கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஜெமீல்? - THE MURASU

Jun 28, 2015

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஜெமீல்?

எம்.வை.அமீர்
பாராளமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தேர்தலில் அவர்கள் சார்ந்த வேட்பாளர்களை தெரிவுசெய்து வருகின்றன. சில பிரதேசங்களில் கட்சிகள் சார்பாக போட்டியிட பலத்த போட்டி நிலையும் காணப்படுகின்றது.
 
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பலமுனைப்போட்டி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி சுயாதினக் குழுக்கள் என பலகட்சிகள் தங்களது வேட்பாளர்களை தெரிவு செய்தும் சிலகட்சிகள் வேட்பாளர்களை தேடியும் வருகின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அம்பாறை மாவட்டம் சவாலாக அமையும் என்று கூறப்பட்டாலும் சில பிரதேசங்களில் ஏற்படும் சரிவுகள் ஏனைய பிரதேசங்களால் நிவர்த்திக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரசுக்குள்ளும் சில பிரதேசங்களில் வேட்பாளர்களாக களமிறங்கக பலர் முயற்ச்சிக்கின்ற போதிலும் அக்கட்சி கல்முனை,சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகளை மையப்படுத்தி சக்திவாய்ந்த வேட்பாளர்களை நிறுத்தும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடுமா? அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா? என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளன.
இவர்கள் தனித்துப் போட்டியிட்டால் வேட்பாளர்கள் தொடர்பில் பொத்துவில் தொகுதியில் ஏற்படப்போகும் போட்டி நிலையை சமாளித்துக்கொள்ள முடியும் என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் வேட்பாளர்களை நியமிப்பதில் சிக்கல் நிலையும் ஏற்படலாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுவதால் முஸ்லிம் காங்கிரஸ் தங்களை நியமிக்க வில்லை என்ற ஒருசிலரின் அதிர்ப்திகளையும் சம்பாதிக்க வேண்டி வரலாம்.

சம்மாந்துறை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிட கிழக்குமாகாண சுகாதார அமைச்சராக இருக்கும் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி முஸ்தபா போன்றோரின் பெயர்கள் பெரிதாகப் பேசப்படும் இவ்வேளையில் சுகாதார அமைச்சர் மன்சூரது ஆதரவாளர்கள் தேர்தல் ஆரம்பகட்ட பணிகளில் ஏற்கனவே இறங்கிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

சம்மாந்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி மன்சூர் களமிறங்கினால் அவரது வெற்றிடத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கபடுவதுடன் மன்சூர் வகிக்கும் சுகாதார அமைச்சுப்பதவி சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.ஜெமீலுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. தேர்தலில் போட்டியிட ஐ.எல்.எம்.மாஹிரும் விரும்புவதாக கூறப்பட்டாலும் மாகாணசபை உறுப்புரிமையை வழங்கி அவரை திருப்தியடைய வைத்தாலும் சிரேஷ்ட சட்டத்தரணி முஸ்தபா அதிருப்தியடையக் கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.

முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசுக்கு அமைச்சுப்பதவி வழங்கவில்லை என்ற குறை பேசப்படுகின்ற போதிலும் நடக்கவிருக்கின்ற தேர்தலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஹரீசிக்கே வாய்ப்பை வழங்குவது திண்ணம்.

கிழக்கு மாகாணசபையில் சிரேஷ்டமாணவரான ஏ.எம்.ஜெமீலுக்கு குறைந்தது அமைச்சுப்பதவிகளில் ஒன்றையாவது வழங்கவில்லையே என்ற சாய்ந்தமருது மகளின் கேள்விக்கு இப்போது அமைச்சர் ஹக்கீம் ஒத்தடம் கொடுப்பார் என அக்கட்சியின் அநேகர் பேசுகின்றனர்.

ஜெமீலுக்கு அமைச்சுப்பதவியை வழங்குவதன் ஊடாக சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள சிறிய சரிவை நிவர்த்திக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. தலைவர் றவூப் ஹக்கீமுக்கு தலையிடியை ஏற்படுத்தும் சில பிரச்சினைகளுக்கு இத்தேர்தல் பரிகாரத்தை வழங்குமா? அல்லது இன்னும் தலையிடியை கூட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here