௌத்த இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல. எல்லா சிறுபான்மை மக்களுக்கும் ஆபத்தான அமைப்பாக வளர்ந்துள்ளது.

ஆதலால், வடக்கு, கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் விரோத போக்குகளை முன்னெடுக்கும் போது தமிழ், முஸ்லிம் உறவுகளில் பாரிய இடைவெளி ஏற்படும். ஏற்கனவே 1990ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தமிழ், முஸ்லிம் இனக் குழப்பத்தில் இரு இனங்களும் எந்த இலாபத்தையும் அடைந்து கொள்ளவில்லை. பௌத்த இனவாதமே நன்மைகளை அடைந்து கொண்டன. தற்போது தமிழ், முஸ்லிம் உறவில் நல்ல நிலைமைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் மறவன்புல சச்சிதானந்தத்தின் கருத்துக்கள் மீண்டும் தமிழ், முஸ்லிம் உறவில் வெடிப்பை ஏற்படுத்திவிடும். அத்தகையதொரு வெடிப்பு அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களை தவிர்த்துக் கொள்வதற்கு பேரினவாதிகளுக்கு துணை செய்துவிடும். ஆதலால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூhயில் ஏற்படுத்தப்பட்ட அபாயா பிரச்சினைகளும் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்ட பிரச்சினயாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஆதலால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் மௌனத்தை கலைக்க வேண்டும். அபாயா பிரச்சினைக்கு கருத்துக்களை பதிவு செய்தது போன்று இறைச்சிக்காக மாடு அறுப்பதற்கும் தமிழ் அரசியல்வாதிகள் கருத்துக்களை முன் வைப்பார்களாயின் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும். மேலும், முஸ்லிம்களுக்கு எதிராக முன் வைக்கப்படும் கருத்துக்களுக்கு பௌத்த இனவாதிகள் எண்ணெய் ஊற்றவும் செய்வார்கள்.

பிரச்சினை தேவை
இலங்கையின் அரசியலை எடுத்துக் கொண்டால் இனவாத கருத்துக்களின் ஊடாகவே பயணித்துள்ளமை தெளிவானதாகும். சிங்கள மொழி அரச மொழியாக்கப்பட்டமை, பின்னர் மொழிப் போராட்டம். அரசியல் அதிகாரப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று நடைபெற்ற எல்லா போராட்;டங்களின் பின்னாலும் இனவாதம் இருந்தது.

யுத்தம் நடைபெற்ற போது அதனை முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்கள் எல்லா அரசியல்வாதிகளனாலும் முன் வைக்கப்பட்டன. தேர்தல் காலங்களில் வெறும் இனவாத்தைப் பேசியே வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொருளாதாரம், சமாதானம் போன்று நல்ல விடயங்களை முன் வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசியல்வாதிகளுக்கு கடின பணியாகவே உள்ளது. இதனால், பௌத்த இனவாதம் பேசி அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக இனவாத அமைப்புக்களை அரசியல்வாதிகள் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகையதொரு நிலை வடக்கிலும், கிழக்கிலும் ஏற்படுமாயின் பௌத்த பேரினவாதம் மிக இலகுவாக சிறுபான்மையினரை அடக்கி ஆளும் என்பதனை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களின் பின்னால் கைகட்டி நின்றதனைப் போன்று இனவாத அமைப்புக்களின் பின்னால் கைகட்டி நிற்க வேண்டியேற்படும். இத்தகையதொரு சூழல் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனித பூமி
இலங்கை பௌத்தர்களினதும், இந்துக்களினதும் புனித பூமி என்று மறவன்புல சச்சிதானந்தம் குறிப்பட்டுள்ளார். இந்த பூமியை மாடுகளை அறுத்து இரத்தம் சிந்த வைத்து அசிங்கப்படுத்த வேண்டாமென்றும் அவர் தெரிவித்துள்ளார். மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதனை தடுத்து புனித தன்மையை பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

