• Latest News

  Aug 29, 2015

  விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை போல்….! மீண்டும் பழைய பல்லவி தான்…!

  விட்டுக்கொடுப்புக்களும், சகிப்புத் தன்மையும் இருந்திருக்குமாயின், இலங்கை திருநாடு இவ்வளவு அழிவுகளையும், சிதைவுகளையும் சந்திருக்காது என்பது உண்மை. ஆனால் நமது நாட்டில் துரதிஷ்டவசமாக விட்டுக்கொடுப்புக்கு ஏற்பட்ட பஞ்சம் பல உயிர்களை பலியெடுக்க காரணமாயிற்று.
  இவ்விதம் கூறும் பொழுது யாரேனும் கேட்கலாம் யாரிடமிருந்து விட்டுக்கொடுப்புக்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்று.
  விட்டுக்கொடுப்புக்கள் முக்கியமாக இருப்பவர்களிடம் இருந்தே அதிகம் ஏற்பட வேண்டும்.
  ஏனெனில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு விட்டுக்கொடுப்பது நியதியாகின்றது. அதற்காக இல்லாதவர்களிடம் விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் தேவையில்லையா என்று நீங்கள் கேட்கலாம்.
  இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் பொழுது இல்லாதவர்களும் அவற்றுக்கு இயைந்து சில, பல விட்டுக்கொடுப்புக்களுக்கும் சகிப்புத் தன்மைக்குள்ளும் உடன்பட்டுச் செல்வர்.
  இது இலங்கையின் பெரும்பான்மை சமூகமாகிய சிங்கள பௌத்த இனத்தவர்களிடம் அறவே இல்லையென்று கூறலாம்.
  இலங்கையின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மூல காரணமே இந்த சகிப்புத் தன்மையற்ற, விட்டுக்கொடுப்பில்லாத போக்கென்றால் அது மிகையல்ல.
  பௌத்தத்தையும், புத்தரின் தர்ம போதனைகளையும் பின்பற்றும் இனம் இவ்விதம் தம் பிற மொழி பேசுகின்ற, பிற மத, கலாச்சார, பண்பாட்டைக்கொண்டுள்ள, நமது நாட்டில் வாழ்கின்ற உயிர்களிடத்தில் சாதாரண அன்பைக் கூட காட்ட மறுத்ததன் விளைவு தான் இன, மத, பேதம் பார்க்காமல் அழிவுகளை சந்தித்திக்க நேர்ந்தது.
  புத்தம், சரணம், கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, என்று பெளத்தத்தின் தர்மத்தை சிந்தையில் நித்தம் நினைவில் வைத்திருப்பவர்கள் அடிப்படை இனவாத சிந்தனையில் மூழ்கியிருப்பதானது இலங்கை தேச மக்கள் இன்னமும் பக்குவம் அடையவில்லையா என்று சிந்திக்க தூண்டுகின்றது.
  தெற்கிலும், மேற்கிலும், நாம் சிங்களம் பேசுகின்றோம், வடக்கிலும், கிழக்கிலும், மத்தியிலும் அவர்கள் தமிழ் பேசுகின்றார்கள். நாங்கள் பௌத்தத்தை பின்பற்றுகின்றோம். அவர்கள், இந்துவையும், இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் பின்பற்றுகின்றார்கள்.
  இதுவே நமக்கிடையிலான வேறுபாடாற்றி, நாமும் அவர்களும் ஒன்றென்று அவர்கள் நினைத்திருப்பார்களாயின் இன்று நாம் இணைபிரியாத இலங்கையர்களாக இருந்திருப்போம்.
  மாறாக நீங்கள் வேறு, நாங்கள் வேறு என்று அன்றிலிருந்து இன்றுவரை பிரித்துப் பிரித்து, தரமாட்டோம், விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று இருந்தது பெரும்பான்மை தரப்பு.
  தராததை பறித்தெடுப்போம் என்று புறப்பட்டது தான் தமிழ் இளைஞர் படை. ஆனால் அது கூட ஒரு வகையான சமரச விட்டுக்கொடுப்புக்குள் வராத இலங்கை தேசம் அந்த படையையும் இரும்புக்கரம் கொண்டு, உலக வல்லரசுகளின் துணை கொண்டு அழித்தொழித்தது.
  ஆனால் இப்பொழுது இலங்கையின் நல்லாட்சி என்று பலராலும், போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்க கூடிய ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்று அனைத்திலும் நல்லாட்சிக் கோசங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
  மாற்றம், மாற்றம் என்று அதுவும் நிகழ்ந்தாயிற்று. அந்த மாற்றத்தின் பின்னர் பிரதமர் ரணிலின் அறிவிப்பு இன்னொரு மாற்றத்தைக் காட்டி நிற்கின்றது. அதாவது தேசிய அரசாங்கம்.
  அந்த தேசிய அரசாங்கத்தில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்று அத்தனை பேரும் கூட்டாகி, எல்லோருமே ஒரு குடையின் கீழ் ஆட்சிக்கு தயாராகி வருகின்றார்கள்.
  தங்களுக்குள்ளேயே பல விட்டுக்கொடுப்புக்களையும், சமரசங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஊழல் விசாரணைகள், வெளிநாட்டுக்குப் போவதற்கான தடை எல்லாம் திடீர் திடீரென நீங்குகின்றன.
  எனக்கென்றால் நீ வருவாய். உனக்கென்றால் நான் வருவேன். நமக்கென்றால் நாம் சேர்ந்திருப்போம் என்று தமது பாணியில் சிங்களம் இப்பொழுது தமிழர் தரப்பிற்கு பதில் சொல்வது போலவே தோன்றுகின்றது.
  இலங்கையின் நிகழ்கால அரசியலை தேர்தல் களத்திற்குப் பின்னர் சற்று ஆழமாக நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.
  நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று தேசியத்தின் உரிமையை கோரி நிற்கின்றது.
  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது ஆயிரம் விமர்சனங்களை பலர் முன்வைத்திருக்கலாம். ஆனால் தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற தமிழ்க் கட்சியாக திகழ்வது கூட்டமைப்பே.
  நிற்க, பதவியேற்ற ரணில் தேசிய அரசாங்கத்தை அறிவித்த மறுகணமே, இலங்கையின் நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே அறிவித்திருக்க வேண்டும்.
  ஆனால் நல்ல மனிதராக சித்தரிக்கப்படும் ஜனாதிபதி சுதந்திரக் கட்சிக்கே எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்கின்றார். அதன் முயற்சியாக சுதந்திரக் கட்சிக்குள் யாரை எதிர்க் கட்சித் தலைவராக தேர்வு செய்யலாம் என்று விவாதங்கள் வேறு நிகழ்த்தப்படுகின்றது.
  இந் நிலைமைகளை நோக்குமிடத்து, இலங்கை ஆட்சியாளர்கள் இன்னமும் விட்டுக்கொடுப்புடன் கூடிய சகிப்புத் தன்மையை அடையவில்லை. அவர்கள் தமது பழைய சிந்தனையின் பால் தான் செயற்படுகின்றார்கள் என்பதைப் புடம் போட்டுக் காட்டுகின்றது.
  இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்குமாயின், நாட்டில் ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய இன்னொரு கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

