• Latest News

  Feb 7, 2017

  உண்மை கண்டறியப்பட வேண்டிய சங்கதிகள்

  ஏ.எல்.நிப்றாஸ் -
  ஒரு சம்பவத்துடன் தொடர்புபட்ட சகாக்கள் இருவருள் ஒருவர் 'அப்புறுவலாக' அதாவது அரச தரப்பு சாட்சியாக மாறிவிடுகின்ற நிலைமைகளை நாம் திரைப்படங்களில் மட்டுமல்ல அன்றாட வாழ்க்கையிலும் காண்கின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமும் திரில்லும் இரண்டறக் கலந்தவையாக இருக்கும். முன்னொருபோதும் கேட்டிராத விடயங்கள் பலவற்றை அந்த சாட்சி ஒப்புவிப்பார். அதில் உண்மையானவையும் இருக்கும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கொஞ்சம் சோடிக்கப்பட்டவையும் இருக்கலாம். 

  அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீது அக்கட்சியின் தவிசாளரான பசீர் சேகுதாவூதினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள்,  மேற்சொன்ன விதத்திலான சாட்சியத்தையே ஞாபகப்படுத்துகின்றன. ஆனால், ஒரேயொரு வித்தியாசம், பொதுவாக அப்புறுவலாக மாறுகின்ற சாட்சி 'தான் குற்றவாளி இல்லை, அவர்தான் குற்றவாளி' என்ற நிலைப்பாட்டில் இருப்பார். ஆனால், மு.கா.வின் கதையில் 'தானும் குற்றவாளி அவரும் குற்றமிழைத்திருக்கின்றார்' என்றே தவிசாளர் கூறி வருகின்றார். 

  முக்கிய காலகட்டம்

  இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் மிகவும் முக்கியமான ஒரு அரசியல் ஆளுகைக் காலகட்டத்தில் இப்போது இருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை மேற்கொள்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும், சிறுபான்மை மக்களோடு மென்போக்குடன் நடந்து கொள்ளும் ஒரு ஜனாதிபதியும் பிரதமரும் இப்போது அதிகாரத்தில் இருக்கின்றனர். இன்னுமொரு தடவை இப்படியான ஒரு கூட்டு அமைவதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் செல்லும் எனக் கூறமுடியாது. இப்படியான நிலையிலேயே, அரசாங்கம் பல நிலைமாறுகால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

  இந்த அடிப்படையில், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு, தேர்தல் முறைமையிலான மாற்றம், எல்லை மீள்நிர்ணயத்தால் ஏற்படப்போகும் பாதிப்பு பற்றியெல்லாம் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், முஸ்லிம் அரசியல் பெருவெளியில் சிலிசிலிப்புகள் தென்படுகின்றனவே தவிர பலகாரங்களை காணக்கிடைப்பதில்லை. 

  ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்களே ஓரணியாக திரண்டு நின்று தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் போது அஷ்ரஃப் என்ற குருவிடம் அரசியல் கற்று அவரது மரணத்திற்குப் பிற்பாடு பிரிந்து போயிருக்கும் முஸ்லிம் தலைமைகள் மற்றும் அரசியல்வாதிகளால் மேற்சொன்ன மக்கள் சார்பான எந்த விடயத்திற்காகவும் கூட்டிணைந்து செயற்பட முடியாதிருக்கின்றது என்பதை விடவும் கைசேதம் வேறொன்றும் இருக்க முடியாது. 

  சமூகத்தின் இலக்கின் அடிப்படையில் செயற்படாமல் தத்தமது இலக்குகளை நோக்கியே 99 வீதமான முஸ்லிம் அரசியல்வாதிகள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளுக்கிடையே ஒற்றுமை என்பது மருந்துக்கும் கிடையாது. அதுபோதாது என்று இப்போது உட்கட்சி முரண்பாடுகள் ஒரு பெஷனாக மாறியிருக்கின்றது. பதவிகளையும் அதிகாரங்களையும் அதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மோசடிகளையும் காட்டி ஆளுக்காள் பயமுறுத்துவதும் அறிக்கை விடுவதுமாக மிக மோசமான ஒரு நிலைக்கு முஸ்லிம் அரசியல் வந்திருக்கின்றது. இந்த பார்வைக் கோணத்திலிருந்தே, மு.கா. தலைவர் - தவிசாளருக்கு இடையிலான மிகப் பிந்திய முரண்பாடுகளை நோக்க வேண்டியிருக்கின்றது. 