இறைவனின் படைப்புக்களில் உயர்ந்தது மனிதனாகும். மனிதனின் தேவைக்காவே ஏனையவற்றை இறைவன் படைத்தான். ஒரு நாடு புனித பூமியாக மாற வேண்டுமாயின் அங்கு மனித நேயம் வாழ வேண்டும். ஆனால், இலங்கையில் மனித நேயம் அழிந்து கொண்டிருக்கின்றது. இறுதி யுத்தத்தின் போதும், அதற்கும் முன்னரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் கொல்லப்பட்டனர். இதன் போது சிந்தப்பட்ட இரத்தம் நாட்டின் புனிதத்தை பாதித்துக் கொண்டிருக்கின்றதென்று எந்த சச்சிதானந்தனும் குரல் கொடுக்கவில்லை. அப்போதெல்லாம் தனி ஈழத்திற்கான போராட்;டம் என்றே தமிழ் தலைவர்களும், இந்து அமைப்புக்களும் தெரிவித்துக் கொண்டன. மறு புறத்தில் பயங்கரவாதத்திற்கு எதி;ரான போராட்டம் என்று அரசாங்கமும், பௌத்த இனவாத அமைப்புக்களும் தெரிவித்துக் கொண்டன.

இந்த நாட்டின் நல்ல பெயரை பல நடவடிக்கைகள் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. விபச்சாரம், மதுபானசாலைகளும், கடைகளும், சிறுவர் துஸ்பிரயோகம், கொலை, கொள்ளை என்று பல அநாச்சாரங்களும், தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகள் நாட்டின் புனித தன்மையை கெடுப்பதாக குரல் கொடுக்காது முஸ்லிம்கள் தங்களின் மார்க்கத்தின் படி இறைச்சிக்காக மாடுகளை அறுப்பது மாத்திரம் புனித தன்மையை கெடுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு எதிரான மிகப் பெரிய இனவாத சிந்தனையாகும்.

இலங்கை பௌத்த, இந்துக்களின் புனித பூமி என்றால் இந்த மதங்களில் குறிப்பட்டுள்ளவைகள் அமுலாக்கத்தில் இருக்க வேண்டும். பௌத்த கொள்கைளுக்கும், இந்து மத தத்துவங்களுக்கும் எதிராக பல சம்பவங்கள் பௌத்தம், இந்து என்ற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புத்தர் கூட இறைச்சி சாப்பிட்டுள்ளார். மேலும், இந்து மதமும் உணவுக்காக மாட்டிறைச்சியை பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதித்துள்ளது.

இந்து மதம்
பெண்களின் திருமணங்களின் போது பசுவையும், காளையையும் அறுக்க வேண்டுமென்று ரிக் வேதம் குறிப்பிட்டுள்ளது. இந்திரனுக்கு பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவற்றின் இறைச்சி பிடிக்கும் என்றும் ரிக் வேதம் குறிப்பிட்;டுள்ளது.

இறைச்சிகாக மிருகங்களை மனிதர்கள் கொல்வது பாவமில்லை. உண்பவர்களையும், உணவுகளையும் பிரமனே படைத்தான் என்றும், அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்கு பலியிடும் விலங்காக உருவெடுப்பான் என்றும் மனுஸ்மிருதியில் உள்ளன.

இவ்வாறு மாட்டின் இறைச்சியை மனிதன் உணவாக உட்கொள்வதற்கு இந்து மதம் அனுமதி அளித்தள்ளன. மேலும், இந்து மதத்தினை பூரணமாக பின்பற்றி நடந்த முனிவர்களும் மாட்டிறைச்சியை உண்டுள்ளார்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.

எனவே, இது பௌத்த, இந்துக்களின் புனித பூமி என்றால் இறைச்சிக்காக மாடு அறுக்கப்படுவதனை தடுக்க முடியாது. அத்தோடு ஒரு சில கோயில்களில் மாடுகளும், ஆடுகளும் நூற்றுக் கணக்கில் ஒரு நாளில் பலியிடப்படுகின்றன. அதன்போது சிந்தப்படும் இரத்தம் நாட்டின் புனித தன்மையை கெடுப்பதாக யாரும்  சொல்லவில்லை.

