• Latest News

  Jan 3, 2014

  கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டது: முதல்வர் நிஸாம் காரியப்பர்

  எம்.வை.அமீர், அஸ்லம் எஸ்.மௌலானா;
  கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என மாநகர முதல்வர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

  கல்முனை மாநகர சபையின் வரவுசெலவுத் திட்டத்தை சபை அமர்வில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

  'எனக்குக் கிடைத்துள்ள  மேயர் பதவி அமானிதமாகவே தரப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே மாநகர சபையின் சகல திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒரு மேயராக பொறுப்பேற்றுள்ள எனக்கு ஒரு சாராருக்காகவோ சில பிரதேசங்களுக்காகவோ ஒரு இனத்தவருக்காகவோ எந்தவொரு பாகுபாடுமின்றி செயற்பட வேண்டிய கடமையும் தார்மீகப் பொறுப்பும் உள்ளது.

  எக்காரணம் கொண்டும் எந்த உறுப்பினருக்கோ எப்பிரதேச மக்களுக்கோ விசேட சலுகைகளோ பாகுபாடுகளோ காட்டப்பட மாட்டாதென்ற உத்தரவாதத்தையும் உறுதி மொழியையும் இச்சந்தர்ப்பத்தில் தர விரும்புகின்றேன்.

  ஏனெனில் குர்ஆன் ஹதீஸில் உருவாக்கப்பட்ட கட்சியின் கொள்கைகளின் படி ஏனைய சகல தரப்பினருக்கும் நிதிகளை சமமாக பங்கிடும் ஒரு நீதியான ஆட்சி கல்முனை மாநகர சபையில் நடக்கிறது எனப் பேசுமளவுக்கு எமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதன் மூலமே நாம் முன்னுதாரணமாக நடக்கின்றோமென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

  தலைவர் மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கும் பொழுது கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சி வர வேண்டும். அந்த ஆட்சி நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும் ஓர் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்.

  அந்த வகையில் சகலரதும் ஒத்துழைப்புடன் இந்த வரவுசெலவுத்திட்டம் நிறைவேற வழிவகுத்து தந்துள்ள எமது கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கும் மக்கள் சார்பிலும் என் சார்பிலும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி பகர்கின்றேன்.

  ஏனெனில் இன்று நாட்டில் மட்டுமல்ல சர்வதேச நாடுகளிலும் கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் எப்படி அமையப் போகின்றது என்பது பற்றி கவனம் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பாராளுமன்ற வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கூட இது போன்ற ஆர்வம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

  அந்த வகையில் உண்மையிலேயே நான் பெருமைப்படுகின்றேன். கல்முனை மாநகர சபையின் வரவு  செலவுத்திட்டம் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் பின்னணியில் தான் நான் வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.

  எமது கல்முனை மாநகர சபையின் கொள்கை, குறிக்கோள் நோக்கங்கள் மற்றும் 2014ஆம் ஆண்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான திட்டங்களை உள்ளடக்கி இந்த வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது.

  மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 171 தொடக்கம் 179 வரையான பிரிவுகள் மூலம் மாநகர சபை முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையிலேயே இந்த வரவு செலவுத் திட்டத்தை சபையின் அங்கீகாரத்திற்கமையச் சமர்ப்பித்துள்ளேன்.

  இந்த வகையில் எமது கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் 2014ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றத்தையும் கண்காணிப்பு செய்வதற்கான வினைத்திறன் மிக்க நிதிமுகாமைத்துவ ஆவணமாக இந்த வரவு செலவுத் திட்டம் பயன்படும்

  அதேவேளை கடந்த இருவருட ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் எந்தவொரு அபிவிருத்தி வேலைத் திட்டமும் முடக்கப்பட மாட்டாது என்கின்ற உத்தரவாதத்தை தருவதோடு இதுபற்றி எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

  அதேவேளை இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து பிரதேசங்களுக்கு பெயர் சொல்லக் கூடிய முக்கிய சில அபிவிருத்தித் திட்டங்களை உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் இனம் கண்டு மேற்கொள்வதற்கு முன்மொழிகின்றேன்' என்று குறிப்பிட்டார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Post a Comment

  Item Reviewed: கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டது: முதல்வர் நிஸாம் காரியப்பர் Rating: 5 Reviewed By: The Murasu
  Scroll to Top