  உள்ளக முரண்பாடு

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன்அலி மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத்திற்கும் இடையிலான உறவுக்கு கண்பட்டு கனநாளாயிற்று. மு.கா. இதைவிடப் பெரிய பிரளயங்களை எல்லாம் கடந்து வந்திருக்கின்றது. அப்போதெல்லாம் ஹசன்அலியும் பசீரும் ஹக்கீமின் கூடவே இருந்தார்கள். தலைவரின் நடவடிக்கைகளில் சரி கண்டார்கள். கட்சியையும் தலைவரையும் காப்பாற்ற முன்னின்று செயற்பட்டார்கள். ஆனால், இன்று இவர்கள் இரண்டுபேருமே முரண்பட்டு, களமாடுவதற்கு தயாராகி நிற்பது தன்னளவில் மு.கா. தலைவருக்கு புது அனுபவமும் சவாலும் என்பதை மறுப்பதற்கில்லை. 

  ஆனால், இந்தப் பிரச்சினையை எப்போதோ ஹக்கீம் தீர்த்து வைத்திருக்கலாம். சில வேளைகளில் அவர் அதற்கு முயற்சி செய்தாலும் கூட அவரோடு இப்போது நெருக்கமாக இருக்கும் ஓரிருவர் அவரை உசுப்பேற்றி பிழையாக வழிநடாத்தியிருப்பதாக உயர்பீட உறுப்பினர்கள் பேசிக் கொள்கின்றனர். ஹக்கீம் ஒரு நல்ல தலைவராக இருந்தார் என்றும் பின்னர் கட்சிக்குள் வந்து இணைந்து கொண்டவர்கள் அவரை சரியாக வழிப்படுத்தவில்லை என்றும் பிரிந்து சென்ற அரசியல்வாதிகளே கூறக் கேட்டிருக்கின்றேன். அந்த அடிப்படையில், ஹசன்அலி மற்றும் பசீருடன் இணக்கத்திற்கு வருவதற்கான வாய்ப்புக்களை தலைவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

  ஹசன்அலி வகித்துவரும் செயலாளர் நாயகம் என்ற பதவிக்குரிய அதிகாரங்களை குறைத்தமை, அதன் பிறகு தேசியப்பட்டியல் எம்.பி. நியமனங்களில் மேற்கொண்ட குளறுபடிகள,; அதன் தொடராக உருவான குழப்பங்கள் என்பவை இன்றுவரை சீர்செய்யப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில் தலைவர் ஹக்கீம் இறங்கிப்போய் சமரசம் செய்வதற்கு விரும்பினார். அல்லது அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டை வெளிக்காட்டினார். ஆனால் சமரசப் பேச்சுக்களில் வழங்கிய வாக்குறுதியின் படி அவர் செயற்படவில்லை என்பது பரவலாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனமாகும். இதற்கு அவர் பக்கத்தில் சில நியாயங்களும் இருக்கலாம். 

  குறிப்பாக தலைவர் ஹக்கீமும் செயலாளர் நாயகம் ஹசன்அலியும் பல தடவை சந்தித்துப் பேசினார்கள். இருவரும் விட்டுக் கொடுப்புடன் மனம்விட்டுக் கதைத்து ஒரு இடைக்கால இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர். ஆனால், ஹசன்அலிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆரம்பத்தில், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தலைவர் நினைத்திருந்தாலும் ஹசனலியை மீண்டும் அதிகாரமுள்ள பதவியில் இருத்துவதற்கு பயந்து, ஒரு சாணக்கியமான காய்நகர்த்தலை மேற்கொள்வதற்காக இந்த இழுத்தடிப்பை செய்து வருவதாக கட்சி முக்கியஸ்தர்கள் கருதுகின்றனர். 