எதிர்ப்புக்கள்
மறவன்புல சச்சிதானந்தம் இறைச்சிக்காக மாடு அறுப்பதனை தடை செய்ய வேண்டும் என்ற போர்வைக்குள் இனவாத கருத்துக்களை முன் வைத்துள்ளமையை பல தமிழர்கள் எதிர்த்துள்ளார்கள். அதனை அவர்கள் இனவாதக் கருத்துக்களாகவே பார்க்கின்றார்கள்.

பெண்ணியல்வாதியும், ஆய்வாளருமான சித்ரலேகா மௌகுரு மாடு உண்ணும் பழக்கம் இந்துக்களிடம் நீண்ட காலத்திற்கு முன்னரே வந்து விட்டது. இது தேவையில்லாத பிரச்சினை. வேண்டுமென்று இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையை ஒரு இந்து பௌத்த நாடாக மறவன்புல சச்சிதானந்தம் வர்ணித்துள்ளமை ஏனைய சிறுபான்மையை இலக்கு வைக்கும் ஒரு நடவடிக்கை. இது இந்திய சிவசேனயின் நடவடிக்கையின் தொடர்ச்சி. நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்க இதனை மறவன்புல சச்சிதானந்தம் தூக்கிப் பிடித்துள்ளமை கண்டிக்கதக்கது என்று தினக்குரல் ஞாயிறு பதிப்பின் ஆசிரியர் ஆர்.பாரதி தெரிவித்துள்ளார்.

பௌத்த, இந்துக்களின் பூமி என்றால், வடக்கில் பௌத்த சிலை வைப்பதனை ஏன் தடுக்கின்றீர்கள்.  முள்ளிவாய்க்காலில் மனிதர்கள் கொல்லபர்பட்ட போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவராசாவும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் விரோத்தை உடனடியாக கைவிட வேண்டும். மாட்டிரைறச்சி ஈழத் தமிழர்களின் உணவு என்று திரைப்பட நடிகரும் கவிஞருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டாலும் தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்பத்தி எழுதும் வரைக்கும் தமது கருத்துக்களை பதிவு செய்யவில்லை.

கட்டுப்படுத்த வேண்டும்
ஆகவே, மறவன்புல சச்சிதானந்தத்தின் கருத்துக்கள் இந்து மதத்தின் அடிப்படையை மீறும் செயலாகும். மேலும் உணவு பழக்கத்தில் காலம் கடந்து கொண்டிருக்கும் போது மனிதன் தனது உணவு தேவையையும், சுவையையும் மாற்றி அமைத்துக் கொண்டு செல்லுகின்றான். நமது முன்னோர்கள் சாப்பிட்ட பல உணவுகளை இன்றைய தலை முறையினர் நிராகரித்துள்ளனர். ஆயினும், மதங்கள் மனிதன் தனது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்குரிய அடிப்படை வழிகாட்டுதல்ளைச் செய்துள்ளன. அவற்றின் படியே பெரும்பாலும் மனிதன் தனது உணவை அமைத்துக் கொண்டிருக்கின்றான்.

மறவன்புல சச்சிதானந்தத்தின் கருத்துக்களின் பின்னால் உள்ள இனவாத சிந்தனைகளையும், அக்கருத்துக்களின் பின்னணியையும் தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் எடுக்க வேண்டும். நாம் விழித்துக் கொள்ளாது போனால் தமிழர்களையும், முஸ்லிம்களையும் நிரந்தர பகையாளிகளாக மாற்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் இனவாதிகள் இத்தகைய கருத்துக்களை பயன்படுத்திக் கொள்வார்கள். வெள்ளம் வரும் முன் அணை கட்ட வேண்டும். இது நம் அனைவரின் மீதும் கடமையாகும்.
Vidivelli 01.06.2018

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here