ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன் - பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை - THE MURASU

Apr 14, 2018

ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் மீதான தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கின்றேன் - பிரதித் தவிசாளர் சுலைமாலெப்பை

பைசல் இஸ்மாயில் -
பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகவியலாள‌ரும், களம் பெஸ்ட் செய்தி இணையத்தளத்தின் பொறுப்பாளருமான  எஸ்.எம். அறூஸ்  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரினால் தாக்கப்பட்டமையை மிக வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும் என்று நிந்தவூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர் தொகுதியின் அமைப்பாளருமான வை.எல்.சுலைமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பீ.எச்.பியசேன, பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமாகிய அப்துல் மஜீட், அக்கரைப்பற்று பிரதேச உறுப்பினர் ரீ.எம்.ஐயுப் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்விமான்கள் பலர் தங்களின் கண்டனத்தை இன்று தெரிவித்துள்ளனர். 

மேற்படி கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதில்,

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு பற்றி ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தொலைபேசி மூலம் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து  நேற்று மதியம் அச்சுறுத்தியுள்ளார். 

அத்துடன்  நேற்று மாலை (11)  நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற அங்கு உரையாடிக் கொண்டிருந்தபோது  அந்த வீட்டுக்கு வருகை தந்த  குறித்த பிரதேச சபை உறுப்பினர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸை எதிர்பாராதவிதமாக தாக்குதலையும் நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம்  மிகவும் கண்டிக்கத்தக்கதும், கவலைக்குரியதுமாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான ஊடகவியலாளர் மீதான தாக்குதல் நடத்துவதும், அச்சுறுத்தப்படுவதும், பழிவாங்கப்படுவதும் ஜனாநாயகத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடுக்கின்ற ஒரு செயற்பாடாகவே பார்க்கின்றோம் என்றார்கள்.

மக்களது  குறைபாடுகளை வெளிக்கொண்டு வந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்காக  உழைத்து வருகின்ற ஊடகவியலாளர்களின் பணிகளை நாம் பாராட்ட வேண்டுமே தவிற, மாறாக அவர்களைத் தாக்குவதும், அச்சுறுத்துவதும், பழிவாங்குவதும் என்பது ஒரு மனித செயற்பாடுகள் அல்ல என்பதை இவ்வான அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும். 

ஊடகவியலார்களினால் வெளியிடப்படுகின்ற செய்திகளை நடுநிலை கொண்டு பார்க்காமல் தமது சுயநல அரசியல் இலாபத்திற்காக தொலைபேசியில் அச்சுறுத்துவதும், வீடு தேடிச் சென்று தாக்குவதும், மறைமுகமாக இருந்துகொண்டு பழிவாங்குவதும் மிக மிக கண்டிக்கத்தக்கதாகும்.

பிரதேச சபைகள்  என்பது அடிமட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற இடமாகும். மக்களினது பிரச்சினைகளையும், சபையின் செயற்பாடுகளையும்  ஊடகவியலாளர்கள் வெளியில் கொண்டு வருகின்றபோதுதான் சிறந்ததொரு மக்களாட்சியை பிரதேச சபைகளில் முன்னடுக்கலாம்.

அவ்வாறான பெறுமதிமிக்க ஊடகவியலாளர்களை தரக்குறைவாக நினைத்து அவர்களை அச்சுறுத்தித் தாக்குவது இழிவான செயலாகும். மக்கள் பிரதிநிதிகள் கௌரவமானவர்கள் அவர்கள் மேசைகளையும், மனிதர்களையும் தாக்க மாட்டார்கள். இவ்வாறானவர்களை சபைகளுக்கு வாக்களித்து அனுப்பிய மக்கள் வெட்கப்பட வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்.

சமூக விடயங்களில் மிகவும் ஆர்வம் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் அறூஸ் அம்பாறை இம்மாவட்டத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளராக இருந்துகொண்டு பக்க சார்பின்றி தனது கடமையை செய்து வருகின்றவராவார். கட்சி வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரினதும் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நேர்மையான ஊடகவியலாளர் அறூஸிக்கு இவ்வாறான சம்பவம் நடந்ததையிட்டு நாங்கள் வெட்கப்படுகின்றோம் என்றும் இந்த விடயத்தில் சகல ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிராக தமது கண்டனத்தை தெரிவிப்பதுடன் உரிய நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here