  உண்மையில், தேசியப்பட்டியல் எம்.பி.யோ அல்லது செயலாளர் நாயகம் பதவிக்கான அதிகாரமோ தனிநபர்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்று தலைவரோ அவரது ஆதரவு தரப்பினரோ நினைக்கக் கூடும். பூனை கண்ணைமூடிக்கொண்டு பாலை குடிப்பது போல் எதை வேண்டும் என்றாலும் செய்துவிட்டுப் போகலாம் என்று யாராவது நினைத்தார்கள் என்றால் அவர்களைப் போல முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உண்மையாகவே அட்டாளைச்சேனை போன்ற ஊர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மக்கள் சாட்சியாக வழங்கப்பட்டதாகும். ஹசன்அலிக்கு எம்.பி. தருவதாக கொடுத்த வாக்குறுதி தேர்தல் ஆணைக்குழு, அரசாங்கம், மக்கள், ஏனைய அரசியல்வாதிகள் பார்த்திருக்க கொடுக்கப்பட்டதாகும். எனவே, இதில் எந்த இடத்தில் பிறழ்வான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அது அரச உயர்மட்டம் வரை எல்லோருக்கும் தெரியவரும் என்பது றவூப் ஹக்கீம் அறியாத விடயமல்ல. 

  ஆயினும் இப்பிரச்சினைக்கு இன்னும் அவர் தீர்வு காணவில்லை. ஹசன்அலி பகிரங்மாக எந்த பாரதூரமான செயற்பாட்டை மேற்கொள்ளவும் இல்லை. அவர் சத்தம்போடாமல் காய்நகர்த்தலை மேற்கொள்வதாக சொல்வதைக் காட்டிலும் அடுத்த பேராளர் மாநாட்டில் தலைவர் எவ்வாறு நடந்து கொள்கின்றார் என்பதை அறிந்து அதன்பின், தனது நகர்வுகளை மேற்கொள்ள காத்திருக்கின்றார் என்று சொல்வதே மிகப் பொருத்தமாக இருக்கும். 

  கண்பட்ட உறவு

  தவிசாளர் பசீர் மு.கா. தலைவருடன் கொண்டிருந்த நெருக்கம் எவ்வாறானது என்பது கட்சியின் ரகசியங்களை அறிந்தோருக்கு தெரியும். தலைமையைக் காப்பாற்றினாலேயே கட்சி பாதுகாக்கப்படும் என்ற நிலையிருந்தபோது, சத்தமின்றி; தந்திரோபாயங்களை மேற்கொண்டு பல சுழிகளில் இருந்து ஹக்கீமை காப்பாற்றியவர் என்று அந்தந்த காலங்களில் பேசப்பட்டார் பசீர். இதை பசீரும் பகிரங்கமாக இப்போது சொல்லியிருக்கின்றார். கட்சியில் உள்ளவர்களுக்கு தெரியாமல் சென்று முழு அமைச்சைப் பெற்றுக் கொண்டது உள்ளடங்கலாக பசீர் மீது பல விமர்சனங்கள் இருந்தன, இருக்கின்றன. ஆனால் இவ்வாறு விமர்சனங்களுக்குள்ளாகிய பல தவறுகளை, தான் தலைவருக்காகவே செய்ததாக அவர் இப்போது கூறுகின்றார். 

  கடந்த பொதுத் தேர்தல் இடம்பெறும் வரைக்கும் பசீர் மட்டு மாவட்டத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.யாக இருந்தார். இவ்வாறு இருந்தவருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபிரதேசத்தில் இருந்து போட்டியிட்ட அலிசாஹிர் மௌலானாவின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக பசீருக்கான அவ்வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கின்றார். ஆனால் அவருக்கு தேசியப்பட்டியல் எம்.பி.யும் வழங்கப்படவில்லை. மாறாக, அவரது ஊரிலிருந்தே முதலமைச்சராகவும் எம்;.பி.யாகவும் இருவர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இது பசீருக்கு கடுமையான ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கக் கூடும். 

