அதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட் - THE MURASU

May 29, 2016

அதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்

BBC-
கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு " தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு" என்று கண்டனம் செய்திருக்கிறார்
முதல்வர் நசீர் அஹ்மட் மே 20ம் தேதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்யாலயா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவருக்கும் கடற்படை அதிகாரி ஒருவருக்கும் ஏற்பட்ட வாய்ச்சண்டையை அடுத்து அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை இனி முப்படைகளும் புறக்கணிப்பார்கள் என்று கடற்படை அதிகாரிகள் கூறினர்.
இந்த சர்ச்சையை அடுத்து இரு தரப்புகளையும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க விளக்கம் கோரியிருந்தார்.
இதனிடையே, நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க ஆகிய இருவருக்கும் எழுதிய கடிதம் ஒன்றில், முதல்வர் நசீர் அஹ்மட், இந்த சம்பவத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த தனது பெயரையும், மாகாண கல்வி அமைச்சர் பெயரையும், நிகழ்ச்சி தொகுப்பாளர் படிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இருந்தாலும், இந்தத் தவறை கவனித்த மாகாண ஆளுநர், தன்னை மேடைக்கு வருமாறு சைகை செய்ததாகவும், அதையடுத்து, தான் மேடையில் ஏற முயன்றபோது, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட கடற்படை அதிகாரி ஒருவர் தன்னை மேடையில் ஏறவிடாமல் தடுத்ததாகவும் குறிப்பிட்டார் நசீர் அஹ்மட்.
'அதிகாரி மன்னிப்புக் கேட்கவேண்டும்'
இந்த அதிகாரியின் நடத்தை மிகவும் மோசமானதாக இருந்ததாக வர்ணித்த முதல்வர், இது தன்னை அதிர்ச்சியுற வைத்ததாகவும், இந்தச் செய்கையை தான் கண்டித்ததாகவும் கூறினார். இந்த அதிகாரிகள் முறையான அதிகாரபூர்வ வழிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடாததற்கு, அவர் ஆளுநர் மீதும் பழி சுமத்தினார்.
தான் அமெரிக்க தூதர் மற்றும் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன்னர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகவும் நசீர் அஹ்மட் கூறினார்.
ஜனாதிபதியும் , பிரதமரும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் முன்னரே, முப்படைகள் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்திருப்பது, தவறிழைத்த தங்கள் அதிகாரிகளை பாதுகாக்கும் குறுகிய நோக்கிலேயே எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது கடுமையான , ஆனால் நியாயமான நடவடிக்கைக்காக தான், விழாவில் கூடியிருந்த வெளிநாட்டுத் தூதர், பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் சம்பந்தபட்ட கடற்படை அதிகாரியிடம் மன்னிப்பு கோர தயங்க மாட்டேன் என்றும் கூறிய முதல்வர், இந்த விஷயத்தில் மேலும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமே விட்டுவிடுவதாகக் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here