  அதற்கு தகுதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விளங்குகின்றது. இதை மக்கள் விடுதலை முன்னணியும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

  ஆனால் இந்நாட்டின் இந்நாள் ஜனாதிபதி உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எதிர்க் கட்சியாக இருத்துவதற்கு இடம் கொடுப்பதாக தெரியவில்லை. 

  இந்நிலையில் எங்ஙனம் தமிழ் மக்களுக்கான முழுமையான அதிகாரங்களை இவர்கள் வழங்குவார்கள் என்று புளங்காகிதம் கொள்ள முடியும்.
  ஆக, சகலதும் நாமே. சர்வமும் நாமே என்பதைப் போல நடக்கின்றார்கள் ஆட்சியாளர்கள். இது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை. 

  எதற்கும் சர்வமும் நாமே என்று நினைத்ததன் விளைவே சர்வமும் நாசம் என்கின்ற அழிவை இலங்கை சந்தித்தது என்பதை நமது ஆட்சியாளர்கள் சற்று சிந்தித்தாக வேண்டும். இல்லையேல் நாடு மீண்டும் இருளை நோக்கி நகரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

  எதுவாயினும் இலங்கை தேசம் நிலையான அமைதியை சந்திக்க வேண்டுமாயின் சகிப்புத் தன்மையும், விட்டுக்கொடுப்புக்களையும், இன்றை ஆட்சியாளர்கள் பின்பற்றியாக வேண்டும். 

  இதை செய்யத் தவறுவார்களாயின், மீண்டுமொரு அழிவுக்கு அடுத்த சந்ததியினரை தயார்ப்படுத்துகின்றோம் என்பதே உண்மை. சிந்தித்து செயலாற்றுங்கள். சொல்லும் செயலும், எதிர்காலத்தை நினைத்து நடக்குமாயின் நிகழ்காலம் சரியான திட்டமிடலோடு ஆரம்பிக்கப்படும்.
  எஸ்.பி.தாஸ்
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை போல்….! மீண்டும் பழைய பல்லவி தான்…! Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top