  இந்நிலையில், அவர் பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். செயலாளர் நாயகம் பதவியில் மேற்கொள்ளப்பட்ட அதிகார மாற்றங்கள் உள்ளடங்கலாக கட்சிக்குள் நடந்தேறிய தவறுகளை சரிசெய்து கட்சியை தூய்மைப்படுத்தப் போவதாக பசீர் அறிவித்திருந்தார். எனவே, அவர் கட்சித் தலைமை பற்றிய அந்தரங்கங்களை பகிரங்கப்படுத்தியே இதைச் சாதிப்பார் என்று பலரும் அப்போது எதி;ர்பார்த்தனர். ஆனபோதும், 'யாருடைய தனிப்பட்ட அந்தரங்கங்களையும் வெளியிட வேண்டிய தேவை தனக்கு இல்லை' என்று பசீர் பொதுவெளியில் சொன்னார். 

  அதன்பிறகு ஹக்கீமுக்கும் ஹசன்அலிக்கும் இடையிலான பனிப்போர் மூண்டிருந்த காலத்தில் பசீரின் நடவடிக்கைகள் ஓய்ந்திருந்தன. அவர் அடக்கப்பட்டுவிட்டார் என்று பேசுமளவுக்கு ஒரு மர்ம அமைதி நிலவியது. ஆனால், அவரது மௌனம் ஆபத்தானது என்றும், அந்தரங்கங்களை வெளியிடுவதற்கான கட்டுப்பாட்டை அவரே உடைத்தெறிவார் என்றும் நாம் எழுதியிருந்தோம். அதுவே இன்று நடந்து கொண்டிருக்கின்றது. 

  சர்ச்சைக்குரிய நூல் 

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' என்ற ஒரு நூல் வெளியாகியிருந்தது. மு.கா.வின் தலைமையக கட்டிடத் தொகுதி மற்றும் அதனோடிணைந்த சொத்துக்களில் மோசடி இடம்பெற்றதாக இந்த நூல் பிரஸ்தாபித்திருக்கின்றது. இந்த நூலின் பிரதான நோக்கம் தலைமையை சிக்கலுக்குள் மாட்டுவதா அல்லது கட்சிச் சொத்தை காப்பாற்றுவதா என்பது விடை கண்டறியப்பட வேண்டிய கேள்வியே. எவ்வாறிருப்பினும் இந்த நூலில் உள்ளடங்கியுள்ள ஆவணங்கள் கட்சியின் உள்ளிருந்தே சென்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலாவதாக தவிசாளர் பசீரை நோக்கியே சுட்டுவிரல் நீண்டதை காணக்கூடியதாக இருந்தது. 

  ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர் இந்த நூல் வெளியீட்டுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறினார். ஆனால் அதிலுள்ள விடயங்களைப் பார்த்தால் அதிகமானவை சரிபோல் இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். கட்சியின் அடுத்த முக்கியஸ்தரான ஹசன்அலி இந்த நூலில் உள்ள குற்றச்சாட்டுக்கள் சரி என்றோ பிழை என்றோ இதுவரையும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. 

  இது இவ்வாறிருக்க, நிந்தவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மு.கா. தலைவர் இந்த நூல் பற்றி தொட்டுப் பேசியிருக்கின்றார். 'அநாமேதயமாக வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் குறித்து நான் அலட்டிக் கொள்ளவில்லை' என்று அவர் கூறியுள்ளார். 'முழுக்க முழுக்க பொய் புரட்டுக்களை போட்டு நம்ப வைக்கின்ற மாதிரி எழுதியிருக்கின்றார்கள்' என்று கூறியுள்ள தலைவர் அதே உரையில் வேறு ஒரு இடத்தில் 'அதில் கொஞ்சம் அங்க இங்க சில விஷயங்கள் உண்மையானவை. அதை யாரும் மறுக்கவில்லை. அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்' என்றும் கூறியிருக்கின்றார். 

  இதேவேளை, சில மாதங்களுக்கு முன் இதே விடயங்கள் தொடர்பாக கட்சியின் தலைவருக்கு தவிசாளர் பசீர் கேள்விகளை கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு உரிய பதில் பகிரங்கமாக வழங்கப்படவில்லை என்பதோடு பசீர் உயர்பீடத்தில் பேச முடியாமலும் ஆக்கப்பட்டார். இத்தனைக்கும் பிறகுதான் இது நூல் உருப் பெற்றிருக்கின்றது என்பது நினைவு கொள்ளத்தக்கது. இந்த நூலில் தலைவர் சொல்வது போல் நிறைய புரட்டுக்களும் போலிகளும் இருக்கலாம் சில உண்மைகளும் ஆங்காங்கே இருக்கலாம். அதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை மு.கா. தலைலருக்கு உள்ளது. அதை அவர் அலட்டிக் கொள்ளாமல் விட முடியாது. 

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது மக்களின் சொத்து. எனவே அதன் கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இந்த நூல் பொய்யாக இருந்தாலும் இதைப் பார்க்கின்ற மக்கள் 'ஏதோ நடந்திருக்கின்றது போல் தெரிகின்றது' என்ற எண்ணத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தலைவர் உண்மை எதுவெனச் சொல்ல வேண்டும். இதில் கொஞ்சம் உண்மையிருக்கின்றது என்று ஹக்கீமே சொல்லியிருக்கின்றார். அது எதுவென அவர் சொல்ல வேண்டும். பொய்யும் புரட்டும் நிறைய இருக்கின்றது என்று சொல்லியுள்ளார். அவையும் எவை என சொல்லி, வெளியிட்டவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். அவர்களது மர்ம நோக்கங்களை அம்பலப்படுத்த வேண்டும். அதைவிடுத்துவிட்டு, பாராமுகமாக இருந்தால், மக்கள்தான் குழம்பிப் போவார்கள். ஆட்சியாளர்களிடையே கட்சிக்கு இருக்கின்ற நல்லபிப்பிராயமும் குறைந்துபோக வாய்ப்பிருக்கின்றது. 

  வலுவடையும் முரண்

  இது இவ்வாறிருக்க தலைவருக்கும் தவிசாளருக்கும் இடையிலான முரண்பாடுகள் வலுவடைந்து செல்கின்றன. செயலாளருடனான உறவிலும் நல்ல சகுணங்கள் தென்படவில்லை. இந்நிலையில், அடுத்துவரும் பேராளர் மாநாட்டின் மூலம் ஹசன்அலிக்கும் பசீருக்கும் பாடம்புகட்ட தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அவரது ஆதரவு தரப்பினர் கூறிவருகின்றனர். செயலாளர் நாயகம், தவிசாளர் பதவிகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இரண்டுபேருக்கும் ஆப்பு அடித்து ஓரங்கட்டுவதற்கு திட்டங்கள் வகுக்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

  மறுபுறத்திலும், தலைவருக்கு எதிரான காய்நகர்த்தல்களை மேற்கொள்வது பற்றியும் ஓரிரு சந்திப்புக்கள் இடம்பெறுவதாக சொல்லப்படுகின்றது. தமக்கு சாதகமான களநிலவரங்கள் பற்றி முன்ஆய்வு செய்வதற்காக தலைவரால் நேற்று சனிக்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யபட்டிருந்த உயர்பீடக் கூட்டத்திற்குப் பிறகு, அவரது நகர்வுகளிலும் எதிர்த்தரப்பின் நகர்வுகளிலும் மாறுதல்கள் வரலாம். 

  இதேவேளை, கட்சி என்ற ஒரு எல்லைக்குள் நின்றே பசீரை தலைவர் தாக்கினாலும், பசீர் கட்சிக்குள் இருந்தும் மக்கள் மன்றத்தில் இருந்தும் தாக்குவதற்கு தலைப்பட்டிருப்பதை காணமுடிகின்றது. அந்தரங்கங்களை சொல்வதில்லை என்ற சுயகட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு, தலைவர் பற்றிய சில இரகசியங்களை அண்மைய தொலைக்காட்சி நேர்காணலில் சாடைமாடையாக கூறிவிட்டுச் சென்றிருக்கின்றார். அதன்பிறகு தன்னிடமுள்ள ஆவணங்கள் பற்றிய ட்ரைலரையும் நவீன ஊடகங்களில் வெளியிட்டிருக்கின்றார். 

  இவையெல்லாம் ஒரு தேசிய ஊடகத்தில் எழுதும் தரமன்று. அப்படியென்றால், இந்த விடயங்கள் வெளியில் வந்தால் அவை எந்தளவுக்கு தாக்கம் செலுத்தும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஹக்கீம் மீது கறை பூசப்படும் போது அது கட்சிக்கே இழுக்காக அமையும் வாய்ப்பும் அதனூடாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏளனமாகப் பார்க்கப்படும் நிலைமையும் உருவாகும் என்பதை ஹக்கீமும் உணர வேண்டும், பசீர் போன்றவர்களும் சிந்திக்க வேண்டும். 

  அவரும் புனிதரல்ல 

  இதிலிருக்கின்ற முக்கிய சவால் என்னவென்றால், பசீர் தன்னை சுத்தவாளி என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை என்பதுதான். ஹக்கீமைக் காப்பாற்றுவதற்காக நான் கடுமையான பிழைகளை செய்திருக்கின்றேன் என்று சொல்லும் அவர் அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ள தயார் என்றும் அறிவித்திருக்கின்றார். இந்த சவாலை எதிர்கொள்ள எப்படியான சிக்கலுக்கு முகம் கொடுக்கவும் தயாராகிவிட்டேன் என்றும் அவர் சொல்லியுள்ளார். எனவே இந்த விடயத்தை மிக லாவகமாகவே கையாள வேண்டியுள்ளது. 

  இரகசியங்களும் அந்தரங்கங்களும் யாரிடம்தான் இல்லை. பசீர் ஒன்றும் புனிதர் அல்லர். கடந்த காலங்களில் கட்சிக்குள்ளும் வெளியிலும் விமர்சிக்கப்பட்ட பல காரியங்களைச் செய்தவர்;;. எனவே அவர் பற்றிய ரகசியங்களும் தலைவர் ஹக்கீமிடம் இருக்கலாம். அதுபோல ஹசன்அலி பற்றியும் சில கதைகளை தலைவர் வெளியில் விடலாம். ஆனால், எல்லோரும் சேர்ந்து தவறை செய்துவிட்டு ஆளுக்காள் அந்தரங்கங்களை சொல்லி அசிங்கப்படுவதற்காகவா இந்த முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது என்று சிந்திக்க வேண்டும். 

  எனவே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கட்சிக்குள் நடந்ததாக கூறப்படுகின்ற மோசடிகள், அதிகார அத்துமீறல்கள் பற்றி உடன் கவனம் செலுத்த வேண்டும். குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீன குழுவொன்றை நியமித்து மக்களுக்கு எது உண்மை, எது பொய்புரட்டு என தெளிவுபடுத்த வேண்டும். குற்றமிழைத்தோருக்கு மக்கள் மன்றத்தில் தண்டனை வழங்குவதன் மூலம் இந்த கட்சியை சீரமைக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும். 

  இல்லாவிட்டால், மக்கள் எல்லோருக்கும் உங்கள் அனைவருக்கும் எதிரான 'சாட்சிகளாக' மாறி விடுவார்கள். 

  - (வீரகேசரி 05.02.2017)

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: உண்மை கண்டறியப்பட வேண்டிய சங்கதிகள் Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top